Published : 25 Dec 2017 12:35 PM
Last Updated : 25 Dec 2017 12:35 PM
வி
வசாயத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் 44 உயிர்கள் பலியான துயரம் நிகழ்ந்து 50 ஆண்டுகளாகின்றன. கீழத் தஞ்சையில் அன்று பற்றி எரிந்த குடிசை, விவசாயக் கூலித் தொழிலாளர்களின் போராட்டத்தை உக்கிரம் கொள்ளச் செய்தது. இன்றும் அந்த நினைவின் கனல் அடங்கவில்லை.
கூலியாகக் கொடுக்கும் நெல்லில் கூடுதலாக ஒரு படி கொடுங்கள் என்ற கோரிக்கையோடுதான் அந்த நீண்ட போராட்டம் தொடங்கியது. அதற்கு நிலவுடைமையாளர்கள் உடனே செவிசாய்த்துவிடவில்லை. காரணம், தொழிலாளர்கள் தமக்கு அடிமைகளாக இருக்கவே பிறப்பெடுத்தவர்கள் என்ற சாதிய ஆதிக்க மனோபாவம் அவர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தில் பெருமளவிலான நிலங்கள் கோயில்கள், மடங்கள் பெயரிலோ அல்லது பெருநிலவுடைமையாளர்களுக்கோ உரிமையாக இருந்தன. விவசாயிகள், கோயில் நிலங்களைக் குத்தகையாகப் பெற்று விவசாயம் செய்துவந்தார்கள் அல்லது பெருநிலவுடைமையாளர்களின் நிலங்களில் பண்ணையடிமைகளாக இருந்தார்கள். நிலவுடைமையைத் தனது முழுமையான கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர்கள், அதை நிலைப்படுத்திக்கொள்ள உழைப்பைச் சுரண்டினார்கள். அடிப்படை உரிமைகளையும்கூட மறுத்தார்கள்.
பண்ணையடிமைகளாக நடத்தப்பட்ட தலித் மக்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட சாதிக் கொடுமைகளுக்கு எதிராகவும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும் ஒன்றிணைந்தார்கள். பொதுவுடைமை இயக்கத்தின் வழிகாட்டுதலோடு சங்கங்களை உருவாக்கிப் போராட்டங்களை நடத்தினார்கள். பின்னிப் பிணைந்திருந்த வர்க்கமும் சாதியும் ஆட்டம் கண்டன. அதற்குக் காரணமாக இருந்த பொதுவுடைமை இயக்கத்தவரின் மீது நிலவுடைமையாளர்களின் கோபமும் வெறுப்பும் பாய்ந்தன. ஓரணியில் நின்று தாக்குதல்களைத் தொடங்கினார்கள்.
அப்போது வெண்மணியில் தொடங்கிய கூலி உயர்வுக் கோரிக்கையை அடக்கி ஒடுக்குவதன் மூலமாக, விவசாயத் தொழிலாளர் சங்கங்களை அச்சுறுத்தி அடக்கிவைத்துவிடலாம் என்று பெருநிலவுடைமையாளர்கள் நினைத்தனர். கூலி உயர்வு கேட்டவர்களுக்குப் பதிலாகப் புதியவர்களை அழைத்துவந்து நிலங்களில் வேலை செய்யவைத்தார்கள். அதைத் தடுக்க முயன்ற தொழிலாளர்களை இரவில் குடியிருப்புக்குள் புகுந்து தாக்கினார்கள். குடிசைகளுக்குத் தீயிட்டார்கள். தப்பி ஓட முடியாத பெண்களும் குழந்தைகளுமாய் 44 பேர் உயிரோடு எரிந்தார்கள்.
தமிழகத்தின் விவசாயத் தொழிலாளர்களின் போராட்ட வரலாற்றில் வெண்மணி ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அந்தத் துயரத்துக்குப் பிறகே, விவசாய வேலைகளுக்கு உழைப்புக்கேற்ற கூலி உறுதிசெய்யப்பட்டது. தஞ்சை மண்ணில் தொடங்கிய இந்த வெற்றி தமிழகம் எங்கும் பரவியது. உச்ச வரம்புச் சட்டங்களால் கட்டுப்படுத்த முடியாத நிலவுடைமையின் அதிகாரப்போக்கை, தொழிலாளர்களின் உரிமைக்குரல்கள் கட்டுக்குள் கொண்டுவந்தன.
விவசாயத் தொழிலாளர்கள் முன்னெடுத்த வர்க்கப் போராட்டம் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், சாதியின் அடிப்படையிலான ஆதிக்கம் இன்னும் தன்னைத் தக்கவைத்துக்கொண்டே இருக்கிறது. மனித உரிமை மீறல்களும் ஆணவப் படுகொலைகளும் தமிழகத்தில் இன்னும் ஏற்றத்தாழ்வுகள் நீங்கிவிடவில்லை என்பதை எடுத்துச்சொல்லிக்கொண்டே இருக்கின்றன. வெண்மணி போராட்டம் ஒரு படி நெல்லுக்காக நடந்த போராட்டமல்ல. அதன் வழியாக தனது உரிமைகளை மீட்டெடுப்பதே அதன் முழுமையான நோக்கம். வர்க்கப் போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள், சாதியத்துக்கு எதிரான போராட்டத்தில் இன்னும் நெடுந்தொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT