Last Updated : 17 Mar, 2023 06:36 AM

 

Published : 17 Mar 2023 06:36 AM
Last Updated : 17 Mar 2023 06:36 AM

அங்கக வேளாண்மைக் கொள்கை தேக்கங்களும் தேவைகளும்

இயற்கைவழி வேளாண்மைக்கான ‘அங்கக வேளாண்மைக் கொள்கை’ தமிழ்நாடு வேளாண்மைத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்நடவடிக்கை வரவேற்புக்குரியதுதான். அதேவேளையில், இதில் உள்ள பல கருத்துகளும் கூறுகளும் பெருத்த ஏமாற்றத்தையும் வருத்தத்தையுமே அளிக்கின்றன.

காலப் பிழைகள்: ‘அங்ககம்’ என்கிற வடமொழிச் சொல் இந்த அறிக்கையின் தலைப்பிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு உழவர் அமைப்புகள், தமிழ்ப் பற்றாளர்கள் ‘உயிர்ம வேளாண்மை’ என்னும் வார்த்தையைப் பயன்படுத்திவருகின்றனர். தமிழ்ப் பற்றுக் கொண்டதாக அறியப்படும் திமுக அரசு அதையே பயன்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டு வேளாண்மைக் கொள்கையில் பராசர முனிவர், கிரேக்கப் புலவர் ஹோமர் போன்றோரின் காலத்தை முன்னிறுத்த வேண்டிய எந்த அவசியமும் இல்லை. ஹோமரின் காலம் பொ.ஆ.மு. (கி.மு) 8ஆம் நூற்றாண்டு என்கிற அளவில் கிரேக்கக் குறிப்புகளே குறிப்பிடும்போது, மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்கிறது இந்த அறிக்கை. ‘விஷ்ணு புராணம்’ எழுதியதாகச் சொல்லப்படும் பராசரரை இந்தக் கொள்கை அறிக்கையில் முன்னிறுத்த வேண்டிய தேவை என்ன?

‘தொல்காப்பியம்’ காலம் பற்றிய கருத்துகள் பலவாக இருந்தாலும், அதன் காலம் பொ.ஆ.மு.711 என்று செம்மொழி ஆய்வு நிறுவனம் கூறுகிறது. அவ்வாறு இருக்கும்போது, தொல்காப்பியம் பொ.ஆ.மு.200 என்று இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தமிழைப் பின்னுக்குத் தள்ளுபவர்களுக்கு இது பெரும் சான்றாக அல்லவா மாறிவிடும்? கீழடி முதல் அழகன்குளம் வரை நமது தொன்மையை நிறுவ நாம் படாதபாடுபடுகிறோம். சான்றுகள் தந்த பின்னரும் கேலியும் கிண்டலும் செய்பவர்கள் உள்ளபோது, இது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

குறைந்தது பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய வேளாண்மையாளர்கள் என்று சீன, ஆப்பிரிக்க மக்களைக் காட்டுகிறது இந்த அறிக்கை. சென்னைக்கு அருகே அத்திரம்பாக்கம் ஆய்வுகள், நூல்கள் (The Shining Stones At a Stone Age Site in India - Shanti Pappu; The Evolution and History of Human Populations in South Asia - Michael D.Petraglia, ‎Bridget Allchin) தமிழ்நாட்டின் வேளாண்மை வரலாற்றை அதற்கும் முன்பாக - ஏறத்தாழ 17 லட்சம் ஆண்டுகளுக்கும் முன்பாக - கொண்டு செல்கிறதே, அதையும் ஒருமுறை தேடிப் பார்த்துச் சேர்த்திருக்க வேண்டாமா? அப்போதுதானே நமக்கும் ஒரு நெடிய வரலாறு இருக்கிறது என்பது உறுதியாகும்; ‘திராவிட மாதிரி’க்கு வலு சேர்க்கும்?

பலன் தரா முன்னெடுப்புகள்: இயற்கை வேளாண்மைக்கும் உயிர்ம (அங்கக) வேளாண்மைக்கும் உள்ள வேறுபாடு பிழையாக விளக்கப்பட்டுள்ளது. இயற்கையை வேளாண்மை செய்யவிட்டு அதிலிருந்து பெற்றுக்கொள்வதை ‘ஒன்றும் செய்யா வேளாண்மை’ (Do nothing farming) என்பார்கள். மட்கு உரம், உயிர் உரம் போன்ற எவற்றையும் அது பண்ணையில் ஆக்கினாலும் வெளியிலிருந்து கிடைத்தாலும் பயன்படுத்தினால் அது உயிர்ம வேளாண்மை என்னும் பொருளில் அடங்கும்.

உலக சுகாதார நிறுவனம் (WHO) ‘ஒற்றை நலம்’ (Single Health) என்று குறிப்பிடவில்லை. ஆனால், தமிழில் ‘ஒற்றை நலம்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு ‘ஒருமை நலம்’ (One Health) அல்லது ‘ஒருங்கிணைந்த நலம்’ என்றே பொருள்கொள்ள வேண்டும். மனிதர், கால்நடைகள், கானுயிர்கள், சூழலியல் மண்டலம் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைத்து நலம் பேண வேண்டும் என்பதே இதன் பொருள். இந்த மொழிபெயர்ப்பு மத்திய அரசின் ‘ஒற்றை’ என்கிற கருத்தை ஏற்பதாக ஆகிவிடும்; பொருளே மாறிவிடும்.

உழவியத் தொழிலாளர்களும், உழவர்களும் பூச்சிக்கொல்லி நஞ்சுகளால் மிக மோசமாகப் பாதிப்படைகின்றனர். நோக்கங்களை வரையறுக்கும்போது முதன்மையாக வேளாண் தொழிலாளர்களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை இணைக்க வேண்டும்.

வேளாண்மையில் தற்சார்பை உறுதிசெய்தல் - குறிப்பாக, விதைகளின் தற்சார்பு உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதும் நோக்கமாக இருக்க வேண்டும். செயல் உத்திகளில் (strategies) நிலத்துக்கு மட்டும் உயிர்ம வேளாண்மைச் சான்றளிப்பு முறை உள்ளது. அறுவடைக்குப் பின்னர் உழவர்கள் தயாரிக்கும் அரிசி, பருப்பு ஆகிய பொருள்களுக்குச் சான்று பெறும் முறையும் இணைக்கப்பட வேண்டும்.

உயிர்ம வேளாண்மை ஆராய்ச்சிக்கு என்று தன்னாட்சியுடன் கூடிய தனி ஆராய்ச்சி நிறுவனம் அல்லது அதற்கு இணையான நிறுவனம் வேண்டும். ஏற்கெனவே உள்ள ஆராய்ச்சி நிலையங்கள், பல்கலைக்கழகங்கள் வேதி முறை வேளாண்மையை ஊக்குவிப்பனவாக உள்ளன. அவர்களிடமிருந்து உளபூர்வமான,உறுதியான இயற்கை வேளாண்மை ஆய்வு பலன்களைப் பெற இயலாது. எனவே, ஏற்கெனவே உள்ள அமைப்புகளின் கீழ் அவற்றை விடுவது பயன் தராது.

செய்ய வேண்டியவை: சந்தைப்படுத்துவதில் உழவர் சந்தைகளின் பங்கு இணைக்கப்படவில்லை. ‘உழவர் சந்தை’ என்பது முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் கனவுத் திட்டம். அதனுடன் இயற்கைவழி வேளாண்மைப் பொருள்களை இணைப்பதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு நஞ்சில்லா உணவை உறுதிப்படுத்தலாம். இதன் மூலம் உள்ளூர் சந்தை வாய்ப்பும் பெருகும்.

‘அங்ககப் பொருள்களின் மூலத்தை அறிதல்’ என்கிற தமிழ் மொழிபெயர்ப்பு, நச்சுத்தன்மையை அறியவா, பொருள்கள் உருவாகும் இடத்தை அறியவா என்ற குழப்பத்தை ஏற்படுத்துகிறது. உயிர்ம வேளாண்மைப் பொருள்களுக்கு நியாயமான விலைக் கொள்கை (அடக்கச் செலவுடன் கூடிய லாப விலை) உறுதிசெய்து அறிவித்தால், உழவர்களுக்கும் நுகர்வோருக்கும் பலன் ஏற்படும். நகரங்களில் ஏராளமான மட்கும் குப்பைகள் கிடைக்கின்றன. இவற்றை நல்ல மட்குகளாக உருவாக்கி, உயிர்ம வேளாண்மைப் பண்ணைகளுக்கு அளிக்கும் திட்டத்தை இணைக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லிகளின் தீமையை விளக்கி நஞ்சில்லாத உணவை அனைவரும் உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்வுப் பரப்புரை இயக்கம் இந்தக் கொள்கையுடன் இணைக்கப்பட வேண்டும். இயற்கைவழி வேளாண் சுற்றுலாக்கள், இயற்கைப் பண்ணைத் தங்குமிடங்கள் (organic farm stay) போன்ற திட்டங்கள் இணைக்கப்படுவதன் மூலம், உழவர்களுக்குக் கூடுதலான அனுபவ அறிவும் வருமானமும் கிட்டும்.

தீங்கான பூச்சிக்கொல்லிகளைப் படிப்படியாகத் தமிழ்நாட்டுச் சூழலிலிருந்து முற்றிலும் அகற்றுவதற்குத் திட்டம் வேண்டும். வேளாண்மைத் துறையுடன் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுலாத் துறை, மருத்துவத் துறை ஆகிய துறைகளையும் இணைந்து, உயிர்ம வேளாண்மைப் பரப்புதல் பணிகளில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நஞ்சில்லா மருந்துச்செடி உருவாக்கத் திட்டம் வேண்டும். உயிர்ம வேளாண்மை உழவர்கள் ஒவ்வொரு பயிர்ச் சாகுபடியின்போதும் நீரையும் மண்ணையும் சூழலையும் மாசுபடாமல் காக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும்.

உயிர்ம வேளாண்மை மண்டலங்களில் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (Genetic Modified Crops) சாகுபடியைத் தடைசெய்யத் திட்டம் வகுக்கலாம். உயிர்ம வேளாண்மை மண்டலங்களில் மாசுபடுத்தும் தொழிற்சாலைகளை அப்புறப்படுத்தத் திட்டத்தை வகுக்க வேண்டும்.

ஜிஎஸ்டி அமைப்புக்குள் வரும்போது, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் வலியுறுத்தியதுபோல, வழக்கமான வேதி வேளாண்மையிலிருந்து இயற்கைவழி வேளாண்மைக்கு மாறும் உழவர்களுக்கு, மாறும் குறிப்பிட்ட கால அளவுக்கு மண்வள மேம்படுத்துதல் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் நஞ்சில்லாத நலமிக்க உணவை உண்டு, பிறருக்கும் அளித்து வாழ்வாங்கு வாழும் தமிழ்நாட்டை உருவாக்க முடியும்.

- பாமயன் | இயற்கை வேளாண் வல்லுநர், எழுத்தாளர் தொடர்புக்கு: pamayanmadal@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x