Published : 16 Oct 2017 09:03 AM
Last Updated : 16 Oct 2017 09:03 AM
அ
ணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்துவரும் ‘ஐகேன்’ (சர்வதேச அணு ஆயுத ஒழிப்புப் பிரச்சாரக் குழு) எனும் தன்னார்வத் தொண்டு அமைப்புக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. வட கொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் அணு ஆயுத அச்சுறுத்தல் உருவாகியிருக்கும் ஒரு பதற்றமான தருணத்தில் இந்த அமைப்புக்கு அமைதிக்கான நோபல் விருது வழங்கப்படுவது மிகப் பொருத்தமானது. ஐநா ஆதரவில் கொண்டுவரப்பட்ட அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் ஏற்பதற்கான சட்ட நடைமுறைகள் குறித்து ஐகேன் எடுத்து வரும் முயற்சிகளையும் நோபல் பரிசுக் குழு பாராட்டியிருக்கிறது.
2007-ல் ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, அதே ஆண்டில் ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் அதிகாரபூர்வமாகச் செயல்படத் தொடங்கியது. இதன் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் உள்ளது. 100-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த அமைப்புகள், சிறு குழுக்கள் இந்த அமைப்பில் இடம்பெற்றிருக்கின்றன.
அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும் என்ற இலக்கு ஐநா சபையில் 1946-லேயே ஏற்கப்பட்டது. ஆனால் அதற்கான உடன்பாட்டை வகுக்க 70 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன. அணுகுண்டுகளைப் பயன்படுத்தி எதிரி நாட்டை நாசப்படுத்த நினைத்தால் அந்நாட்டின் நில எல்லையோடு நின்றுவிடாமல் நிலம், நீர், காற்று மூலம் பரவி தொடர்பே இல்லாத பிற நாட்டு உயிரினங்களுக்கும் தாவரங்களுக்கும் கூட ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்ற உண்மைதான் 122 நாடுகளை இந்தத் தடை உடன்பாட்டுக்கு ஆதரவாகக் கையெழுத்திட வைத்துள்ளது.
அணு ஆயுதங்கள், மனித உரிமைகள் சட்டத்துக்கு இயைந்தவையாக இருக்க வேண்டும் என்ற நீதிமன்றக் கண்டனம்தான் இப்படியொரு சர்வதேச உடன்பாட்டுக்கு கிரியா ஊக்கியாகச் செயல்பட்டிருக்கிறது. 1996-ல் சர்வதேச நீதிமன்றத்தில் ஆலோசனைக் கருத்தாகத்தான் இது சொல்லப்பட்டது. நிலத்துக்கடியில் வெடிக்கப்படும் அணுகுண்டுகளால் உள்நாட்டு மக்களுக்கு நீண்டகால அடிப்படையில் ஏற்படும் சுகாதாரப் பிரச்சினைகள் எண்ணிலடங்காதவை. அவையும் சர்வதேச சமூகத்தின் கவலைகளைப் பெருக்கியுள்ளன.
கடந்த செப்டம்பரில் இத்தாலிய நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம் ஐ.நா. அணு ஆயுதத் தடை உடன்பாட்டில் சேர்ந்துகொள்வதற்கான வாய்ப்பை ஆராயுமாறு அரசை வலியுறுத்தியது. ஹாலந்து நாடாளுமன்றமும், இந்த உடன்பாட்டுப் பேச்சுவார்த்தையில் பங்கேற்க அரசுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றியது. உலக நாடுகள் அனைத்தும் இந்த உடன்பாட்டை உடனடியாக ஏற்று, அங்கீகரித்துவிடும் என்று கூறிவிட முடியாது. எனினும், எதிர்காலத்தில் அணு ஆயுதங்கள் கூடாது என்ற மக்கள் வலியுறுத்தினால் அதை அரசால் நிராகரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுவிடும். இந்தச் சூழலில், ஐகேன் அமைப்பின் முயற்சிகள் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல பலனைத் தரும் என்று எதிர்பார்க்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT