Published : 19 Aug 2022 07:25 AM
Last Updated : 19 Aug 2022 07:25 AM

இந்தியா 75: உள்ளாட்சிகளின் பெருமைமிகு பங்களிப்பு

ஜெயபால் இரத்தினம்

நாட்டின் முன்னேற்றத்தில் உள்ளாட்சிகள் ஆற்றிய, ஆற்றிவரும் பங்களிப்பு குறித்து ஆராயும்போது, வியப்பும் பெருமிதமும் மேலோங்குகின்றன. இந்திய நாட்டின் பெருவளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவை உள்ளாட்சிகள்.

தமிழகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் செழித்தோங்கி வளர்ந்திருந்த உள்ளாட்சி முறை, ஒரு காலகட்டத்தில் முற்றிலுமாக மறைந்துபோனதையும், ஆங்கிலேயர் காலத்தில் புதிய பரிமாணத்தில் உயிர்ப்பு பெற்றதையும் அறிவோம்.

அனைத்து ஊர்களிலும் உள்ளாட்சிகள் ஏற்படுத்தப்படவில்லை; அமைக்கப்பட்ட ஊர்களிலும் அங்கு வாழ்ந்த அனைவருக்கும் வாக்குரிமை இல்லை; அரசு நிதியுதவி எதுவும் இல்லாமல் அந்தந்த உள்ளாட்சியின் சொந்த வருவாயிலிருந்து மட்டுமே பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

சுருக்கமாக, உள்ளாட்சிகள் ஒரு மிகச்சிறிய வட்டத்திற்குள்ளேயே இயங்க வேண்டியிருந்ததால், அடிப்படை வசதிகளை உருவாக்குவதில் பெருமளவிலான தேக்கமும் இயலாமையும் நிலவியது என்பதே விடுதலை அடைந்த வேளையில் தமிழகத்தில் நிலவிய சூழல்.

இடஒதுக்கீட்டுச் சாதனை: நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ளாட்சி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டதும், வயதுவந்த அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டதும், சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட முதல் முன்னேற்றம்.

ஊரக உள்ளாட்சி நிறுவனங்கள், தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்படத்தக்க வகையில் மூன்றடுக்கு முறையிலும், நகர்ப்புற உள்ளாட்சிகள் ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்துச் செயல்படும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுச் செயல்படுகின்றன.

உள்ளாட்சிகளுக்கு அரசமைப்பு அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பதுடன், அதன்வழி உள்ளாட்சிகளுக்கும் மத்திய - மாநில அரசுகளுக்கும், சில கடமைகளும் பொறுப்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

மத்திய - மாநில அரசுகள் ஒவ்வோர் ஆண்டும் தங்களது வருவாயில் ஒரு பகுதியை உள்ளாட்சிகளுக்குப் பகிர்ந்தளித்துவருகின்றன; மாநிலத் தேர்தல் ஆணையமும் மாநில நிதி ஆணையமும் ஏற்படுத்தப்பட்டுச் செயல்பட்டுவருகின்றன.

மகளிர், பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் ஆகியோருக்கும் உள்ளாட்சி மன்றங்களின் அனைத்துப் பொறுப்புகளிலும் இடஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது; அரசமைப்புத் திருத்தங்களின்படி மகளிருக்கான இடஇதுக்கீடு மூன்றில் ஒரு பங்கு என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது 50% ஆக நிர்ணயிக்கப்பட்டுச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற, சட்டமன்ற அவைகளில்கூட மகளிருக்கு இடஒதுக்கீடு எதுவும் தரப்படாத நிலையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்கி சமூகநீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.

உள்ளாட்சிகளின் செயல்பாடுகளை அறிந்துகொள்ளவும் ஆலோசனைகள் வழங்கவும் பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ‘கிராமசபை’ உருவாக்கப்பட்டு செயல்பட்டுவருகின்றன.

இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல். வளர்ந்துவரும் சிறிய நகரங்களான பேரூராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சியாக வகைமை செய்தது, மற்றொரு முக்கிய முன்னெடுப்பு. இவ்வாறு, உள்ளாட்சிகள் அமைப்புரீதியில் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொடர் வளர்ச்சி: குடிநீர், சாலை, பொது சுகாதாரம், தெருவிளக்கு, கழிவு மேலாண்மை உள்ளிட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதே உள்ளாட்சிகளின் முதன்மைப் பணியாகும். விடுதலை பெற்ற காலத்தில் மூன்று கோடியாக இருந்த தமிழ்நாட்டின் மக்கள்தொகை இன்று எட்டு கோடிக்கும் மேலாக உயர்ந்துள்ளது.

பெருகிவரும் மக்கள்தொகை, மக்களின் வாழ்வாதாரச் சூழல் மேம்பாடு, மத்திய - மாநில அரசுகளது வீட்டுவசதித் திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாகப் பல லட்சம் புதிய வீடுகள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள், பல நூறு புதிய ஊர்கள் ஆகியவை உருவாக்கப்பட்டுச் செயல்பட்டுவருகின்றன.

அறிவியல் வளர்ச்சி காரணமாக, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் செயல்பாடுகளில் புதிய உத்திகளையும் தொழில்நுட்பங்களையும் புகுத்துவது அவசியமாகவும் உள்ளது. இந்நிலையில், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் பணி மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.

என்றாலும், உள்ளாட்சிகள் இச்சவாலைத் துணிச்சலுடன் எதிர்கொண்டு, மிகத் திறமையாகச் செயலாற்றி, அடிப்படைத் தேவைகளைத் தொய்வில்லாமல் நிறைவேற்றிவருகின்றன.

பெருகிவரும் நகர்மயமாக்கல் காரணமாக நகர்ப்புறங்களின் தேவைகள் அதிகமாக உள்ளன என்றாலும், அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் நகர்ப்புற உள்ளாட்சிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகின்றன. எளிய மக்களுக்கு வீட்டுவசதி ஏற்படுத்தித் தருதல், மகளிர் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நகர்ப்புற உள்ளாட்சிகளால் முன்னெடுக்கப்படுகின்றன.

அடித்தளமிட்ட ஊராட்சிகள்: ஊரக உள்ளாட்சிகளைப் பொறுத்தவரை, 1960, 70-களில், கல்வி, சாலை, விவசாயம், கால்நடை, கூட்டுறவு, மகப்பேறு, பொது சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த வளர்ச்சிப் பணிகளும் செயல்பாடுகளும் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் என்ற ஒரே குடையின்கீழ் மக்களுக்குக் கிடைத்தன. நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளிலும், கல்வி, மகப்பேறு, மருத்துவப் பணிகள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.

அதன் காரணமாக, தேவைப்பட்ட இடங்களில் எல்லாம் புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டன; இணைப்புச் சாலைகளும் அணுகு சாலைகளும் பாலங்களும் உருவாகின; விவசாய உற்பத்தி பெருகியது; ஏராளமான கூட்டுறவுச் சங்கங்கள் தோன்றின; பால் உற்பத்தி பெருகியது; ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோன்றின; மருத்துவம், நோய்த்தடுப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன; மகப்பேறு மையங்கள் உருவாகின; கால்நடைத் துணை மருத்துவமனைகள் தோன்றின. ஊரக உள்ளாட்சிப் பகுதிகளின் பொற்காலம் அது.

எண்பதுகளில் இவ்வாறான துறைகளின் ஒருங்கிணைப்பு மாற்றம் பெற்றது. அக்காலத்தில் நாடு விடுதலை பெற்று ஐந்தாண்டுத் திட்டங்கள்வழி வளர்ச்சிப் பணிகளை முழுவீச்சில் அரசுகள் முன்னெடுத்துக்கொண்டிருந்தன. உள்ளாட்சிகள் மேற்கொண்ட இந்த ஒருங்கிணைந்த பணிகளால், ஊரகப் பகுதிகள் பெருமளவிலும் விரைவாகவும் முன்னேற்றம் கண்டன. உள்ளாட்சிகள் இவ்வாறு உருவாக்கிய வலுவான அடித்தளமே இன்று கல்வி, மருத்துவம், சாலை ஆகிய துறைகள் அடைந்துள்ள அசுர வளர்ச்சிக்கான அடித்தளம்.

இணைப்புப் பாலம்: மத்திய - மாநில அரசுகளின் பல்வேறு வளர்ச்சி - நலத் திட்டப் பணிகள் உள்ளாட்சிகளின் வாயிலாகவே செயல்படுத்தப்படுகின்றன. இவ்வாறு மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சி - நலத்திட்டப் பணிகளை உள்ளூரில் செயல்படுத்தும் நிறுவனங்களாக உள்ளாட்சிகள் செயல்பட்டு, உள்ளூர் மக்களுக்கும் அரசுக்குமான இணைப்புப் பாலமாகத் திகழ்கின்றன.

பெருமழை, வெள்ளம், புயல் போன்ற பேரிடர்க் காலத்தில் மக்களுடன் களத்தில் நின்று, அனைத்து உதவிகளையும் நிவாரணப் பணிகளையும் உள்ளாட்சிகள் செய்துவருகின்றன. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உள்ளாட்சிகள் ஆற்றிய களப்பணிகளையும் ஊரடங்குக் காலத்தில் உணவு கிடைக்காமல் தவித்த நலிவுற்ற, ஆதரவற்ற மக்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சிகள், அம்மா உணவகங்கள் மூலம் உணவு வழங்கி பசிப்பிணி போக்கியதையும் மறக்க இயலுமா?

இவ்வாறு சுதந்திர இந்தியாவில் தனது கடமைப் பொறுப்புகளைச் செவ்வனே நிறைவேற்றிவரும் வலுவான தற்சார்பு நிறுவனமாகவும், மத்திய - மாநில அரசுகளின் வளர்ச்சி, நலத்திட்டப் பணிகளைச் செயல்படுத்தும் கள அமைப்பாகவும், பேரிடர், அவசர காலங்களில் மக்களுக்கு உறுதுணையாக நிற்கும் உற்ற நண்பனாகவும் விளங்கி, உள்ளாட்சிகள் பிரம்மாண்டமாக வளர்ந்து, உயர்ந்து நிற்கின்றன. இன்று நாடு அடைந்துள்ள மிகப்பெரிய அளவிலான வளர்ச்சிக்கும், மக்களின் வாழ்க்கை முறை, சூழல் சிறப்புகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளின் சிறப்பான பங்களிப்பு ஒரு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது என்பது மறுக்கவியலாத உண்மை.

- ஜெயபால் இரத்தினம், ‘தமிழக வரலாற்றில் பெரம்பலூர்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்தொடர்புக்கு: jayabalrathinam@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x