Published : 02 Sep 2022 06:10 AM
Last Updated : 02 Sep 2022 06:10 AM

சுதந்திரச் சுடர்கள் | ஐந்தாண்டுத் திட்டங்களே நாட்டை முன்னேற்றின!

கே.என். ராஜ்

முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான ஆவணங்களை திட்டக் குழுவின் துணைச் செயலாளர் தர்லோக் சிங் தயாரித்தார். எங்களுக்கு அதிகம் பழக்கமில்லாத துறைகளைப் பற்றியெல்லாம் அவரே ஆவணங்களைத் தயார்செய்தார்.

மிகப் பெரிய சோஷலிஸ்ட் தலைவரான அசோக் மேத்தா, ஒரு நாள் எங்கள் அலுவலகத்துக்கு வந்து, தர்லோக் சிங் தயாரித்த ஆவணங்களையெல்லாம் பார்த்துவிட்டு, ‘வேலைவாய்ப்பு தொடர்பாகத் தனி ஆவணம் ஏதும் இல்லையே?’’ என்று கேட்டார். அதற்கு மேல் எதையும் அவர் கேட்கவில்லை.

ஐந்தாண்டுத் திட்டம் குறித்துத் திட்டமிட்ட எங்களுக்கு இவையெல்லாம் எந்த அளவுக்கு, எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று மேலோட்டமாகக்கூட அனுமானம் ஏதுமில்லாமல்தான் இருந்தது. வேலைவாய்ப்பு ஏற்பட்டாலும் அது குறைவாகத்தான் இருக்கும் என்றே நினைத்தோம்.

முதலீடும் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்போதுதான் வேலைவாய்ப்பு கணிசமாக ஏற்படும் என்று பிற நாடுகளின் அனுபவங்களிலிருந்து தெரிந்து வைத்திருந்தோம். இதற்கெல்லாம் சற்றும் அஞ்சாமல் தர்லோக் சிங், மீண்டும் உட்கார்ந்து வேலையில்லாத் திண்டாட்டம் குறித்தும் யோசித்து ஒரு தனி ஆவணத்தைத் தயாரித்துவிட்டார்!

அதுதான் முதலாவது ஐந்தாண்டுத் திட்டம் என்பதால் வெவ்வேறு பிரிவுகளிலிருந்து கோரிக்கைகள், ஆலோசனைகள் வாயிலாக எங்களுக்கு நிறைய அழுத்தங்கள் தரப்பட்டன. நாங்கள் அனைவருமே வேலை மும்முரத்திலேயே எல்லா நேரமும் இருந்தோம். கால நேரம் பார்க்காமல் மணிக்கணக்கில் வேலை செய்தோம். இவற்றுக்கிடையில சில ருசிகரமான சம்பவங்களும் நடைபெற்றன.

சில சுவாரசியங்கள்

ஒரு முறை ராஜஸ்தானுக்குச் சென்று அங்கிருந்த சமஸ்தானத்தின் நிதியமைச்சரை நான் சந்திக்க வேண்டியிருந்தது. அந்த நிதியமைச்சர் அறைக்குள் நடந்துவந்து எனக்கு முன்னால் முழந்தாளிட்டு ஐந்தோ, பத்தோ ரூபாய் நோட்டுத் தாள் ஒன்றை என் காலடியில் வைத்தார். மத்திய அரசின் ஆணைக்குக் கட்டுப்பட்டதே தங்களுடைய சமஸ்தானம் என்பதை சம்பிரதாயபூர்வமாக உணர்த்தவே அவர் அப்படிச் செய்திருக்கிறார்.

அப்போது எனக்கு 26 அல்லது 27 வயதுதான் இருக்கும். அந்த ரூபாயை என்ன செய்ய வேண்டும் என்றுகூட எனக்குத் தெரிந்திருக்கவில்லை. அப்போதுதான் இன்னமும் ராஜாக்கள், தலைக்கட்டுகள், ஜமீன்தார்கள் செல்வாக்கு குறையாத நாட்டுக்குத்தான் நாங்கள் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பது உறைத்தது.

