Published : 11 Aug 2022 08:00 AM
Last Updated : 11 Aug 2022 08:00 AM

சுதந்திரச் சுடர்கள் | ஐக்கிய இந்தியாவை நோக்கி…

வி. கிருஷ்ண அனந்த்

இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை என்ற பேரதிர்ச்சிக்குப் பிறகு ஏற்பட்ட வன்செயல்களும் ஓடிய ரத்த ஆறும் மக்கள் மனத்தில் ஆறாத வடுக்களை ஏற்படுத்தியிருந்தன; சுதந்திர இந்தியாவோ, மொழி அடிப்படையில் மாநிலங்களைத் திருத்தியமைப்பதற்கான கடமையை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

சுதந்திரப் போராட்ட காலத்தில் ஏற்பட்ட தேசிய எழுச்சியானது மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை, சுதந்திரம் வேண்டும் என்ற லட்சியத்தின் ஒரு பகுதியாகவே கருதியது. சுதந்திரம் கிடைத்த பிறகு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் திருத்தியமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் எழுந்தது.

இதற்கிடையில், இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் இந்த விஷயத்தில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மனமாற்றம் அடைந்திருந்தது. எனவே, இது மிகப் பெரிய சவாலாகிவிட்டது. ‘தேசிய இயக்கமாக’ இருந்த காங்கிரஸ், இப்போது ‘அரசியல் கட்சியாகிவிட்டிருந்தது’. அதன் செயல்திட்டமானது, மத்திய அரசிலும் மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்து மக்களுக்கான திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்பதில் மையம் கொண்டிருந்தது.

மொழி அடிப்படையில் மட்டுமே மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதற்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்தக் கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைமையின் நிலை மாறிவிட்டது. எனவே தேசிய இயக்கத்தில் பங்கு பெற்றவர்களிடையேகூட, ‘நாம் ஒதுக்கப்படுகிறோம்’ என்ற உணர்வு ஏற்பட்டது.

காங்கிரஸ் உறுதிமொழி

வங்காளத்தை இரண்டாகப் பிரித்ததற்கு எதிராக 1905இல் தொடங்கிய போராட்டத்தில் காங்கிரஸ் கட்சி முக்கியப் பங்கு வகித்தது. வங்க மொழி பேசும் பிரதேசத்தை இரண்டாகப் பிரிக்கக் கூடாது என்ற மொழி அடிப்படையிலான சித்தாந்தம் அப்போது எல்லோருக்கும் ஆதர்சமாகத் திகழ்ந்தது.

வங்கப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்தை காங்கிரஸ் இயக்கம், அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு இடையறாமல் தொடர்ந்தது. அதே உணர்வில்தான் 1908 இல் ‘பிஹார் பிரதேச காங்கிரஸ்’ ஏற்படுத்தப்பட்டது. 1917இல் ‘ஆந்திரம்’, ‘சிந்து மாகாண பிரதேச காங்கிரஸ்’ கட்சிகள் ஏற்பட்டன.

நாகபுரியில் 1920இல் நடந்த காங்கிரஸ் மாநாடு, மொழி அடிப்படையில் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் அமைய வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்றுக்கொண்டு பிரதேச காங்கிரஸ் கட்சிகளை, அதே அடிப்படையில் அமைத்தது.

இதே பாணி அணுகுமுறை 1938இலும் தொடர்ந்தது. மொழி அடிப்படையில் தங்களுடைய மாநிலங்களை அமைக்க வேண்டும் என்று கேரளம், கர்நாடகம், ஆந்திரம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் போராடியபோது, ‘இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தவுடன் உங்களுடைய கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்; அதுவரையில் மொழிவாரி மாநிலப் போராட்டங்களை நிறுத்திக்கொண்டு, தேச விடுதலைக்கான போராட்டத்தில் மட்டும் கவனம் செலுத்தி ஒத்துழைப்பு அளியுங்கள்’ என்று அந்தப் பகுதி மக்களை காங்கிரஸ் கேட்டுக்கொண்டது.

காங்கிரஸ் இயற்றிய அந்தத் தீர்மானம், மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கையை காங்கிரஸ் ஆதரிப்பதை வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியம், இந்தக் கோரிக்கை மக்களைத் திரட்ட, தேசிய உணர்வோடு கூடிய போராட்டத்தின் அங்கமாகவும் கருதப்பட்டது.

ஆனால், சுதந்திரம் கிடைத்த பிறகு காங்கிரஸ் கட்சி, மொழிவாரி மாநிலங்கள் என்ற கொள்கை மீது தனக்கிருந்த பிணையை அறுத்துக்கொண்டது. இந்திய, பாகிஸ்தான் பிரிவினை என்ற பேரதிர்ச்சி, காங்கிரஸ் தலைவர்களின் மனங்களில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இப்படி நிலையை மாற்றிக்கொள்ள வைத்தது.

மலையாளம் பேசும் பகுதிகளை இணைத்து கேரளம் என்றும், தெலுங்கு பேசும் பகுதிகளை இணைத்து ஆந்திரம் என்றும் புதிய மாநிலங்களை ஏற்படுத்த வேண்டும் என்று தென்னிந்தியர்கள் கோரினர். பம்பாய் மாகாணத்திலோ, மராட்டி பேசும் மக்கள் தனி மராட்டிய மாநிலத்தையும் குஜராத்தி பேசுவோர் தனி குஜராத் மாநிலத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினர்.

காங்கிரஸ் கட்சியில் நேரு தலைமையில் 1928இல் அமைக்கப்பட்ட குழு, ‘மாநிலங்களைப் பிரிக்கும்போது மக்களுடைய விருப்பங்களுக்கு முன்னுரிமை தர வேண்டும், அந்தந்தப் பகுதியின் மொழி ஒற்றுமை காக்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தியது.

ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட தேசியச் சட்டப் பேரவையில் 1947 நவம்பர் 27இல் பேசிய பிரதமர் நேரு, “முதலில் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களுக்குத்தான் முன்னுரிமை தர வேண்டும், இப்போது நாட்டின் பாதுகாப்புக்கும் ஸ்திரத் தன்மைக்கும்தான் முன்னுரிமை” என்றார்.

இதையடுத்து எஸ்.கே. தர் என்பவர் தலைமையில் தனி ஆணையத்தை அரசமைப்பு சட்டப் பேரவை நியமித்தது. ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மகாராஷ்டிரம் என்று தனி மாநிலங்கள் கோருவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தர வேண்டும் என்று அந்த ஆணையம் கேட்டுக் கொள்ளப்பட்டது.

அந்த ஆணையம் அரசமைப்புச் சட்டப் பேரவையிடம் 1948 டிசம்பரில் அறிக்கை அளித்தது. இந்த நிலையில் நாட்டில் புதிதாக எந்த மாநிலத்தையும் உருவாக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்த அந்த அறிக்கை, மொழிவாரி மாநிலங்களை ஏற்படுத்துவது சரியல்ல என்றும் கூறியது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், மொழி அடிப்படையில் மாநிலங்கள் உருவாக வேண்டும் என்ற தேசிய இயக்கத்தின் அணுகுமுறை, சுதந்திரத்துக்குப் பிறகு அப்படியே கைவிடப்பட்டுவிட்டது.

இது மட்டுமல்ல. தர் ஆணையப் பரிந்துரைகளை காங்கிரஸ் கட்சி அப்படியே ஏற்றுக்கொண்டு, மேலும் ஒரு படி சென்றது. ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், மொழிவாரி மாநிலக் கோரிக்கை குறித்து ஆராய ஜவாஹர்லால் நேரு, வல்லபபாய் படேல், பட்டாபி சீதாராமய்யா தலைமையில் (ஜேவிபி) துணைக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை, காங்கிரஸ் கட்சியின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதை முறைப்படி அறிவித்தது.

‘மொழிவாரி மாநிலங்கள் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் முந்தைய கொள்கையாக இருந்தது. இந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகப் பிரிவுகள்கூட திருத்தியமைக்கப்பட்டன. ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத் பிரதேச காங்கிரஸ் கட்சியமைப்புகள் இந்த அடிப்படையிலேயே ஏற்படுத்தப்பட்டன. ஆனால் இப்போது காலமும் சூழலும் மாறிவிட்டது’ என்று அறிக்கை தெரிவித்தது.

சுதந்திரம் அடைந்துள்ள நாட்டுக்கு, மொழிவாரி மாநிலங்கள் கோரிக்கை பெரிய அச்சுறுத்தல் என்று அந்த அறிக்கை கருதியது. வங்காளப் பிரிவினையில் மொழிக்கு அளித்த முக்கியத்துவ நிலையிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகியது.

தேசிய இயக்கத்துக்கான மேடையாக இருந்த காங்கிரஸ், இப்போது அரசியல் கட்சியாக மாறிவிட்டதால் இப்போது புதிய சிந்தனையின்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று அறிக்கை சுட்டிக்காட்டியது.

இந்தியா – பாகிஸ்தான் என்று நாடு இரண்டாகப் பிரிக்கப்பட்ட 1947 பிரிவினையையும் அதன் விளைவுகளையும் ஜேவிபி அறிக்கை சுட்டிக்காட்டியது. “மக்களிடையே மிகவும் நெருக்கமான ஒற்றுமை தேவைப்பட்ட சமயத்தில் சமூகவிரோதச் சக்திகள் வளர்ந்து, சீர்குலைவு நடவடிக்கைகளில் பெருமளவில் ஈடுபடும் அளவுக்கு வலிமை பெற்றுவிட்டன.

எனவே மாறிவிட்ட இந்தச் சூழ்நிலை அடிப்படையில், மொழிவாரி மாநிலக் கோரிக்கையை அணுக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இப்போது நம்முன் உள்ள முதல் கடமை நாட்டின் சுதந்திரத்தையும் ஒற்றுமையையும் கட்டிக்காப்பதுதான் என்று அறிக்கை வலியுறுத்தியது. வகுப்புவாதம், பிராந்தியவாதம் போன்ற குறுகிய வாதங்கள் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்று அறிக்கை குறிப்பிட்டது.

நிலையில் மாறுதல்

சுருக்கமாகச் சொல்வதென்றால், மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை குறுகியவாதம் மட்டுமல்ல, நாட்டையே சீர்குலைக்கச் செய்யும் நடவடிக்கை, இத்தகைய கோரிக்கைகள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கே ஆபத்தை விளைவிக்கும் என்றது.

அதைவிட முக்கியம் மொழிவாரி மாநிலக் கோரிக்கையை வகுப்புவாதத்துக்கு சமமான தீமையாக அது கருதியது. இந்த ஆபத்துகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியாக வேண்டும் என்றது.

(தொடரும்)

நன்றி: ‘தி இந்து’ ஆவண காப்பகம்

தமிழில்: வ. ரங்காசாரி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x