Published : 07 Feb 2023 06:51 AM
Last Updated : 07 Feb 2023 06:51 AM

இள வயது இதய நோய் மரணங்களுக்கான உண்மைக் காரணம்

அ.ப.ஃபரூக் அப்துல்லா

கரோனா பெருந்தொற்றுக்குப் பின், இளவயது மரணங்கள் அதிகரித்திருக்கின்றன எனும் கருத்து சமூக ஊடகங்களில் பரவலாக முன்வைக்கப்படுகிறது. அதிலும் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று ஒருபுறமும் கோவிட் தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் இதய நோய் அதிகமாக ஏற்படுகிறது என்று மற்றொருபுறமும் கருத்துகள் உலவிவருகின்றன.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள்படி (National Crime Records Bureau), 2021இல் மாரடைப்பினால் ஏற்பட்ட மரணங்கள் 28,449; 2020இல் ஏற்பட்ட மாரடைப்பு மரணங்கள் 28,680. மேற்சொன்ன இரண்டும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய பின் வெளியான விவரங்கள். 2020இல், கரோனா தொற்றின் முதல் அலையைச் சந்தித்தோம். 2021 ஜனவரி 16 அன்று முதல் கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. 2021 இடையில் இரண்டாம் அலையைச் சந்தித்தோம்.

இந்தக் கணக்குகளின்படி 2020ஐ ஒப்பிடும்போது, 2021இல் மாரடைப்பு மரணங்கள் சிறிதளவு குறைந்துள்ளதாகத் தெரிகிறது. 2019இல் பதிவுசெய்யப்பட்ட மொத்த மாரடைப்பு மரணங்கள் 28,005. 2019ஐக் காட்டிலும் மாரடைப்பு மரணங்கள் 2021இல் 1.6% கூடியிருக்கின்றன. ஆயினும் 2017 மாரடைப்பு மரணங்களை 2021 உடன் ஒப்பிடும்போது 22% அதிகம். 2012 மாரடைப்பு மரணங்களைவிட, 2021இல் 54% அதிகமாக இருக்கிறது. ஆக, கரோனா பெருந்தொற்று இல்லாத நிலையிலும் மாரடைப்பு மரணங்கள் கடந்த 10 ஆண்டுகளாக அதிகரித்துவருகின்றன என்பது தெளிவாகிறது.

உண்மைக் காரணம்: இதுவரையிலான ஆய்வு முடிவுகளின்படி, தீவிர கோவிட் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களுக்குக் கோவிட் நோயின் தீவிரத் தாக்கத்தினால் நுரையீரல், இதயம், ரத்த நாளங்களில் நீண்ட காலப் பிரச்சினைகள் ஏற்படுவது புலனாகிறது.

கரோனா வைரஸுக்கு எதிராக உடலின் எதிர்ப்புசக்தி செய்யும் போரின் விளைவாக, இதயத்தின் தசைகளும் காயத்துக்கு உள்ளாகக்கூடும். மேலும், ரத்த நாளங்களுக்குள்ளே ரத்தக் கட்டிகள் உருவாகும் தன்மை அதிகரித்து, அதனால் இதய ரத்த நாள அடைப்பும் மூளை ரத்த நாள அடைப்பும் கால்களில் ஆழ்சிரை ரத்த நாள அடைப்பும் ஏற்படும் சாத்தியம் அதிகம் என்கின்றன ஆய்வுகள். கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டு எட்டு மாதங்கள்வரை இதயம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் இருக்கக்கூடும்.

இதனுடன் படபடப்பு, இதயம் துடிக்கும் விசையில் சீரற்றதன்மை, துடிக்கும் முறையில் மாறுபாடு என்று பல பிரச்சினைகளைத் தீவிர கோவிட் தொற்று ஏற்பட்டவர்கள் அனுபவிக்கக்கூடும். இதனை ஆரம்பகட்டத்தில் கவனித்துச் சிகிச்சை பெறாமல் போனால், பின்பு மாரடைப்பு, இதயச் செயலிழப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும் வாய்ப்பு உள்ளது.

தடுப்பூசிக்குத் தொடர்பில்லை: கோவிட் தடுப்பூசிகளைப் பொறுத்தவரை, இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்டோர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இந்தியாவில் கோவிட் தடுப்பூசிகளால் 2021இல் மட்டும் 42 லட்சம் மரணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாக ‘லான்செட்’ ஆய்வு தெரிவிக்கிறது. தடுப்பூசிக்கு அரிதினும் அரிதாகவே பக்கவிளைவுகள் தோன்றியுள்ளன.

102.7 கோடித் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டதில் பதிவுசெய்யப்பட்ட தடுப்பூசி சார்ந்த பக்கவிளைவுகள் 0.009% என்ற அளவில் உள்ளன. இளவயது இதய நோய் மரணங்களுக்குக் காரணம் தடுப்பூசிதான் என்பதற்கு, எந்த வகையான ஆய்வுபூர்வமான தரவுகளும் இல்லை.

நாம் தவறவிடுபவை: இந்தியாவில் இளவயது (20 முதல் 45 வயதுவரை) மாரடைப்பு மரணங்களுக்கான பல்வேறு காரணங்களில் ஒன்று, உடல் பருமன். 20 முதல் 39 வயதுக்குட்பட்ட வயதினருள் 39.8% பேர் உடல் பருமனுடன் இருப்பதாக, தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கை (NFHS-5) கூறுகிறது.

பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட பொதுமுடக்கம், வீட்டிலிருந்து பணிசெய்யும் முறை, பணியிழப்பு அபாயம், பணிப் பாதுகாப்பற்ற சூழல் - இவற்றால் ஏற்பட்ட அச்சம், படபடப்பு, மன அழுத்தம், தூக்கமின்மை போன்றவற்றாலும் அதிக மாவுச்சத்து நிறைந்த தின்பண்டங்களை அடிக்கடி உண்பது, மன அழுத்தத்துக்கு வடிகாலாக மது, புகை உள்ளிட்ட போதைப் பொருள்களை நாடுவது, காலப்போக்கில் அவற்றுக்கு அடிமையாவது என இளைய சமுதாயம் இதய நோய்க்கான அத்தனை காரணிகளையும் தன்னகத்தே வளர்த்துவருகிறது.

உடலின் உள்ளுறுப்புகளைச் சுற்றி மண்டிக் கிடக்கும் கொழுப்பின் அளவு (Visceral adiposity) ஐரோப்பியர்களைக் காட்டிலும் இந்தியர்களுக்கு அதிகமாக இருக்கிறது. நீரிழிவு உருவாகும் தன்மை இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தென்னிந்தியர்களுக்கு அதிகமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவையன்றி இதயம் துடிக்கும் முறைகளில் ஏற்படும் கோளாறு (Arrhythmias), பிறவியிலேயே இதயத்தில் ஏற்படும் ஓட்டை, இதயத்தின் அறைகளில் ஏற்படும் ஊறு விளைவிக்கும் இணைப்புகள் என்று சிறு வயதிலேயே கவனித்துப் பார்க்க வேண்டிய இதயம் சார்ந்த பிரச்சினைகளைக் கவனிக்காமல் விடுவதாலும் இள வயது இதயச் செயலிழப்பு ஏற்படக்கூடும்.

பெருந்தொற்றின் மூன்றாம் அலையைக் கடந்திருக்கும் இக்காலத்தில் இளவயதினர் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியச் செய்திகள் சில உள்ளன: உடல் எடையைச் சரியாகப் பராமரித்தல்; உணவு விஷயத்தில் மாவுச்சத்து அதிகம் உள்ள உணவு வகைகள், தின்பண்டங்கள், இனிப்பு, எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைக் குறைத்துக்கொள்ளுதல்; தேவையான அளவு புரதமும் ஆரோக்கியமான வழிகளிலிருந்து கொழுப்பையும் தரும் உணவுப் பழக்கத்துக்கு மாறுதல்.

தேகப் பயிற்சிக்கு நடை, மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், உடற்பயிற்சிக் கூடம் செல்லுதல் போன்றவற்றுக்கு அன்றாட வாழ்வில் கட்டாயம் நேரம் ஒதுக்க வேண்டும். மது, புகை போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பழக்கங்களை உடனே கைவிட வேண்டும்.

ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவை இருக்கின்றனவா என்பதை ஆண்டுக்கு ஒருமுறையேனும் பரிசோதித்துக் கொண்டு, முறையான தொடர் சிகிச்சை பெறுவது அவசியம். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்றவை கண்டறியப்பட்டாலும் முறையான மருத்துவச் சிகிச்சையை இளைஞர்கள் எடுத்துக்கொள்ளாத போக்கு காணப்படுகிறது.

இதுவும் மிகவும் ஆபத்தானது. நீரிழிவும் உயர் ரத்த அழுத்தமும் இதய நலன், சிறுநீரக நலன் உள்பட ஏனைய உள்ளுறுப்புகளையும் நாளடைவில் பாதிக்கக்கூடிய நோய்கள் என்பதை உணர வேண்டும். முறையாகத் தூங்கி, மன அமைதி தரும் செயல்களில் ஈடுபட்டு, பதற்றத்தையும் மன அழுத்தத்தையும் குறைத்துக்கொள்ள வேண்டும். தீவிர உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோர் இதய நலனை அவ்வப்போது பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மூச்சுத்திணறல், படபடப்பு, மார்புப் பகுதியில் வலி, கெண்டைக் கால் தசைப் பகுதியில் வலி போன்றவை ஏற்பட்டால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக மருத்துவரைச் சந்தித்துச் சிகிச்சை பெற வேண்டும். தீவிர கரோனா தொற்று ஏற்பட்டுக் குணமானவர்கள் இந்த அறிகுறிகள் குறித்து கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும்.

இதய நோய் குறித்தும் அதைத் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டிய ஆக்கபூர்வமான செயல்கள் குறித்தும் விழிப்புணர்வுடன் செயல்பட்டால், இளவயது இதய நோய் சார்ந்த மரணங்களை நிச்சயம் தடுக்க முடியும். மாறாக, கரோனா வைரஸ் மீதும் தடுப்பூசி மீதும் தேவையில்லாமல் பழி சுமத்துவது யாருக்கும் பலன் தராது.

- அ.ப.ஃபரூக் அப்துல்லா பொது நல மருத்துவர், எழுத்தாளர்; தொடர்புக்கு: drfarookab@gmail.com

To Read in English: Real reasons behind fatal heart diseases affecting youngsters

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x