Published : 18 Nov 2022 06:47 AM
Last Updated : 18 Nov 2022 06:47 AM
தமிழின் தனிப்பெரும் தத்துவவாதி பெரியார் ஈ.வெ.ராமசாமி என்றால் பலரும் ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். அவர் கருத்துகளை ஏற்றுக்கொள்ள மறுப்பதல்ல; அவர் ஒரு சிந்தனையாளர் என்பதையே ஏற்றுக்கொள்ளத் தயங்குவார்கள். அதற்கான காரணம், தத்துவப் பரப்பின் விகாசத்தை உணராத தன்மைதான் என்று கூறலாம். காரணம், ஒரு சிலருக்குத் தத்துவம் பிடிக்கும்; பெரியாரைப் பிடிக்காது. வேறு சிலருக்குப் பெரியாரைப் பிடிக்கும்; தத்துவம் என்றால் ஏதோ தேவையற்ற பிரச்சினை என்று நினைப்பார்கள்.
என்னுடைய அணுகுமுறையில் தத்துவம் என்பது ஒரு சிந்தனைப் பயிற்சி. பல்வேறு அம்சங்களைக் குறித்து இடையறாத கேள்விகளை எழுப்புவது; தொடர்ந்து சிந்திப்பது. இந்தத் தொடர் செயல்களின் மூலம் இரண்டு அம்சங்கள் நிகழும். ஒன்று, நாம் ஒவ்வொரு தருணத்திலும் சில கருத்துகள் உருவாகக் காண்போம். இவ்விதம் கருத்துகளை ஆக்குவதால், நாம் ஒரு கருத்தாக்க விளைநிலத்தை உருவாக்குவோம். மற்றொரு புறம் என்ன நிகழும் என்றால், அந்தக் கருத்துகளின் உட்தொடர்பு ஒரு கட்டுமானத்தை உருவாக்கும். இதனை architectonic என்று அழைப்பார்கள். அது போன்ற நிலைகளை எட்டுவதற்குத் தொடர்ச்சியான தீவிரப் பயிற்சி அவசியம். இது வாழ்வனுபவங்களைப் பற்றிச் சிந்திப்பதால் மட்டுமே முழுமையாகச் சித்திக்காது; ஏற்கெனவே உருவாகியுள்ள சிந்தனைக் கட்டுமானங்களை அறிவது, பயில்வது, பயிற்சி செய்வது ஆகியவற்றின் மூலமே உருவாகும்.
பெரியார் இவ்விதம் தொடர்ந்து சிந்தித்தவர் என்பதற்கான ஆதாரங்கள் அவருடைய பேச்சுகளிலும், செயல்களிலும் நீக்கமற விரவியுள்ளன. ஆனால், அவருடைய வெளிப்பாடு என்பது சம்வாதத் தொனியில் அமைந்திருக்கும் என்பதால், பலரும் அதன் உட்கிடையைப் புரிந்துகொள்வதில்லை. உதாரணமாக, பெண்கள் அவர்களுக்கு விதிக்கப்பட்ட தளைகளிலிருந்து விடுதலை பெற வேண்டுமானால், பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து முதலில் விடுதலை பெற வேண்டும் என்று கூறுவார். அதனால், மனிதகுலம் விருத்தியாகாமல் போய்விடுமே என்றால், அதனால் யாருக்கு என்ன நஷ்டம் என்று கேட்பார். மனிதகுலமே இல்லாமல் போனால் பெண்களும்தானே இல்லாமல் போவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? ஆனால், ஏன் இப்படிக் கேட்கிறார் என்றால், பெண்கள் குறித்த ஒரு தோற்றவியல் சாராம்சமாக (ontological essence) அவர்கள் பிள்ளை பெறுவது தவறு என்பதையும், அதன் மூலம் அவர்களை ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களாக வைத்திருப்பதையும் உணர்த்துவதற்காகவே அப்படிக் கேட்கிறார்.
தத்துவப் பயிற்சி: விடுதலை என்றால் என்ன என்பது குறித்து அவர் தொடர்ந்து மேற்கொண்ட சிந்தனைப் பயிற்சியின் காரணமாகத்தான், அவர் இப்படியான ஒரு கருத்தாக்க விளைநிலத்தை உருவாக்கினார். அதன் மற்றொருபுறம் சுயமரியாதை என்ற கருத்தாக்கக் கட்டுமானத்தையும் உருவாக்கினார். காந்தியையும் பெரியாரையும் ஒப்புநோக்கும்போது மற்றொரு துல்லியமான, நுட்பமான வேறுபாட்டை நாம் காணலாம். காந்தி வாழ்வியல் ஞானத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இதனை ஆங்கிலத்தில் wisdom என்பார்கள். கிராமத்துப் பெரியவர் ஒருவர், இரண்டு குடும்பங்களுக்கு இடையிலான பிரச்சினைக்குப் பக்குவமான தீர்வினை எடுத்துரைப்பதுபோல வாழ்வியல் ஞானம் இயங்கும். சிந்தனைப் பயிற்சி என்பது அதுவல்ல. அது தொடர்ந்து அகழ்ந்துகொண்டே செல்வது.
