Published : 21 Oct 2022 06:52 AM
Last Updated : 21 Oct 2022 06:52 AM
கேரளத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அதையொட்டி, தமிழ்நாட்டிலும்கூட மந்திரம், மாந்திரீகத்தில் ஈடுபட்டதாகச் சிலர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். சென்ற ஆண்டுகூட அசாம் மாநிலத்தில் பெற்றோரே தங்கள் குழந்தைகளை நரபலி கொடுத்த சம்பவம் பரபரப்பாகப் பேசப்பட்டது. உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடப்பதைக் கேள்விப்படுகிறோம்.
அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சி எனப் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில்கூடப் பிற்போக்கான, மூடத்தனமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நவீன அறிவியலின் அத்தனைப் பயன்களையும் அனுபவித்துக்கொண்டே, இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகளையும் மக்கள் எப்படிஏற்றுக்கொண்டிருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது. புறவுலகில் எத்தனை மாற்றங்கள் நடந்தாலும் மனிதன் தனது அகத்தைப் பொறுத்தவரையில் இன்னமும் பெரிதும் மாற்றமடையாமல்தான் இருக்கிறான் என்பதையே இந்தச் சம்பவங்கள் சொல்கின்றன. மந்திரம், மாந்திரீகம், நரபலி போன்ற மூடநம்பிக்கைகள் என்பவை பொதுவாகவே நமது கல்விக்கும், பொருளாதார நிலைக்கும் அப்பாற்பட்டவை. இந்த நம்பிக்கைகளும், சம்பவங்களும் ஏறத்தாழ அனைத்து நாடுகள், இனங்கள், மதங்களிலும் இருக்கின்றன. அறிவியல்ரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் மிகவும் வளர்ச்சியடைந்த மேற்கத்திய நாடுகளிலும்கூட இப்படிப்பட்ட மூடநம்பிக்கைகள் பெருவாரியாக இருக்கின்றன. அமெரிக்காவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு ஒன்று, அமெரிக்க மக்கள்தொகையில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவருக்குப் பேய்கள், முன்ஜென்மம் போன்றவைமீது நம்பிக்கைகள் இருக்கின்றன என்கிறது.
மூடநம்பிக்கைகள் ஏன்?: அறிவியலுக்கும் தர்க்கத்துக்கும் அப்பாற்பட்ட இந்த நம்பிக்கைகளை மக்கள் கொண்டிருப்பது ஏன்? அந்த நம்பிக்கைகளின் விளைவாக நரபலியிடுவது போன்ற கொடூரமான செயல்களில் ஈடுபட என்ன காரணம்?
பொதுவாகவே நாம் கொண்டிருக்கும் அவ்வளவு நம்பிக்கைகளும் தர்க்கத்திற்கு உட்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அன்றாட வாழ்வில் நாம் கொண்டிருக்கும் நிறைய நம்பிக்கைகள் தர்க்கத்துக்குச் சற்றும் பொருந்தாதவை. உதாரணத்துக்கு, நாம் செய்யக்கூடிய சடங்குகள் அனைத்துக்கும் தர்க்கரீதியான விளக்கங்கள் எதுவும் இல்லை. ஆனாலும் அதை நாம் தொடர்ச்சியாக மேற்கொண்டுவருகிறோம். தர்க்கத்துக்கு அப்பாற்பட்ட ஒன்றை மனித மனம், எப்போதும் எதிர்பார்ப்பது அதற்கு முக்கியமான காரணம்.
மனம் ஏன் எதிர்பார்க்கிறது?: நிறைய நேரத்தில் ஒரு நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான அறிவியல்பூர்வமான எந்த வழிகளும் தெரியாத நிலையில், ‘ஏதாவது மாயம் நடந்து, இந்த நெருக்கடியிலிருந்து நான் வெளியேறிவிட மாட்டேனா?’ என மனம் எதிர்பார்க்கத் தொடங்கிவிடுகிறது. இப்படிப்பட்ட பலவீனமான மனம் தர்க்கங்களை வெறுக்கிறது, உண்மைகளை ஏற்க மறுக்கிறது. இந்த மனநிலையில் உள்ள ஒருவரின் மனதை மிகச் சுலபமாக மூளைச்சலவை செய்து மாற்றிவிட முடியும். பெரும்பாலும் இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருக்கும் பலவீனமான மக்களைக் குறிவைத்தே மூடநம்பிக்கைகள் சார்ந்த பெரும்பாலான தீர்வுகள் முன்வைக்கப்படுகின்றன. இதிலிருந்து மீட்பதாக மந்திர, மாயக்காரர்கள் விரிக்கும் வலைகளில் இவர்கள் மிகச் சுலபமாக மாட்டிக்கொண்டுவிடுகிறார்கள்.
