Published : 31 Oct 2022 06:47 AM
Last Updated : 31 Oct 2022 06:47 AM
‘கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்பது முன்னோர் வாக்கு. ஆனால், ஓர் ஊரே திருக்கோயில் வடிவமாகியிருப்பது கும்பகோணத்தில். காசியைப் போலவே கும்பகோணத்தையும் எட்டுத் திசைகளில் எட்டு பைரவர்கள் காக்கின்றனர் என்பது ஆன்மிக நம்பிக்கையாகும். பதினைந்து ஏக்கர் பரப்பளவுகொண்ட மகாமகக் குளத்தில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் புனித நீராடுகிறார்கள். பாடல்பெற்ற சைவத் தலங்களாலும் மங்களாசாசனம் பெற்ற வைணவத் தலங்களாலும் நிறைந்தது கும்பகோணம்.
வாத்தியங்களில் ராஜவாத்தியம் என்றழைக்கப்படும் நாகஸ்வர இசையை இந்த இசைவாணர்கள் காற்றில் தவழவிட்டு வளர்த்துவருகிறார்கள். 14ஆம் நூற்றாண்டிலும் அதன் பின்னரும் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளிலும் எழுதப்பட்ட செப்பேடுகளிலும் நாகஸ்வரக் கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட பரிசில்கள் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. நீண்ட நெடிய பாரம்பரியப் பண்புகளைக் கொண்ட தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்றுள்ள பெருமைக்குரியது நாகஸ்வரம். கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், கெளதமேஸ்வரர்,ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர் உள்ளிட்ட சைவத் தலங்கள் பன்னிரண்டும் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, அனுமார், ராஜகோபாலசாமி உள்ளிட்ட வைணவத் தலங்கள் ஏழுமாக 19 ஆலயங்கள் நாகஸ்வர, தவில் கலைஞர்களின் இசையால் ஒருகாலத்தில் நிரம்பியிருந்தன. ஆனால், தலைமுறைகளாக வாசித்துவந்தவர்கள், பாரம்பரிய இசை காக்கப்பட வேண்டும் என்பதற்காக ஆதி கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சுந்தரேஸ்வரர், சக்கரபாணி கோயில்களில் தற்காலிகப் பணியில் மிகக் குறைந்த ஊதியத்தில் நாகஸ்வரம் தவில் வாசித்துவருகிறார்கள். எஞ்சிய சாரங்கபாணி, ராமஸ்வாமி, கோபாலன், வரதராஜபெருமாள், சோமேஸ்வரன், பாணபுரீஸ்வரர், கம்பட்ட விஸ்வநாதர், காளீஸ்வரன், கெளதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பிரம்மபுரீஸ்வரர் போன்ற திருக்கோயில்களில் நாகஸ்வர தவிலின் ஓசை அறவே கேட்பதில்லை. கோயில் நகரமான கும்பகோணத்தில் மீண்டும் பாரம்பரிய இசை காக்கப்பட வேண்டும். அதற்கு இசை ஆர்வலர்களும் தமிழக அரசும் ஆவன செய்ய வேண்டும். அடுத்த தலைமுறை இசைக் கலைஞர்கள் பாரம்பரிய இசைக் கலையைக் காப்பதற்காக 17 அரசு இசைப் பள்ளிகளிலும் நான்கு இசைக் கல்லூரிகளிலும் நாகஸ்வரத் தவிலை இசைப்பதற்கான பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். மூத்த கலைஞர்களுக்கே வாழ்வாதாரம் கேள்விக்குறியானால், அடுத்த தலைமுறை எந்த நம்பிக்கையில் அந்தக் கலையைக் கையிலெடுக்கும் என்பதை அரசு எண்ணிப் பார்க்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT