Published : 02 Nov 2017 09:23 AM
Last Updated : 02 Nov 2017 09:23 AM

மழையை எதிர்கொள்ள வெற்று வார்த்தைகள் போதாது!

மிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியதால் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. மேலும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும், நிவாரணப் பணிகளிலும் தமிழக அரசு உண்மையான அக்கறையுடன் செயல்படுகிறதா எனும் கேள்வி எழுகிறது.

கடந்த நான்கு நாட்களாகப் பெய்துகொண்டிருக்கும் கன மழையைத் தாங்க முடியாமல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் தவித்துக்கொண்டிருக்கின்றன. சென்னையிலும் புறநகர்ப் பகுதிகளிலும் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைப் போக்கு வரத்தும் ரயில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டதால் வேலைக்குச் செல்பவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டிருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் மழை தொடர்பான சம்பவங்களில் குழந்தை கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். கூடவே, குடிநீருடன் கழிவுநீர் கலப்பது, மழை காரணமாக மின்சாரம் துண்டிப்பு போன்ற பிரச்சினைகளும்!

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் ஏரிகள் நிரம்பிவருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்திருக்கிறது. இச்சூழலில், மக்களின் சிரமங்களைக் களைவதைவிடவும், அரசின் மீது புகார்கள் எழக் கூடாது என்பதிலேயே கவனம் செலுத்துகிறார்கள் அமைச்சர்கள். மழை வெள்ளத்தை எதிர்கொள்ள அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட எடுக்காத நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்திருப்பதாக அமைச்சர் வேலுமணி கூறுகிறார். ‘ஒரே நாளில் ‘சோ’வென மழை பெய்தால் இப்படித் தேக்கங்கள் இருக்கும்’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

2015 பெருமழை வெள்ளத்தைச் சந்தித்த அனுபவம் இருப்பதால் இந்த மழைக்கு அஞ்சத் தேவையில்லை என்கிறார் அமைச்சர் எம்.சி.சம்பத். 2015 பெருமழை வெள்ளம் என்பது சென்னை, கடலூர் மக்களின் மனதில் இன்னும் ஆறாத ரணமாகவே இருந்துகொண்டிருக்கும் நிலையில், அமைச்சர்களின் இந்தப் பேச்சுக்கள் அதிர்ச்சியளிக் கிறது. நூற்றுக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த 2015 பெருமழை வெள்ளத்தின்போது அரசு ஏதேனும் பாடம் கற்றிருந் தால், தற்போதைய பிரச்சினைகள் ஏதும் ஏற்பட்டிருக்காது என்பதைத் தமிழக அரசு உணரவே இல்லை!

வட கிழக்குப் பருவ மழையைச் சமாளிக்கும் திறன் தமிழக அரசுக்கு இருக்கிறதா என்று மக்கள் அச்சத்துடனேயே பார்க் கிறார்கள். தற்போதுள்ள வடிகால் அமைப்பில் குறைபாடுகள் அதிகம் இருப்பதாக இந்தியக் கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவரின் அறிக்கை (உள்ளாட்சி அமைப்புகள்) தெரிவிக்கிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, தூர்வாருதல் போன்ற பணிகள் திறம்பட மேற்கொள்ளப்பட்டிருந்தால் இவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது. இன்னும் சில நாட்களுக்கு மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலான நடவடிக்கை களை எடுக்க வேண்டியது அரசின் கடமை. வெறுமனே பேசிக்கொண்டிருக்காமல் செயலில் இறங்குங்கள் ஆட்சியாளர்களே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x