யார் பாதிக்கப்படுகிறார்கள்?: சமூகப் பாதுகாப்பு அதிகம் இல்லாத எளிய மனிதர்களே நரபலி போன்ற கொடூரமான சம்பவங்களுக்குப் பெரும்பாலும் பலியாகின்றனர். ஏதேனும் ஒரு பெரிய நெருக்கடியிலிருந்து விடுபட முடியாத நிலையில் இருப்பவர்கள் சக மனிதர்களின் மீதும், சமூகத்தின் மீதும் நம்பிக்கையிழக்கும் நிலைக்குச் செல்கின்றனர். அப்போது தர்க்கங்களுக்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் அவர்களுக்கு ஆசுவாசம் அளிப்பதாக இருக்கின்றன. இவர்களே பெரும்பாலும் மதகுருமார்கள், மந்திரவாதிகள், பேயோட்டும் ஆசாமிகள் போன்றோரை நாடிச் செல்கின்றனர். ஏனென்றால், தங்களது நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு இவர்களை நம்புவதைத் தவிர வேறு எந்த வழியும் அவர்களுக்குத் தென்படுவதில்லை.
இப்படிப்பட்ட பலவீனமான மனிதர்களின், உடைந்த மனநிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் மூன்றாம் நபர்கள் தங்களது சக்தியை, வீரியத்தை, மகிமையைப் பரிசோதிப்பதற்கான எலிகளாக இவர்களைப் பயன்படுத்திக்கொள்கின்றனர். அதோடு, அந்த நெருக்கடியுடன் எந்தத் தொடர்பும் இல்லாத எளிய மனிதர்களின் உயிரிழப்பு வரை மோசமான பாதிப்புகளுக்கு இட்டுச்சென்றுவிடுகிறது. இதுபோன்ற சம்பவங்கள் செய்திகளாக வெளிப்படும்வரை நெருக்கமாக இருப்பவர்கள் அவர்களின் பிரச்சினைகளைக் கருத்தில் கொள்வதேயில்லை.
யார் இதைச் செய்கிறார்கள்?: அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத இந்த மூடநம்பிக்கைகள் பொதுவாக எல்லோருக்கும் இருக்கின்றன என்றாலும் இந்த மூடநம்பிக்கைகளின் விளைவாக ஒருவர் எந்த அளவுக்குச் செல்கிறார் என்பதைப் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. அதுவும் நரபலியிடுவது போன்ற விபரீதமான முடிவினை எடுக்கும் நிலைக்குச் செல்வதற்குப் பின்னால் சமூகரீதியாகவும், உளவியல்ரீதியாகவும் பல காரணங்கள் இருக்கின்றன.
நரபலியிடுவது போன்ற கொடூரமான செயல்களைச் செய்யும் நபர்கள் பெரும்பாலும் மனிதப் பண்புகளிலிருந்து பிறழ்வடைந்தவர்களாக இருப்பார்கள். சக மனிதர்களிடம் இருந்து விலகி விசித்திரமான நம்பிக்கைகளையும் நடவடிக்கைகளையும் கொண்டிருப்பார்கள். பொதுச் சமூகத்திலிருந்து அவர்கள் பெரும்பாலும் விலகியே இருப்பார்கள். ஒரு சமூகத்தின் அடிப்படை விழுமியங்கள், கருத்தாக்கங்கள், நோக்கங்கள் எதை நோக்கி இருக்கின்றனவோ அதன் அடிப்படையிலேயே பெரும்பாலான மக்களின் மனநிலையும் இருக்கின்றது.
தீர்வு என்ன?: பழமைகளைக் கடந்து அறிவியல்பூர்வமான வளர்ச்சியை மட்டுமே ஏற்றுக்கொண்டதாக, அதன் தொன்மங்களில் உள்ள பிற்போக்கான எண்ணங்களுக்கு எதிராகச் செயல்படுகிற ஒரு சமூகத்தில் மக்களிடம் நிலவும் மூடநம்பிக்கைகளின் தீவிரம் குறைவாகவே இருக்கும். மூடநம்பிக்கைகள் இருந்தாலும்கூட அவற்றின் விளைவாக ஏற்படும் விபரீதமான குற்றச்செயல்கள் குறைவாகவே இருக்கும்.
அதேபோலத் தனிப்பட்ட நபரின் மனநிலை சீரற்று இயங்கும்போது அங்கும் அவற்றைக் கையாள அறிவியல்பூர்வமான வழிமுறைகளே பிரதானமாக இருக்க வேண்டும். மனம் மீதும் அதன் ஆரோக்கியத்தின் மீதும் வெளிப்படைத்தன்மையும், அறிவியல் பார்வையும் இருக்கும் சமூகத்தில், அத்தனை விதமான மனநெருக்கடிகளுக்குமான தீர்வுகளும் ஆரோக்கியமான வழிகளிலேயே பெறப்படும். அந்த வழிமுறைகளைப் பரவலாக்கி, உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் முக்கியமான கடமை. இதுவே இப்போதைக்கு இதன் தீர்வாக இருக்க முடியும்.
சிவபாலன் இளங்கோவன்
பேராசிரியர்,
பாலாஜி மருத்துவக் கல்லூரி
தொடர்புக்கு: sivabalanela@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT