Published : 13 Dec 2017 09:59 AM
Last Updated : 13 Dec 2017 09:59 AM

மூன்றாம் பாலினத்தவர் சட்ட முன்வரைவு: மறுபரிசீலனை அவசியம்!

டி

சம்பர் 15-ல் தொடங்கவிருக்கும் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அது தொடர்பான மத்திய அரசின் சட்ட முன்வரைவு குறித்து அதிருப்திக் குரல்கள் எழுந்திருக்கின்றன. சட்ட முன்வரைவு குறித்த நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையைக் கண்டுகொள்ளாமல் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முயற்சிக்கிறதா எனும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

2014-ல் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் தொடுத்த வழக்கில் மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை அங்கீகரிக்கும் வகையிலும் பாதுகாக்கும் வகையிலும் சட்டம் இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சட்டத்தின்படி வழங்கப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் மூன்றாம் பாலினத்தவருக்கும் உண்டு என்று உறுதிசெய்தது அந்தத் தீர்ப்பு. அவர்கள் சுயமாக முடிவெடுக்கவும், தங்களது கருத்துகளை வெளியிடவும் சமூக வாழ்க்கையில் பங்கெடுக்கவும் முழு உரிமை உண்டு என்றும் கூறியது.

2014-ல் மூன்றாம் பாலினத்தவர் உரிமைகளுக்கான தனிநபர் சட்ட முன்வரைவு ஒன்றை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா முன்மொழிந்தார். இதைத் தொடர்ந்து மத்திய அரசே மக்களவையில் தனது சட்ட முன்வரைவை அறிமுகப்படுத்தி, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் பற்றிய நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அதை அனுப்பிவைத்தது. அதைப் பரிசீலித்த நிலைக்குழு, 2017 ஜூலையில் அளித்த அறிக்கையில் சட்ட முன்வரைவில் சில திருத்தங்களையும் சேர்க்கைகளையும் பரிந்துரைசெய்திருந்தது. குறிப்பாக, சட்ட முன்வரைவில் இடம்பெற்றிருக்கும் மூன்றாம் பாலினத்தவர் பற்றிய வரையறையானது, அவர்கள் தங்களது பாலினத்தைக் குறித்து சுயமாக முடிவு செய்துகொள்ளும் உரிமையை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது என்றும் உலகளாவிய அளவில் பின்பற்றப்படும் விதிகளின்படியே அது அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. மூன்றாம் பாலினத்தவருக்கு உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களின் பொருந்தும் தன்மை குறித்து எந்தக் குறிப்புமே சட்ட முன்வரைவில் இல்லை என்பதைச் சமூகச் செயல்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

சமூக நல்லெண்ணத்தில் உருவாக்கப்படும் சட்டங்கள் இரக்கம் காட்டினால் மட்டும் போதாது. விளிம்பு நிலையில் உள்ளவர்களும் மற்றவர்களைப் போல சுதந்திரத்தையும் மதிப்பையும் அனுபவிக்கச் செய்ய வேண்டும். நிபுணர்களின் கருத்துகளையும் நாடாளுமன்ற நிலைக்குழுவின் கருத்துகளையும் அரசு கண்டுகொள்ளாமல் தவிர்ப்பது தவறானது. சிறந்த வகையில் ஒரு சட்டத்தை இயற்ற வேண்டும் என்றால், மாறுபட்ட கருத்துகளையும் ஏற்றுக்கொள்கிற அணுகுமுறையை அரசு பின்பற்ற வேண்டும். மூன்றாம் பாலினத்தவர்கள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்ட முன்வரைவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். நிலைக்குழுவின் அறிக்கையிலும் 2014-ல் நிபுணர் குழு அளித்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்ட கருத்துகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x