Published : 24 Oct 2017 09:09 AM
Last Updated : 24 Oct 2017 09:09 AM

டார்ஜிலிங்: என்று திரும்பும் அமைதி?

மே

ற்கு வங்கத்தைச் சேர்ந்த டார்ஜிலிங் மலை மாவட்டத்தில் ‘கோர்க்க ஜனமுக்தி மோர்ச்சா’ (ஜிஜேஎம்) நடத்திவந்த முழு அடைப்புக் கிளர்ச்சி 104 நாட்களுக்குப் பிறகு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. எனினும், அங்கு இன்னும் முழு அமைதி திரும்பவில்லை. மத்திய - மாநில அரசுகள் தங்களது அதிகாரப் போட்டிக்கான ஆடுகளமான டார்ஜிலிங்கைக் கையாள்வதன் விளைவு இது. இனிமேலாவது அரசுகள் தங்களது அதிகாரப் போட்டியைக் கைவிட்டு, டார்ஜிலிங்கில் அமைதியை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

டார்ஜிலிங் விவகாரத்தில் யாருக்கு அதிக அதிகாரம் என்பதில் மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே தொடர்ந்து போட்டி நிலவுகிறது. கோர்க்கர் இயக்கம் மத்திய அரசின் சொல்படி நடப்பதாக மம்தா சந்தேகிக்கிறார். மேற்கு வங்க அரசு டார்ஜிலிங் மலை மாவட்டத்தை நிர்வகிக்க ஓரளவு தன்னாட்சி உரிமை பெற்ற குழுவை 2012-ல் நியமித்து, அதற்குக் கோர்க்கரையே தலைவராக நியமித்திருந்திருக்கிறது. இருந்தாலும், அந்தக் குழுவுக்கு மாநில அரசு போதிய அளவில் நிர்வாக அதிகாரத்தையும் நிதி அதிகாரத்தையும் அளிக்காமலும் அதைச் செயல்பட விடாமலும் தடுத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில்தான், மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் வங்க மொழி கட்டாயம் என்றார் மம்தா. இது கோர்க்கர்களிடம் மொழி-இன உணர்வைத் தட்டியெழுப்பியது. தங்களுடைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்திவந்த மாநில அரசு, மொழித் திணிப்பு மூலம் தங்களது ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் பார்க்கிறது என்று ஜிஜேஎம் வெகுண்டெழுந்தது. இதனால் கிளர்ச்சியும் வன்செயல்களும் வளர்ந்தன. மாநில போலீஸ் படையால் கிளர்ச்சியை அடக்க முடியாததால் மத்திய போலீஸ் படை வரவழைக்கப்பட்டது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விடுத்த வேண்டுகோளை ஏற்று முழு அடைப்புக் கிளர்ச்சியை ஜிஜேஎம் தலைவர் விமல் குருங் 104 நாட்களுக்குப் பிறகு கைவிட்டார். ஆனால், அவருடைய அமைப்பையே இரண்டாகப் பிளந்து, அவருடைய போட்டியாளரான வினய் தமாங் என்பவரை டார்ஜிலிங் மாவட்ட நிர்வாக வாரியத்தின் தலைவராக நியமித்திருக்கிறார் மம்தா. அத்துடன் விமல் குருங் தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

டார்ஜிலிங்கில் அமைதியின்மை நிலவுவதன் காரணமாக சுற்றுலாப் பயணிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. தேயிலைத் தோட்டப் பணிகளும் பாதிப்படைந்துள்ளன. ரூ.400 கோடி மதிப்புக்கு தோட்டங்களுக்கு இழப்பு ஏற்பட்டுஉள்ளது. கோர்க்கர் கோரிக்கைகள் தொடர்பாக நவம்பர் 21-ல் டார்ஜிலிங்கில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. ஆனால், அதில் ஜிஜேஎம் சார்பில் தமாங் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. சுமுகத் தீர்வு ஏற்பட மத்திய - மாநில அரசுகளும் கோர்க்கக் குழுக்களும் தங்களுக்கிடையேயுள்ள போட்டியுணர்வைப் புறந்தள்ளிவிட்டு மனம்விட்டுப் பேச வேண்டும். கோர்க்கர்களின் நியாயமான கோரிக்கைகளை மாநில அரசு ஏற்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x