Published : 30 Oct 2017 10:03 AM
Last Updated : 30 Oct 2017 10:03 AM
பொ
துச் சரக்கு -சேவை வரி தொடர்பான நிர்வாக நடைமுறையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைத் தீர்க்க, வரி விகிதங்களும் வரி விதிப்புக்கு உள்ளாகும் பொருட்களும் தொடர்ந்து மாற்றப்பட்டுவருகின்றன. இந்த மாற்றங்களிலிருந்து, வரி விகிதத்தை நிர்ணயிக்கும்போது முறையாகச் சிந்தித்துச் செயல்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. உயர் வரி விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டதால் ஏராளமான சிறு, நடுத்தரத் தொழில்பிரிவுகள் கடுமையாக அடிவாங்கிவிட்டன.
பொதுச் சரக்கு - சேவை வரி அமலுக்கு வந்த முதல் மூன்று மாதங்களிலேயே 27 லட்சம் பதிவுபெற்ற நிறுவனங்கள் வரிவிதிப்பு வரம்புக்குள் புதிதாக வந்தன. ஜிஎஸ்டி வரம்புக்குள் வரும் நிறுவனங்களில் பாதிக்கும் மேற்பட்டவை வரி செலுத்துகின்றன அல்லது விற்பனைப் படிவங்களை நிரப்பி அளிக்கின்றன. செப்டம்பர் மாதத்தில் வசூலான மொத்த சரக்கு - சேவை வரி ரூ.92,150 கோடி. ஜூலையில் அது ரூ.95,000 கோடியாக இருந்தது. ‘ஜிஎஸ்டி வரம்பில் புதிதாகச் சேரும் எந்த வியாபாரியையும் வரித் துறை அதிகாரிகள் பழைய கணக்குகளைக் கேட்டு தொல்லை செய்ய மாட்டார்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடி அக். 22 அன்று உறுதியளித்துள்ளார். எனினும், ஜிஎஸ்டி நிர்வாகம் சகஜநிலைக்கு வர ஓராண்டு பிடிக்கும் என்று மத்திய வருவாய்த் துறை செயலர் ஹஸ்முக் அதியா கூறியிருப்பதால், வரும் நாட்களில் மேலும் பல வரிவிகிதக் குறைப்புகளும் மாற்றங்களும் இருக்கும் என்று தெரிகிறது.
தவறுகளையும் இடையூறுகளையும் களையும் எண்ணமும் முயற்சிகளும் வரவேற்கத்தக்கவையே. ஆனால், அடுத்தடுத்து நடக்கும் வரிக் குறைப்புகளும், அவற்றை மேற்கொள்ளும் நேரமும் சில கேள்விகளை எழுப்புகின்றன. ஜிஎஸ்டி பேரவையின் கடைசிக் கூட்டத்தில் சுமார் 24 பண்டங்களின் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. இப்படி ஜூலை 1-க்குப் பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட வரிவிகித மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏற்றுமதியாளர்கள் செலுத்திய உள்ளீட்டு வரித் தொகையைத் திருப்பித் தருவதிலும் இன்னும் தாமதம் நீடிக்கிறது. ஏற்றுமதியாளர்கள் அளிக்கும் இருவேறு ஆவணங்கள், சரியாகப் பொருந்தினால் தான் உள்ளீட்டு வரித்தொகை திரும்ப வழங்கப்படும் என்ற விதியை நிச்சயம் மாற்றியாக வேண்டும். இதில் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும். நவம்பர் 10-ல் மீண்டும் ஜிஎஸ்டி பேரவை கூடி, வரி விகிதங்களைக் குறைப்பது, நடைமுறைகளை மேலும் எளிமைப்படுத்துவது, ஜிஎஸ்டி வரம்பில் மனை வணிகத்தையும் கொண்டுவருவது போன்றவற்றை விவாதிக்கவிருக்கிறது.
பொதுச் சரக்கு-சேவை வரியை நன்கு ஆராய்ந்துதான் கொண்டுவந்திருக்கிறோம் என்று சூரத்தனத்துடன் நியாயப்படுத்திப் பேசியவர்கள், இப்போது அவசர அவசரமாக அதில் பெருமளவை மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கள யதார்த்தத்துக்குப் பொருத்தமில்லாமல் அதிகாரிகளும் நிபுணர்களும் பரிந்துரைத்த வரி விகிதங்களைத்தான் முதலில் அறிவித்திருக்கிறார்கள் என்பதையும் இப்போது தவறுகளைத் திருத்தி வருகிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பணமதிப்பு நீக்க நடவடிக்கையைப் போலவே இதிலும் ஆழ்ந்த சிந்தனை, திட்டமிடல், ஒருங்கிணைப்பு, தொலைநோக்கு போன்றவை இல்லை என்பது தெளிவாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT