Published : 20 Aug 2022 07:07 AM
Last Updated : 20 Aug 2022 07:07 AM

சுதந்திரச் சுடர்கள் | சர்வதேச கவனம் ஈர்க்கும் இந்திய நவீன எழுத்து

ஜெயகுமார்

சர்வதேச அரங்கில் ரஷ்ய, ஆங்கில, லத்தீன் இலக்கியங் களுக்குத் தனி இடம் உண்டு. உலகின் கிளாசிக் படைப்புகள் பல இம்மொழிகளில் இயற்றப் பட்டுள்ளன.

இதற்கிடையில் பல்லாண்டுக் காலம் காலனிய ஆட்சியின் பிடியில் இருந்து மீண்ட ஒரு தேசம், சர்வதேச இலக்கிய அரங்கில் தனது இருப்பை உயர்த்துவது என்பது கவனத்திற்குரிய ஒன்று. இந்தியா தனது செழிப்பான பண்பாட்டு, மொழி அறிவால் இதை மிக எளிதாகவும் வியக்கத் தக்க வகையிலும் நிகழ்த்தியிருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியக் கால கட்டத்து எழுத்தாளர்களுக்குப் பிறகு ஒரு புதிய எழுச்சி, இந்திய இலக்கியத்தில் சுதந்திரத்துக்குப் பிறகு உதயமானது. காலனிய ஆட்சியின் முடிவும் இந்தியப் பிரிவினையும் மொழிவாரி மாநிலப் பிரிப்பும் இந்த எழுத்துகளுக்கு அடிப்படையாயின.

குஷ்வந்த் சிங்

இந்தப் பின்னணியில் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி போன்ற புகழ்பெற்ற எழுத்தாளர்கள் உருவாகினர். ரவீந்திரநாத் தாகூர் பல்லாண்டு காலம் முன்பே நோபல் பரிசு பெற்றிருந்தாலும், இந்தியாவின் நிலை குறித்த யதார்த்தமான சித்தரிப்பு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகுதான் சர்வதேச ஆங்கில இலக்கிய அரங்கில் கவனம் பெற்றது.

குஷ்வந்தும் ருஷ்டியும்

புகழ்பெற்ற பத்திரிகையாள ரான குஷ்வந்த் சிங்கின் ‘ட்ரெயின் டூ பாகிஸ்தான்’ நாவல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையை மனோ மஜ்ரா என்னும் ஒரு கற்பனையூரைக் கொண்டு சித்தரிக்கிறது. நாடு துண்டானதால் அதுவரை வாழ்ந்து வந்த ஊரில் இருந்து சீக்கிய-இஸ்லாமிய மக்கள் இருவேறு திசையில் நாடுகடத்தப்படுகிறார்கள்.

பாகிஸ்தானியர்களை, இந்தியர்களை ஒருபோலப் பாதித்த இந்த நிகழ்வை குஷ்வந்த் சிங் தன் தனித்துவமான மொழியால் இயல்பாகச் சித்தரித்திருந்தார்.

குஷ்வந்த் சிங், தனது தடாலடியான பத்தி எழுத்தால் லட்சக்கணக்கான வாசகர்களைப் பெற்றவர். இந்திய ஆங்கில எழுத்துலகில் ஒரு நட்சத்திர எழுத்தாளராகப் போற்றப்பட்டார். இலக்கியம், இதழியல் ஆகிய இரண்டு துறைகளில் தன் திறமையை வெளிப்படுத்தியவர் குஷ்வந்த் சிங்.

சல்மான் ருஷ்டி

இதே இந்தியா - பாகிஸ் தான் பிரிவினையைப் பின்னணி யாகக் கொண்ட ‘மிட்நைட்ஸ் சில்ரன்’ என்னும் நாவல் வழியாக சர்வதேச இலக்கிய அரங்கில் தனிக் கவனம் பெற்றவர் சல்மான் ருஷ்டி. இந்தியா சுதந்திரம் அடைந்த நள்ளிரவில் பிறக்கும் சலீம் சினாய் என்னும் குழந்தையை மையமாகக் கொண்ட இந்த நாவல், மாயயதார்த்த ரீதியில் இந்தியாவின் கதையைச் சொல்கிறது.

இந்த நாவல் சிறந்த நாவலுக்கான புக்கர் பரிசைப் பெற்றது. சல்மான் தன் விவரிப்புக்காகத் தேர்ந்தெடுத்த லத்தீன் அமெரிக்க பாணியை ஒத்த மொழிநடை, சர்வதேச அரங்கில் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. இதே பாணியில் அவர் எழுதிய ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ நாவல் பெரும் புகழையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சர்வதேச அரங்கில் இவரது நாவலின் விற்பனை உரிமையைக் கைப்பற்ற பதிப்பகங் களுக்குள் பெரும் போட்டி நடந்ததன் வழி அவரது எழுத்தின் வல்லமையை உணரலாம்.

கவனம் ஈர்த்த பெண் எழுத்து

ஆங்கில இலக்கிய அரங்கில் மிக உயரிய விருதாகக் கருதப்படும் புக்கருக்கு அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட இந்திய எழுத்தாளர் அனிதா தேசாய். ‘க்ளியர் லைட் ஆஃப் டே’ என்னும் இவரது நாவல் இந்தியப் பிரிவினையை மையமாகக் கொண்டது. இவரது அடுத்த நாவலான ‘இன் கஸ்டடி’ உருது கவிதைகளின் மீது மோகம் கொண்ட இந்திப் பேராசிரியர் ஒருவரின் கதையைப் பின்புலமாகக் கொண்டது.

அனிதா தேசாய்

பிரபல உருதுக் கவிஞர் நூரை நேர்காணல் செய்யும் அரிய வாய்ப்பு அந்த இந்திப் பேராசிரியருக்குக் கிடைக்கிறது. ஆனால், உருதுக் கவிஞரின் பரிதாப நிலையைக் கண்டு, அதை மேற்கொள்ளாமல் தவிர்க்கிறார் பேராசிரியர்.

கவிஞரின் நிலையுடன் உருதுக் கவிதையின் நிலையையும் அனிதா தேசாய் இந்த நாவலில் காட்சிப்படுத்தியுள்ளார். யதார்த்தவாத நடையில் எழுதப்பட்ட இந்த நாவல் சர்வதேச அரங்கில் பெரும் கவனம் பெற்றது.

தன் முதல் சிறுகதைத் தொகுப்புக்காக புலிட்சர் விருது வென்று சர்வதேச இலக்கிய அரங்கில் கவனத்தை ஈர்த்தவர் ஜும்பா லாஹிரி. ‘இன்டர்பிரிட்டர் ஆஃப் மாலடீஸ்’ என்னும் தலைப்பில் வெளியான 10 சிறுகதைகளின் தொகுப்பு, அதன் கூற்று மொழியாலும் தனித்துவமான பண்பாட்டுப் பின்னணியாலும் அமெரிக்க ஆங்கில இலக்கிய உலகில் பெரிதும் கொண்டாடப்பட்டது.

திருமணமான இந்திய ஆணைக் காதலிக்கும் ஆங்கிலப் பெண், அமெரிக்காவில் வாழும் இந்திய வங்கக் குடும்பம் எனப் பலதரப்பட்டவர்களின் வாழ்க்கையை இந்தக் கதைகள் வழி லாஹிரி சித்தரித்துள்ளார். புலம்பெயர் சூழலின் அடையாளச் சிக்கல், நவீன வாழ்க்கை முறை போன்ற பண்புகள் லாஹிரியின் எழுத்தினுடைய மையம். யதார்த்த முறையில் கதைகள் சொல்வது இவரது மொழித் திறன்.

ஜும்பா லாஹிரி

கலாச்சார சிக்கலை மையமாகக் கொண்ட ‘நேம்சேக்’ என்னும் நாவலை லாஹிரி எழுதியிருக்கிறார். அமெரிக்காவில் வாழப் புறப்படும் இந்திய வங்கக் குடும்பம்தான் நாவலின் பின்னணி. இந்த நாவல் இதே பெயரில் மீரா நாயர் இயக்கத்தில் படமாகவும் வெளியானது.

அருந்ததியின் புதுமைப் படைப்பு

தென்னிந்தியப் பின்னணியில் எழுதப்பட்ட அருந்ததி ராயின் ‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ நாவல், சர்வதேச அரங்கில் எதிர்பார்க்கப்படாத வரவேற்பைச் பெற்றது. கேரளத்தில் அய்மனம் என்னும் சிற்றூரில் நடக்கும் கதையை, துள்ளலான மொழியில் ராய் கூறியிருந்த விதம் சர்வதேச அரங்கில் கவனத்தைப் பெற்றுத்தந்தது. சல்மான் ருஷ்டிக்குப் பிறகு ராயின் இந்த நாவல் புக்கர் பரிசைப் பெற்றது.

வங்க-கேரளப் பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளின் விவரிப்பில் இந்தக் கதை சொல்லப்பட்டிருக்கிறது. இந்தக் கலாச்சார முரண், கதை நிகழும் கேரளத்தின் அரசியல், வர்க்கப் பாகுபாடு எனப் பல அம்சங்கள் இந்த நாவலில் விவரிக்கப்பட்டிருக்கும். தீவிரத்தன்மை கொண்ட இந்த நாவலை குழந்தைகளின் உயரத்துக்கு ராய் இழுத்து வந்துள்ளார். இது வாசகர்களுக்கு புது வாசிப்பு அனுபவத்தைத் தரக்கூடியது.

அமிதவ் கோஷ்

‘தி கல்கத்தா குரோமோசோம்’ என்னும் அமிதவ் கோஷின் மருத்துவப் புலனாய்வு நாவல் சர்வதேச அளவில் புகழ்பெற்றது. இந்தியாவில் மலேரியா பாதிப்பை ஆராய்ந்து நோபல் பரிசு பெற்ற ரொனால்டு ராஸை நாயகனாகக் கொண்டது இந்த நாவல். கொல்கத்தா, நியூயார்க் ஆகிய இரண்டு நகரங்களில் இந்த நாவலின் கதை நடைபெறுகிறது.

சென்னையில் பிறந்த பத்திரிகையாளார் அரவிந்த் அடிகாவின் ‘ஒயிட் டைகர்ஸ்’ நாவலும் புக்கர் பரிசு வழியாக ஆங்கில இலக்கிய உலகில் கவனம் பெற்றது.

சமீபத்தில் தன் இந்தி நாவல் ‘டூம் ஆஃப் சான்ட்’க்காக சர்வதேச புக்கர் பரிசு பெற்ற கீதாஞ்சலிக்கும் கவனம் கிடைத்துள்ளது. இப்படிப் பல்வேறு வகைமைகளில் சர்வதேச அரங்கில் இந்திய எழுத்தாளர்கள் கவனம் பெறத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. வருங்காலங்களில் இந்தப் பட்டியல் நீளும் என நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

அருந்ததி ராய்

கட்டுயாளர் தொடர்புக்கு: jeyakumar.r@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x