Last Updated : 20 Dec, 2022 06:47 AM

1  

Published : 20 Dec 2022 06:47 AM
Last Updated : 20 Dec 2022 06:47 AM

2022 கற்றதும் பெற்றதும் | எப்படி இருந்தது இந்தியப் பொருளாதாரம்?

உலகின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 2022இன் தொடக்கத்தில் 5.9%ஆக இருந்தது. ஆண்டின் முடிவில், 4.4%ஆகவும் 2023இல் 3.8%ஆகவும் அது குறையும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) மதிப்பீடு செய்தது.

அதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம், 2020-21இல் 9.0%இலிருந்து, 7.1%ஆகக் குறையும் என்றும் ஐஎம்எஃப் கணித்திருந்தது. 2021இல், பொருளாதாரத் தேவையில் பெரும்பங்கு வகிக்கும் தனியார் நுகர்வு-செலவு, பெருந்தொற்றுக் காலத்தைக் காட்டிலும் குறைவாக இருந்தது. அதேசமயம், அரசின் பொதுச் செலவு இரண்டு இலக்க விகிதத்தில் அதிகரித்திருந்தது. நிலையான மூலதன அதிகரிப்புக்கான வாய்ப்புகள் இருந்தன. இது பொருளாதார மீட்சிக்கான நம்பிக்கையை அளித்தது.

மக்களின் நுகர்வு - செலவு பெரும் தொய்வாக இருந்தமைக்குக் காரணம், வேளாண்மைக்கு எதிரான வாணிப வீதம். வேளாண்மைப் பண்டங்களின் விலை 5.2%ஆக அதிகரித்திருந்தது. அதேசமயம், வேளாண்மை அல்லாத பண்டங்களின் விலையோ 11.4%ஆக உயர்ந்திருந்தது. இதன் பொருள், வேளாண்மைத் துறையில் உருவான வருமானத்தை வேளாண்மை அல்லாத துறைகள் விழுங்கிவிட்டன என்பதே. இதன் காரணமாக, கிராமப்புற மக்களின் தேவைகள் போதுமான அளவு நிறைவேறவில்லை.

வேளாண்மைத் துறைகளின் வருமானத்துக்கும் கார்ப்பரேட் லாப விகிதங்களுக்கும் பெருத்த இடைவெளி இருந்தது. தானியங்கி வாகன விற்பனை - குறிப்பாக இருசக்கர வாகனங்கள் விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டது. கிராமப்புறத் தேவை குறைவு, தொழில் துறை உற்பத்தி மற்றும் சேவை உற்பத்தியையும் பாதித்தது. இத்தகைய சூழ்நிலையில் 2022இல், இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுத்துச் செல்வது சவால்மிக்கதாக அமைந்தது. இதனைச் சரிசெய்ய, கிராமப்புற வருவாயையும் வேலைவாய்ப்பையும் உயர்த்தி, மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க வேண்டும். சிறு, குறு, நடுத்தரத் தொழில்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பது போன்றவையும் பொருளாதார வளர்ச்சிக்கு உகந்ததாக இருக்கும்.

2022இன் பொருளாதார நிலையைப் பகுப்பாயும்போது, உலக வங்கி, இந்திய ரிசர்வ் வங்கி, ஐநாவின் வர்த்தகம் மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு ஆகியவை மேற்கொண்ட மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) கணிப்புகள் சற்றேறக்குறைய ஒன்றாகவே உள்ளன. மூன்றும் இந்தியாவின் ஜிடிபி முன்கணிப்பைக் குறைத்துக்கொண்டே வந்தன. இந்திய ஜிடிபி வளர்ச்சி விகிதம், 8.7%ஆக இருக்கும் என முதலில் கூறிய உலக வங்கி, அதை 8%, 7.5% என குறைத்துக்கொண்டே வந்தது. இறுதியில், 6.5%தான் எனக் கூறியுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி, 7.2%இலிருந்து 7.0%ஆகக் குறைத்துள்ளது.

ஜிடிபி வளர்ச்சி விகிதம் குறைவாக இருந்தபோதும், உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை சற்று நம்பிக்கை அளிக்கிறது: “உலகளாவிய பணக் கொள்கைக் கட்டுப்பாடுகள், அதிகரித்துவரும் பணவீக்கம் எல்லாம் சேர்ந்து இந்தியப் பொருளாதாரத்தை 2022-23ஆம் ஆண்டில் பின்னடையச் செய்திருந்தாலும், வளர்ந்துவரும் நாடுகளில் முதன்மை நாடாக வளர வாய்ப்புள்ளது.

பன்னாட்டு வர்த்தகச் சூழல் இந்தியாவுக்குச் சாதகமாக இல்லையென்றாலும், அதன் பேரியல் பொருளாதாரக் கட்டமைப்புகள், வளர்ந்துவரும் நாடுகளோடு ஒப்பிடும்போது வலுவான நிலையில் உள்ளது. அதன் தனித்துவமான உள்நாட்டுச் சந்தைக் கட்டமைப்பு, பன்னாட்டு வாணிபப் போக்குகளில் பெரிய பாதிப்புகள் உருவாகாமல் தடுக்கும்” என இந்தியாவுக்கான உலக வங்கி இயக்குநர் அகஸ்டே டானோ குவாமே அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பொருளாதாரத்தில் 1% பாதிப்பு ஏற்பட்டால், அது இந்தியப் பொருளாதாரத்தில் 0.4% பாதிப்பையே உருவாக்கும். மற்ற வளரும் நாடுகளில், அது 1.5% பாதிப்பை உருவாக்கும். 2020இல் 642.4 பில்லியன் டாலராக இருந்த நாட்டின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு, இப்போது 528.37 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இவ்வாறு அந்நியச் செலாவணி பற்றாக்குறை அதிகரித்திருந்தாலும், அது அந்நிய நேரடி மூலதன வருகையின் மூலம் சரிசெய்யப்படுகிறது.

டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% குறைந்து, ஒரு டாலருக்கு 83ரூபாயாக அதிகரித்தது. இதனைத் தடுக்க, இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இதன் காரணமாக, நமது இறக்குமதிப் பண்டங்களின் விலை அதிகரித்துள்ளது. ஏற்றுமதி வருவாய் குறைத்துள்ளது. இது அந்நியச் செலாவணி கையிருப்பை மேலும் குறைத்துள்ளது. பன்னாட்டுச் சந்தையில் பெட்ரோலியப் பொருட்களின் விலையில் நிச்சயமற்ற தன்மை நீடிக்கிறது. இதன் காரணமாக, 2022 மார்ச் மாதம் 1.5%ஆக இருந்த வர்த்தகப் பற்றாக்குறை, அக்டோபர் மாதத்தில் 2.8% ஆக உயர்ந்துள்ளது.

2022 ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை கேட்டு விண்ணப்பித்தவர்களின் 1.5 கோடி மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பெருந்தொற்றுக் காலத்தில் வேலையிழந்த 2.1 கோடிப் பேர், இன்னும் மீள வேலைகளைத் தேடிக்கொள்ள முடியவில்லை. பெருந்தொற்றுக் காலத்தில் உலகம் முழுவதும் வேலையிழந்த 7 கோடிப் பேரில், இந்தியர்கள் மட்டும் 5.6 கோடிப் பேர்.

உலக பசிபிக் குறியீட்டில் 121 நாடுகளில் இந்தியாவின் இடம் 107. மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் 191 நாடுகளில் 132ஆவது நாடாகத் தொடர்ந்து மிகவும் பின்தங்கியுள்ளோம். ஒட்டுமொத்தப் பணவீக்க விகிதம் 7.4% என்றாலும், தானியங்களின் விலைவாசி உயர்வு 11.53%. மசாலாப் பொருட்களின் விலை ஏற்றம் 16.5%. காய்கறிகள் விலை உயர்வு 16.86% போன்றவை கவனத்தில் கொள்ளத்தக்கவை. பல்வேறு உணவு தானியங்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை மிகக் குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அரசு எடுத்த முயற்சிகள், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மீட்டெடுக்கவில்லை. தனியார் நுகர்வு-செலவு 7.9%இலிருந்து, 6.7% ஆகக் குறைந்துள்ளது. அரசின் பொதுச் செலவுகள் 2.6%இலிருந்து 5.1% என இருமடங்கு அதிகரித்துள்ளது. மொத்த நிலையான மூலதன ஆக்கம் 15.8%இலிருந்து சரிபாதியாகக் (8.2%) குறைந்துள்ளது. நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி இரண்டும் மூன்று மடங்கு வீழ்ச்சியடைந்துள்ளன. ஏற்றுமதி 24.3%இலிருந்து வெறும் 9%க்கும் இறக்குமதி 35.5%இலிருந்து 10.2%க்கும் வீழ்ந்துள்ளன. வேளாண் துறையில் சற்று ஏற்றம் இருந்தாலும் (3%இலிருந்து 3.6%ஆக), தொழில் துறை வளர்ச்சியும் (10.3%இலிருந்து 5.8%ஆக) பாதியாகக் குறைந்துள்ளது.

இந்த ஆண்டின் வளர்ச்சியை வேகப்படுத்துவதில் இவ்வளவு சிக்கல்கள் இருந்தாலும் ஒட்டுமொத்த நிதிக் கொள்கையின் வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய தளங்களை விரிவடையச் செய்துள்ளது. எதிர்வரும் காலங்களில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம் என்கிறது உலக வங்கி அறிக்கை.

“உலகளாவிய வர்த்தகச் சூழ்நிலைக்குத் தக்கவாறு உருவாக்கப்பட்ட கொள்கைகள் உலகப் பொருளாதாரச் சவால்களைச் சந்திப்பதற்கு ஏதுவாக இருக்கின்றன. அத்தோடு உள்நாட்டுச் சவால்களைச் சந்திக்கவும் அது போதுமானதாக இருக்கிறது” என உலக வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் துருவ் சர்மா கூறுகிறார்; பொறுத்திருந்து பார்ப்போம்! டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, கடந்த ஆண்டைக் காட்டிலும் 10% குறைந்து, ஒரு டாலருக்கு 83 ரூபாயாக அதிகரித்தது. இதனைத் தடுக்க, இந்திய அரசு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. - நா.மணி பொருளாதாரத் துறைத் தலைவர் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி, தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

To Read in English: Ups and Downs of Indian economy in 2022

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x