Published : 03 Aug 2022 07:31 AM
Last Updated : 03 Aug 2022 07:31 AM

நினைவுகளில் சுழித்தோடும் நதி

செந்தில் ஜெகன்நாதன்

தமிழர்களின் கலை, இலக்கியம், வழிபாடு, அரசியல் என எல்லாவற்றோடும் கலந்து உறவாடியவள் பொன்னி என்னும் அன்னை. காவிரியோடு அதீத நெருக்கமுடைய எங்களைப் போன்ற காவிரிப் பாசன மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்குக் காவிரியின் வருகையே ஒரு திருவிழாதான்.

பெரும்பான்மையாக விவசாயத்தை நம்பியிருக்கும் காவிரிப் பாசன மாவட்ட மக்கள், நீர் வடிவில் வரும் தெய்வத்தைச் சூடமேற்றி விழிநீர் கசிந்து, பூமியில் நெஞ்சு அழுந்த விழுந்து வணங்கி வரவேற்பார்கள். மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் நான் கண்ட காவிரியின் காட்சிகள் என் நினைவுகளில் சுழித்து ஓடிக்கொண்டிருக்கின்றன.

காவிரி நுரைத்து இரு கரைக்கு மணி சிந்த

வரிவண்டு கவர

மாவிரி மதுக்கிழிய மந்தி குதிகொள்ளு

மயிலாடுதுறையே!

காவிரியின் அலைகள் இரு கரைகளிலும் உள்ள சோலைகளில் ரத்தினங்களைச் சிதறடிக்க, அதனால் குரங்குகள் பயந்து குதிக்க, மரக்கிளைகள் மோதுவதால், மாமரத்தில் உள்ள தேன்கூடுகளில் சிதைந்த தேன் சிந்த, அதனை வண்டுகள் விரும்பி உண்ணும் வளம்மிக்க மயிலாடுதுறை என திருஞானசம்பந்தர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.

நான் பிறந்த மயிலாடுதுறையில் காவிரி முழுக்க வழிபாட்டுக்குரிய தெய்வமாகப் பார்க்கப்படுகிறது. ஐப்பசி மாத துலா உற்சவக் கடைமுகத் தீர்த்தம் நடைபெறக்கூடிய நாளில், இந்தியத் துணைக்கண்டத்தில் இருக்கும் அநேக நதிகளும் காவிரியில் கலப்பதாக ஒரு நம்பிக்கை இங்கு நிலவுகிறது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைவிடவும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு காவிரிப் பாசன மாவட்டத்தில் தனிச்சிறப்பு மிக்கதாகவும், வாழ்வோடு ஒன்றிக் கலந்ததாகவும் இருக்கிறது.

ஆடிப் பெருக்கு அன்று ஆண்கள் கைகளிலும், பெண்கள் கழுத்திலும் மஞ்சள் கயிறு கட்டிக்கொள்ளும் வழக்கம் பாரம்பரியமாகத் தொடர்கிறது. புதிதாகத் திருமணமானவர்களின் மாலைகளை ஆடிப் பெருக்கு அன்று ஆற்றில் விடுவதும், தாலியின் மஞ்சள் கயிறு மாற்றப்பட்டு காசுகள், குண்டுகள் கோத்துப் புதிதாகக் கட்டிக்கொள்வதும் நதிபோல அவர்களின் வாழ்வைப் பெருக்கும் என்பது நம்பிக்கை.

பயிர் மட்டுமல்லாது பல்வேறு படைப்பாளுமைகளையும் விளைவித்திருக்கிறது காவிரிக் கரை. அதற்கு நன்றிக்கடனாக அவ்வளவு பேரின் எழுத்திலும் அது பிரவாகமெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. சோறுடைத்த சோழநாட்டின் நெற்களஞ்சியமும், கலைக்களஞ்சியமுமான ஒருங்கிணைந்த தஞ்சை மண்டலம், உலகுக்குக் காவிரி தந்த பெருங்கொடைகளில் ஒன்றல்லவா?

நதி வழங்கும் மகத்தான செய்தி

ஒரு காலத்தில் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்த ஜீவநதியாக, காவிரி இந்த மண்ணில் உண்டாக்கிய வளத்தை நினைக்கும்போது உள்ளம் பொங்குகிறது. ‘கா’ என்றால் சோலை. சோலைகளினூடே விரிந்து பாய்வதால் ‘காவிரி’ என்று பெயர்க் காரணம் கூறுகிறார்கள். பாயும் இடமெல்லாம் செழிப்பை உண்டாக்குவதாலும், பொன்படு நெடுவரையில் (குடகு மலை) தோன்றும் காரணத்தாலும், இயற்கையாகவே நீரில் தங்கத்தாது இருப்பதாலும் ‘பொன்னி’ என்றொரு பெயரும் காவிரிக்கு வழங்கப்படுகிறது.

சிலப்பதிகாரத்தில் காவேரி என்ற பெயரிலேயே இளங்கோவடிகள் எழுதியிருக்கிறார். கர்நாடகத்தின் குடகு மாவட்டம் தலைக்காவிரியில் தொடங்கும் காவிரியின் பயணம், தமிழ்நாட்டின் காவிரிப்பூம்பட்டினத்தில் கடலில் சேர்வதில் முடிகிறது. சிறு ஊற்றாக, காட்டாறாக, பாறைகளில் இசையெழுப்பும் அருவியாக, நீர்ச்சுழிகளாக இந்தப் பயணத்தில் காவிரிக்குத்தான் எத்தனை வடிவங்கள்?

கர்நாடகத்தில் ஸ்ரீரங்கப்பட்டணம், சிவசமுத்திரம் ஆகிய தீவுகளையும் தமிழ்நாட்டில் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவையும் காவிரி ஆறு உருவாக்குகிறது. இந்த மூன்று தீவுகளிலும் ஸ்ரீரங்கநாதர் கோயில்கள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி, அந்த இடத்தில் இரண்டாகப் பிரிந்து ‘சுகனசுக்கி’ என்ற அருவியாகவும், மறுபுறம் ‘பாறசுக்கி’ என்ற அருவியாகவும் விழுகிறது. 1902ஆம் ஆண்டு ஆசியாவிலேயே முதன்முதலில் ‘சுகனசுக்கி’ அருவியில்தான் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்கவயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.

இந்த நெடும்பயணத்தில் செல்லும் இடமெங்கும் அள்ளித்தரும் காவிரியின் பயணம், நம் வாழ்வுக்கு எவ்வளவோ மகத்தான செய்திகளைச் சொல்லிச்செல்கிறது. உருவாகும் இடமான குடகில் மிகுந்த கொந்தளிப்புடனும் சீற்றத்துடனும் புறப்படும் காவிரி மலைகளில் பயணித்து, நிலப்பகுதிக்கு வேகமெடுத்து, அணைக்கட்டுகளில் சற்று ஆசுவாசமடைந்து ஓடி, பாசன மாவட்டங்களுக்கு வரும்போது கனிந்து, தணிந்து பயணத்தில் பக்குவப்பட்ட மனிதரைப் போல மிகுந்த சாதுவாகச் சென்று, கடமை முடிந்தபின் கடலுடன் கலக்கிறது.

இவ்வளவு அற்புதமான பயணத்தின் முடிவாக காவிரி கடலோடு கலக்கும் அந்த குறிப்பிட்ட இடத்தில்தான் தஞ்சை உள்ளிட்ட பாசன மாவட்டத்து மக்கள், இறந்த தங்களின் பெற்றோர், உறவினர்களின் அஸ்தியைக் கரைக்கும் சடங்கு நடைபெறும். அங்கே இரண்டு பயணங்கள் முடிந்து கடலோடு ஒன்றெனச் சங்கமிக்கின்றன.

கலங்க வைத்த காவிரி

தமிழ்நாட்டில் உற்பத்தியான நெல்லில் பெரும்பான்மை காவிரிக் கரைகளில் விளைந்தவை என்ற பெருமை சோழ வள நாட்டுக்கு உண்டு. ஆனால், சோறுடைத்த அந்த நாடு, இன்று காவிரி பொய்த்து விவசாயமும் பொய்த்து, பெரும்பான்மையான விவசாயக் குடும்பங்கள் விவசாயத்தை விட்டு வெளியேறி, வேறு தொழில் பார்க்கப்போனதெல்லாம் சொல்லில் அடங்காத துயரம்.

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று வள்ளலார் பாடியதை வாசிக்கும் போதேநம் நெஞ்சம் கரைகிறது. காவிரிக் கரையின்வேளாண்குடி மக்களோ பயிரை விதைத்து, விளைவிக்கக் கண்விழித்து, வியர்வையும் ரத்தமும் சிந்தி சொந்தப் பிள்ளைபோல கண்ணுங்கருத்துமாகப் பாடுபட்ட பயிர், நீரின்றி வாடி வதங்கி, காய்ந்து கருகும்போது தாங்க முடியாமல் உயிரை மாய்த்துக்கொண்ட செய்திகள் காவிரியை நினைத்துக் கலங்கவும் வைத்திருக்கின்றன.

வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரியின் வருகை, அரசியல் சூழல்களால் பொய்த்துப் போகும்போதெல்லாம், அதுவும் ஒரு காரணமாக அமைந்து காவிரிப் பாசனத்தையே நம்பியிருக்கும் வேளாண்குடி மக்களிடையே தற்கொலைகள் நிகழ்ந்தபடி இருந்தது துயரத்திற்குரிய மறக்க முடியாத வரலாறு. இரண்டு விழிகளும் கோவைப்பழமாய்ச் சிவக்கத் தண்ணீரில் குதியாலம் போட்ட காவிரியின் மைந்தர்கள் ஆண்டின் பெரும்பாலான மாதங்கள் தண்ணீர் இல்லாத ஆற்றைக் கரையில் நின்று பார்த்துக் கலங்கி நிற்க வேண்டிய சூழலும் நிலவுகிறது.

மயிலாடுதுறையில் நிறைந்து ஓடிய காவிரியில் குதித்து மிதந்துவரும் பூக்களையும், தேங்காய்களையும், பேரிக்காய்களையும் கடந்துநீந்தியது என் அழியா நினைவுகளில் ஒன்று; அதே போல், சில ஆண்டுகளுக்கு முன் காவிரிக் கரையில் நீரின்றிக் காய்ந்து கிடந்த மணலை மட்டும் பார்த்துவிட்டு, வீட்டுக்கு வந்து அடி பம்ப்பின் முன் படையல் வைத்து ஆடிப்பெருக்கைக் கொண்டாடியதும் இன்றைக்கு ஒரு அழிக்க முடியாத சித்திரமாகிவருகிறது!

- செந்தில் ஜெகன்நாதன், எழுத்தாளர்;

‘மழைக்கண்’ சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர்.

தொடர்புக்கு: senthiljaganathan56@gmail.com

To Read this in English: A river that flows stirring memories

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x