முதலாவது ஐந்தாண்டுத் திட்ட ஆவணம் முழுமையாகத் தயாரான உடன் அதில் கையெழுத்து வாங்குவதற்கான நாள், நேரம் ஆகியவற்றை நிர்ணயிக்க வேண்டிய பொறுப்பு குல்சாரிலால் நந்தாவிடம் விடப்பட்டது. ஏழு என்கிற எண்தான் ராசி என்பதில் நந்தா உறுதியாக இருந்தார்.

முதலாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் இறுதி ஆவணத்தில் திட்டக்குழுத் தலைவரும் பிரதமருமான ஜவாஹர்லால் நேருவிடம் கையெழுத்து வாங்குவதற்கு உரிய நாள், 1951 ஜூலை மாதம் 7 என்று அவர் தீர்மானித்திருந்தார். இப்படி எல்லாமே ஏழாக இருந்தது. ஆனால், மணியும் எப்படி ஏழாக இருக்க முடியும் என்கிற கவலை ஏற்பட்டது.

காலை ஏழு மணிக்கே பிரதமரிடம் கையெழுத்து வாங்கலாம் என்றால், அந்த நேரம் வேறொரு முக்கிய வேலைக்கு அவர் நேரம் ஒதுக்கிவிட்டார். அதை மாற்றுமாறு நேருவிடம் கேட்கும் துணிச்சல் நந்தாவுக்கில்லை. பிறகு பிற்பகல் 3.30 மணியை அவர் தேர்ந்தெடுத்தார். ஏன் என்று நாங்கள் கேட்டோம், ‘அது ஏழில் பாதி’ என்று அவர் பதில் அளித்தார்!

பள்ளிக்கூட ஆசிரியரைப்போல…

உலக வரலாறு குறித்துத் தெளிவான கண்ணோட்டம் கொண்டிருந்த நேரு, ஐந்தாண்டுத் திட்ட ஆவணப்படி வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும் என்பதைப் பெரிதும் வரவேற்றார். இந்த ஆவணத்தை அனைத்து அமைச்சர்களும் முழுதாகப் படிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆனால் பெரும்பாலானவர்கள் படிக்காமல் தவிர்த்துவிடுவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. எனவே, முழு அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி, ஆவணத்தில் முக்கியம் என்று கருதப்பட்ட பகுதிகளை அவரே உரத்து வாசிப்பார். சில நிமிஷம் கழித்து கண்ணாடியைக் கழற்றிவிட்டு, “ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்பார். யாரும் பேசமாட்டார்கள், முழு அமைதியே நிலவும். மீண்டும் படிக்கத் தொடங்குவார்.

அறிவாளியான மத்திய அமைச்சர் ரஃபி அகமது கித்வாய் ஒரு நாள் வேடிக்கை செய்தார். திட்டமிடல் குறித்துப் படித்துக் காட்டினாலும் பிற அமைச்சர்களுக்கு ஏதும் புரியாது என்பது அவருக்குத் தெரியும். நிதியை கிரியா ஊக்கியாகப் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு வாக்கியம் ஆவணத்தில் இருந்தது. ஆங்கிலத்தில் Catyltic agent என்று அதற்குப் பெயர்.

கித்வாய் பிரதமரைப் பார்த்து, பண்டிட்ஜி கேடலிடிக் என்றால் என்ன? கேடகிளிஸ்மிக் (Cataclysmic), கேடஸ்டிராபிக் (Catastrophic) என்றெல்லாம் வார்த்தைகளைக் கேட்டிருக்கிறேன், இது, அவற்றைப் போல ஒன்றா என்று அப்பாவி போலக் கேட்டார். “என்ன ரஃபி, பொது அறிவில் இவ்வளவு பலவீனமாக இருக்கிறீர்களே” என்று நேரு அவருக்குப் பதில் அளித்தார். நல்லதொரு வார்த்தையை இப்படித் தவறாகப் புரிந்துகொண்டுவிடுவார்களோ என்றும் அச்சப்பட்டார்.

உடனே நிதியமைச்சர் சிந்தாமணி தேஷ்முக்கைப் பார்த்து, “நீங்கள் அறிவியல் படித்தவர், நீங்கள் ஏன் இதைப் பற்றி அவர்களுக்கு விளக்கக் கூடாது?” என்று கேட்டார்.

மத்தாயின் தவறான முடிவு

திட்டமிடல் இல்லாமலே நாட்டை முன்னுக்குக் கொண்டு வந்திருக்க முடியாதா? மத்தியத் திட்டக்குழு அமைக்கப் படுவதாக 1950 மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட உடனேயே அப்போது நிதியமைச்சராக இருந்த ஜான் மத்தாய், அந்தப் பதவியை ராஜிநாமா செய்துவிட்டார். திட்டமிடல் தேவையற்றது, வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மூலமே வளர்ச்சியை எட்டிவிட முடியும் என்று அவர் கருதினார். சோவியத் அனுபவங்கள் குறித்து, அவருக்குக் கசப்பான நினைவுகளும் இருந்திருக்க வேண்டும். திட்டமிடல் இருந்தாலும் அதை சோவியத் பாணியில் அமல்படுத்தக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

ஜான் மத்தாயின் முடிவு தவறானது என்றே இப்போதும் கருதுகிறேன். வளர்ச்சி தொடர்பாக நீண்ட கால இலக்குகளை நிர்ணயிப்பதும், அதற்காக நிதியை ஒதுக்குவதும், ஆண்டுதோறும் பட்ஜெட்டில் ஒதுக்கிச் செலவிடுவதைவிட நிச்சயம் மாறுபட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிதி போதவில்லை என்கிற காரணத்துக்காகவே முக்கியமான திட்டங்களை ஒத்திப்போட்டுக் கொண்டே வருவோம்.

மிகப்பெரிய உருக்காலைகள், கனரகத் தொழிற்சாலைகள், ராணுவ உற்பத்திக்கான ஆலைகள் எல்லாம் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் பார்த்ததால்தான் சாத்திய மாயின. குறிப்பிட்ட ஓராண்டில் திட்டமிட்டபடி செயல்பட முடியாவிட்டால், அடுத்த ஓராண்டிலோ இரண்டு ஆண்டுகளிலோ அதைச் சரி செய்துவிட முடியும்.

திட்டமிடலைப் பரவலாக்க வேண்டும்

ஐந்தாண்டுத் திட்டங்கள் இப்போதும் பயன் அளிக்கக் கூடியவை என்பதே என் கருத்து. காரணம் அவை வளர்ச்சிக்கான விரிவான இலக்குகளையும் வழிமுறைகளையும் மட்டுமே உருவாக்குகின்றன. மிகத் துல்லியமாக எதையும் செய்வதில்லை. பொருளாதாரத்தை நிர்வகிக்கும் அதிகாரிகள் வெவ்வேறு துறைகளுக்குப் பொறுப்பானவர்கள், அவரவர்களுக்கு அவரவர் துறைகள் மட்டுமே தெரியும்.

எனவே, அவற்றை மட்டுமே முக்கியம் என்று கருதுவார்கள். ரிசர்வ் வங்கி கடன் கொள்கைகளை ஐந்தாண்டுத் திட்ட அணுகுமுறைப்படிதான் மேற்கொள்கிறது. எனவே தொழில், வணிகம், விவசாயம் என்று எல்லாத் துறைகளுக்கும் எவ்வளவு நிதி தேவை என்று அதனால் திட்டமிட முடிகிறது.

திட்டமிடலின் பலன்கள் ஏழைகளுக்கும், வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிவுற்ற மக்களுக்கும் கிடைப்பது அவசியம். அதை ஊராட்சி - மண்டல அளவில் திட்டமிடலை மேற்கொள்ள ஊக்கப்படுத்தி, அமல்படுத்துவதன் மூலம் சாதித்துவிட முடியும். அவ்விதம் செய்வதன் மூலம் திட்ட நடைமுறைகளில் சாமானியர்களையும் பங்கேற்க வைத்துவிட முடியும். இந்த வகையில் கேரளத்தில் நடைபெறும் சோதனை முயற்சிகளின் பலன்கள் ஊக்கம் அளிப்பதாகவே இருக்கின்றன. இதையே நாட்டின் பிற பகுதிகளிலும் கையாண்டு பார்ப்பது சாத்தியம்தான் என்று கருதுகிறேன்.

(கே.என். ராஜ், பொருளியல் அறிஞர். முதலாவது ஐந்தாண்டுத் திட்டக் குழுவில் பணியாற்றியவர்களில் ஒருவர்)

நன்றி: ‘தி இந்து’ ஆவணக் காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x