காந்தியையோ பெரியாரையோ புரிந்துகொள்ள, அவர்களுக்குள் செயல்படும் தத்துவார்த்த அடிப்படைகளைப் புரிந்துகொள்ளவே நமக்கு ஆழ்ந்த தத்துவப் பயிற்சி தேவை. அது என்ன பயிற்சி என்றால், இருத்தலின் (Existence) மீதான விசாரணை எனலாம். இது மனிதனின் நரம்பு மண்டலம் நினைவாற்றலைச் சாத்தியமாக்கியவுடன் இருப்பையும், இன்மையையும் இணைத்துப் பார்க்கும் சாத்தியம் உருவானவுடன் தொடங்கியதாகும். ஏன் ஏதொன்றும் இருக்கிறது, எதுவுமே இல்லாமல் போகாமல் (why is there something instead of nothing) என்ற கேள்வியின் உள்முரண் சிந்தனையின் தொடக்கப்புள்ளி என்று கொள்ளலாம். இத்தகைய சிந்தனைப் பயிற்சி எல்லோருக்கும் தேவையா என்றால், அப்படியெல்லாம் இல்லை என்றுதான் கூற வேண்டும்.
வன்முறைக்கு எதிராக...: உடற்பயிற்சி எல்லாருக்கும் தேவையா என்பதுபோலத்தான். ஆனால், உடற்பயிற்சி ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதுபோலத்தான், சிந்தனைப் பயிற்சி மன ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்பதும். எப்படி உடற்பயிற்சி என்பது வன்முறை நோக்கிற்குப் பயன்படுகிறதோ, பிறர்மீது ஆதிக்கம் செலுத்தும் அரசியலுக்குப் பயன்படுகிறதோ, அதேபோல சிந்தனைப் பயிற்சியும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவும், வன்முறை நோக்கிற்கும் பயன்படும். காந்தி, பெரியார் இருவருமே வன்முறையை ஏற்கவில்லை. அதனைத் தவிர்த்த சகவாழ்வினையே விரும்பினார்கள் என்பது முக்கியமானது. அந்த விதத்தில் நாம் பயிற்சியை எப்படி அணுகுவது என்பது முக்கியமான கேள்வி.
உடற்பயிற்சியை எடுத்துக்கொண்டால், அது போருக்குச் செல்லத்தான் உதவும் என்பதல்ல. விளையாட்டுக்களில் ஈடுபடவும் உதவும். விளையாட்டிலும் மோதல் இருக்கும்; வெற்றி, தோல்வி இருக்கும். ஆனால், அதனால் யாரும் யாருக்கும் அடிமையாக மாட்டார்கள். யாரும் யாரையும் கொல்லவும் மாட்டார்கள். விளைவு என்னவாக இருந்தாலும் யாருக்கும் பாதிப்பில்லை என்ற ஆட்டம்தான் விளையாட்டு. அதேபோல சிந்தனைப் பயிற்சியும் உண்மைகளை நிறுவிப் பிற உண்மைகளை மறுதலித்து வன்முறையைப் பெருக்காமல், உண்மை உருவாக்கத்தின் உள்முரண்களை உணர்ந்து இயங்கும்போது அது வன்முறையைத் தவிர்க்கும். சகவாழ்வைச் சுமுகமாக்கும். கருத்துகளில் எதிர்நிலை கொண்டோருடன் உரையாடுவதை, உறவாடுவதைச் சாத்தியமாக்கும். இப்படிப்பட்ட முதிர்ச்சியுடன் சிந்தனைப் பயிற்சியைப் புரிந்துகொள்ள உதவும் நூல்கள் உண்டா என்றால், பல சீரிய நூல்கள் உள்ளன.
மூன்று ஆங்கில நூல்களை ஆர்வம் உள்ளவர்கள் முயன்று பார்க்கலாம். ஒரு நூல் பண்டைய நூல். பொ.ஆ. இரண்டாம் நூற்றாண்டில் கிரேக்கத்தில் வாழ்ந்த செக்ஸ்டஸ் எம்பிரிகஸ் என்ற பைரோனிய ஐயவாதியின் முக்கியச் சிந்தனைத் தொகுப்பு; Philip P.Halle என்பவர் தொகுத்தது: ‘Sextus Empiricus: Selections from the Major Writings on Scepticism, Man and God’ என்பது நூலின் பெயர். எனக்குள் பெரும் வெளிச்சத்தைப் பாய்ச்சிய நூல். இரண்டாவது நூல், பிரெஞ்சுத் தத்துவவாதியும், உளப் பகுப்பாய்வாளருமான இருவர் Gilles Deleuze & Felix Guattari சேர்ந்து எழுதிய ‘What is Philosophy?’ என்ற நூல். வாசிக்கச் சற்றே கடினமானது என்றாலும், மிகவும் தீர்க்கமான சிந்தனையை உள்ளடக்கிய நூல். மூன்றாவது சற்றே எளிமையான, தரிசனங்கள் நிரம்பிய நூல். சமகால இத்தாலியத் தத்துவவாதியான Giorgio Agamben எழுதிய ‘The Open: Man and Animal’ என்ற நூல். விலங்குகளிடமிருந்து மனிதன் வேறுபடுவதாக நாம் நினைக்கத் தொடங்கியதன் காரணங்களை ஆராய்வதன் மூலம் தத்துவத்தின் எல்லைகளைப் பேசும் சுவாரசியமான நூல். இந்த நூல்களையும், இதைப் போன்ற நூல்களையும் ஒரே முறையில் படித்து முடித்துவிட முடியாது. தொடர்ந்து பயில வேண்டும். அதுவே சிந்தனைப் பயிற்சி. நவம்பர் 17: உலக தத்துவ நாள் - ராஜன் குறை கிருஷ்ணன் பேராசிரியர், ‘மானுட யத்தனம் என்றால் என்ன?’ நூலாசிரியர், தொடர்புக்கு: rajankurai@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT