Published : 06 Nov 2017 09:43 AM
Last Updated : 06 Nov 2017 09:43 AM
அ
ரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஊழல் வழக்குகளை விசாரிக்கத் தனி நீதிமன்றங்களை உருவாக்கும் திட்டத்தை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது உச்ச நீதிமன்றம். குற்றப் பின்னணி உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போக்கு குறித்து, உச்ச நீதிமன்றம் அதிகம் கவலைப்படுகிறது. குற்ற வழக்கில் தண்டனை பெற்ற சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாகத் தகுதி இழப்புக்கு ஆளாகாமல் தடுக்க வழங்கப்பட்ட சட்டப் பாதுகாப்பை நீக்கி 2013-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இதற்கு நல்லதொரு உதாரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கு விசாரணைகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று 2014-ல் அது பிறப்பித்த ஆணை அடுத்த உதாரணம். ஆனால், அரசியல்வாதிகளின் ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்று தனி நீதிமன்றங்கள் அவசியமா?
ஊழல், பயங்கரவாதம், பாலியல் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல் தொடர்பானவற்றை விசாரிக்கத் தனி நீதிமன்றங்களை ஏற்படுத்த இப்போதே நடைமுறைகள் உள்ளன. இந்தியக் குற்றவியல் சட்டப்படியான வழக்கு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்டவர் அரசியல்வாதி என்பதற்காக மட்டும் அவரைத் தனி நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா என்று சட்ட, தார்மிக அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
அரசியல்வாதிகள் மீதான வழக்குகளைத் தனி நீதிமன்றங்கள் மூலம் விசாரிக்க எவ்வளவு நிதி ஒதுக்க முடியும், மாநில அரசுகள் இதில் எந்த அளவுக்குப் பங்கேற்கும் என்று அறிய உச்ச நீதிமன்றம் விரும்புகிறது. இப்போதுள்ள தண்டனையியல் நீதிமன்ற நடைமுறைகளால், இந்நாள் - முன்னாள் அரசியல் வாதிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் ஆமை வேகத்தில் தான் நடக்கின்றன. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் தங்கள் மீதான வழக்கு விசாரணைகளை எவ்வளவு முடியுமோ அவ்வளவு காலத்துக்குத் தள்ளிப்போட முயல்கின்றனர். ஏதாவது, காரணங்களைச் சொல்லி விசாரணையைத் தள்ளிவைக்கச் செய்கின்றனர். பிரபலமான அரசியல் தலைவர்களில் மிகச் சிலர்தான் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ளனர். இந்தத் தண்டனைகளும் விதிவிலக்கானவைதான். செல்வாக்குள்ள அரசியல் தலைவர்கள் தங்கள் மீதான ஊழல் வழக்குகளைக்கூட, ‘அரசியல் காரணங்களுக்காகப் பழிவாங்கப் போடப்பட்டவை’ என்று பேசி அனுதாபம் சம்பாதித்துக் கொள்கின்றனர்.
இந்நிலையில், அரசியல் தலைவர்கள் தங்களுக்கு எதிரான வழக்குகளில் விசாரணையை விரைந்து முடிக்க ஒத்துழைப்பது அவசியம். அப்போதுதான் அவர்கள் களங்கம் நீங்கி தேர்தலில் போட்டியிட முடியும். அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவு எந்த விளைவையும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தனி நீதிமன்ற ஆணைக்கும் இதே நிலை ஏற்படலாம். எனவே, வழக்கமான நீதிமன்றங்களிலேயே விரைந்து விசாரிப்பதுதான் சரியான வழி.
இதற்கு போதிய நீதிபதிகள், விசாரணை அதிகாரிகள், நீதிமன்றப் பணியாளர்களை நியமித்தாலே போதும். மத்திய - மாநில அரசுகள் இதில் கவனம் செலுத்தினால் எல்லா வழக்குகளும் எளிதில் தீர்க்கப்படும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT