Published : 11 Dec 2017 09:30 AM
Last Updated : 11 Dec 2017 09:30 AM
ரா
ஜஸ்தானின் ராஜ்சமந்த் மாவட்டத்தில் அஃப்ரசுல் கான் (50) என்ற தொழிலாளி, ஷம்பு லால் ராய்கர் என்பவ ரால் வெட்டிக் கொல்லப்பட்டு, பிறகு எரிக்கப்பட்டிருக்கிறார். இந்த கொடூரக் கொலையை ஷம்புலாலின் 14 வயது உறவுக்காரச் சிறுவன் வீடியோ காட்சியாகப் பதிவுசெய்து அனைவரும் காண வெளியிட்டிருக்கிறார். “ஒரு பெண்ணை ‘லவ் ஜிகாத்’திலிருந்து காப்பாற்றுவதற்காக இந்தக் கொலையைச் செய்தேன்” என்று அந்த வீடியோ பதிவில் கூறும் ஷம்பு லால், முஸ்லிம்களுக்கு எதிராகவும் திரைப்படங்களில் இடம்பெறும் மதங்களுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவித்திருப்பதுடன், பாபர் மசூதி விவகாரத்தையும் பேசியிருக்கிறார். ஷம்பு லாலையும் அவருடைய உறவுக்காரச் சிறுவனையும் உடனடியாகக் காவல் துறை கைதுசெய்துவிட்டாலும், “கொலையாளி மனநிலை சரியில்லாதவராக ‘முதல் நோக்கில்’ தெரிகிறார்” என்று மாநில காவல் துறைத் தலைவர் ஓ.பி.கல்ஹோத்ரா கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. ஏனென்றால், ஷம்பு லாலின் குடும்பமும் இதையே கூறுகிறது. “சங்கப் பரிவாரங்கள் பரப்பிவரும் வெறுப்பு உணர்வே இந்தப் படுகொலைக்கான காரணம்” என்று எதிர்க் கட்சி கள் கூறுகின்றன. எது எப்படியாக இருந்தாலும், ஒரு சமூகத்தைக் குறிவைத்துப் பரப்பப்பட்டுவரும் வெறுப்புணர்வு சமீப காலத்தில் விஸ்வரூபம் எடுத்துவருகிறது என்பதிலும் இது மிக மிக ஆபத்தானது என்பதிலும் எந்தச் சந்தேகமும் இல்லை!
சமூக வலைதளங்களின் காலமாகிவிட்ட இந்நாட்களில், இது போன்ற விஷயங்கள் தீயாகப் பரவுகின்றன. சமூக வலைதளங்களின் வரவால் எந்தச் சம்பவமும் ஒரு மாவட்டம், ஒரு மாநிலத் தோடு நின்றுவிடுவதில்லை. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும்கூடப் பரவுகின்றன. ஆக, எல்லை கடந்த பாதிப்புகளை உண்டாக்கக் கூடியது இது. ராஜஸ்தான் சம்பவம் இணையதளத்தில் பரவத் தொடங்கியதும், இணையம் சிறிது நேரத்துக்கு முடக்கப்பட்டது. ஆனால், இதுபோன்ற தற்காலிக முடக்கத்தால் தடுத்துவிடக்கூடிய விஷயமா இது! வெறுப்புக் குற்றங்கள் எவையானாலும் மிகவும் கடுமையானவை. அவை மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதுடன் சமூகத்தில் பிளவையும் உண்டாக்கும். இப்படியான சமூகப் பிளவு திட்டமிட்டு உருவாக்கப்படுவதும் நாளுக்கு நாள் வளர்த்தெடுக்கப்படுவதும் நல்லதே இல்லை. ‘நாம் இந்த நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கிறோம்’ எனும் உணர்வு சமூகத்தில் எந்தப் பிரிவினரிடத்தில் உருவானாலும் அது மோசமான எதிர்வினைகளையே உருவாக்கும். இப்படியான எதிர்வினைகள் சமூகத்தை இரு பிரிவுகளாக்குவதோடு, இரு பிரிவுகளிலிருந்தும் மோசமான பின்விளைவுகளையும் உருவாக்க வல்லவை என்பதை மறந்துவிடக் கூடாது.
எது ஒன்றுக்காகவும் வெறுப்பைக் கையாள்வதை எல்லாத் தரப்புகளும் திட்டவட்டமாகக் கைவிட வேண்டும். அதேபோல, வெறுப்பை ஒரு மோசமான குற்றமாகக் கருதும் பார்வையை ஆட்சியாளர்கள் பெற வேண்டும். வெறுப்பரசியலில், வெறுப்புக் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்குகளை விரைந்து விசாரிப்பதையும் கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு அளிக்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT