Published : 05 Jul 2022 07:53 AM
Last Updated : 05 Jul 2022 07:53 AM
ஜூன் மாதத்தின் இறுதியில் பெய்த திடீர் மழையின் காரணமாக சென்னை, சுற்றுவட்டார மாவட்டங்களின் வெப்பநிலை கணிசமாகக் குறைந்தது. ஆனால், இது நீடிக்கும் என்று சொல்ல முடியாது.
கடந்து சென்ற சில கோடைக் காலங்களில் தமிழ்நாடு எதிர்கொண்ட கடுமையான வெப்பநிலையின் விளைவுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்றவற்றைச் சாமானிய மக்களுக்கும் எடுத்துச்சொல்ல வேண்டிய தருணம் இது.
இந்தத் தாக்கங்களால் அன்றாட வாழ்வில் ஏற்படுகின்ற விளைவுகளை அவர்களால் பார்க்க முடிகிறது. ஆனால், தமிழ்நாட்டிலும் சென்னை - அண்டை மாவட்டங்களிலும் ஏற்பட்டுள்ள இந்த வெப்பநிலை அதிகரிப்பு, மாநிலக் கொள்கை வகுப்பு - அரசு நிர்வாகம் ஆகியவற்றால் பெரிதாகக் கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.
சென்னையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜூன் மாதம் மிகக் கடுமையான கோடை காலங்களில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையத் தரவுகளின்படி, 2022 ஜூன் 1-ல் அதிகபட்சமாக 40 டிகிரி செல்சியஸ், 2020-ல் அதிகபட்சமாக 40.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
2019 ஜூன் 11, 16 ஆகிய தேதிகளில் அதிகபட்சமாக 41.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. 2017-ல் 41.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. வெப்பநிலை மட்டுமில்லாமல் ஈரப்பதத்தில் ஏற்படும் வேறுபாட்டையும் கருத்தில் கொண்டாக வேண்டியிருக்கிறது.
வெட்-பல்ப் (Wet-Bulb) வெப்பநிலைக் கோட்பாடு இங்கு முக்கியமாகிறது. நம் உடல் வியர்வையின் மூலமாகத் தன்னைத் தானே குளிர்ச்சியடையச் செய்துகொள்ளும் திறனை, எந்த வெப்பநிலை அளவைத் தாண்டினால் இழக்கின்றதோ, அதுவே வெட்-பல்ப் வெப்பநிலை. 2021, 2022-ன் ‘அதிகபட்ச வெப்ப நாட்க’ளில் சென்னையின் வெட்-பல்ப் வெப்பநிலை ஏறத்தாழ 30 டிகிரி செல்சியஸ் அளவிற்கு உயர்ந்துள்ளது. (ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலையும், வெட்-பல்ப் வெப்பநிலையும் வேறுபட்டவை என்பதை மறந்துவிடக் கூடாது).
உடல் தாக்கங்கள் அதிகரிக்கும்
“கடலோரத்தில் அமைந்திராத ஹைதராபாத், டெல்லி, பெங்களூரு போன்ற பிற நகரங்களோடு ஒப்பிடுகையில், கடலோர நகரமாக இருப்பதாலேயே 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை என்பது சென்னையில் தாங்க முடியாததாக இருக்கிறது” என்கிறார், இந்தியப் பொது சுகாதார அறக்கட்டளையைச் சேர்ந்த வெப்ப சுகாதார எச்சரிக்கை வல்லுநரான அபியந்த் திவாரி.
மேலும், “வியர்வை ஆவியாகும்போது நம் உடல் குளிர்ச்சியடைகிறது. ஒப்பீட்டளவில் டெல்லியில் வறண்ட வெப்பம் உள்ளது. அந்தச் சூழ்நிலையில் மக்களுடைய உடல் எளிதில் வியர்க்கவும் அந்த வியர்வை ஆவியாகவும் முடியும். ஆனால், ஈரப்பதத்துடன் கூடிய வெப்பநிலையில் வியர்வை ஆவியாகாது.
ஆகவே, உடலின் முதன்மை வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்துவருகிறது” என்று அவர் எச்சரிக்கிறார். மனித உடல்கள் 35 டிகிரி செல்சியஸ் வரை ஈரமான வெப்பநிலையைப் பொறுத்துக்கொள்ளும் என்று முன்னர் நம்பப்பட்டது.
ஆனால், சமீபத்திய ஆய்வுகள் வறண்ட வெப்பமான சூழலில் 25 டிகிரி செல்சியஸ் முதல் 28 டிகிரி செல்சியஸ் வரையும் ஈரப்பதமான வெப்பமுள்ள சூழலில் 30 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக்கூடிய வெப்பநிலையைத்தான் மனித உடல்களால் பொறுத்துக்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வெப்பநிலை அளவைத் தாண்டிச் செல்லும்போது, அது நம் உடல் ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான தாக்கங்களை ஏற்படுத்தும்.
ஆபத்தான பாதிப்புகள்
தமிழ்நாட்டில் வெப்பம், அதிக வெப்பம், அதீத வெப்பம் என மூன்று பருவகாலம் மட்டுமே நிலவும் என்று நகைச்சுவையாகக் குறிப்பிடப்படுவது உண்டு. ஆனால், அதிகரிக்கும் வெப்பநிலை நம் உடலில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகள், அதிர்ச்சியளிக்கக்கூடியவை.
நீர்ச்சத்தை உடல் இழப்பது, வெப்பப் பிடிப்புகள் (Heat Cramps), வெப்ப மயக்கம் (Heat Strokes) ஆகியவை அதிகரித்து வரும் வெப்பநிலையால் ஏற்படக்கூடிய உடல்நலப் பிரச்சினைகளின் ஒரு பகுதி மட்டுமே. வெப்பத் தளர்ச்சியின் (Heat Exhaustion) காரணமாக உடல் சோர்வு, தலைவலி, தலைசுற்றல் ஆகியவை ஏற்படும். குளிர்ந்த சூழலில் ஓய்வெடுப்பதன் மூலம், நீர் அருந்துவதன் மூலம் இதற்குச் சிகிச்சை அளிக்க முடியும்.
ஆனால், கவனிக்காமல் விட்டால், மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவுக்கான வெப்ப மயக்கத்துக்கு வழிவகுக்கும். வெப்ப மயக்கத்தின்போது, உடல் வெப்பநிலை 103 டிகிரி ஃபாரன்ஹீட் (39.4 டிகிரி செல்சியஸ்) உயரக்கூடும்.
அதோடு, வறண்ட சருமம், குழப்பமான மனநிலை, சில நேரம் சுயநினைவின்மை ஆகியவையும் ஏற்படலாம். தீவிர வெப்பம், சிறுநீரகம் தொடர்பான பல்வேறு நோய்களை ஏற்படுத்துவதோடு, மகப்பேறுக்கு முந்தைய உடல்நலப் பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
“இதயம் தொடங்கி சிறுநீரகம் வரை, உடல் ஆரோக்கியத்தில் கவலையளிக்கக்கூடிய தாக்கத்தை வெப்பம் ஏற்படுத்தும். இதய ரத்தக் குழாய் பிரச்சினைகளுக்கும் வெப்பத்தோடு தொடர்பு உண்டு. ஆனால், அதிகரித்துவரும் நோய்களுக்கும் உயிரிழப்புகளுக்கும் வெப்பத்துக்கும் இடையிலான தொடர்பு சார்ந்த புரிதலைப் பெறுவதற்குத் தமிழ்நாட்டில் உறுதியான வழிமுறை எதுவும் இல்லை” என்கிறார், சுற்றுச்சூழல் நீதி செயல்பாட்டாளரும் காலநிலை மாற்றம் - ஆரோக்கியத்திற்கான பிரசாரகருமான ஸ்வேதா நாராயணன்.
மேலும், “இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, வெட்-பல்ப் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் இருக்கும்போது நீங்கள் வீட்டை விட்டு வெளியேறினால், நீங்கள் நிழலில் நின்றாலும்கூட ஆறு மணி நேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை வரலாம்” என்கிறார் அவர்.
மனரீதியான தாக்கங்கள்
2022 மார்ச்சில் வெளியிடப்பட்ட காலநிலை மாற்றத்துக்கான சர்வதேச அரசுகளுக்கு இடையிலான (ஐபிசிசி) குழுவின் அறிக்கை, சராசரி வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது, மனநலப் பிரச்சினைகள் ஏற்படுவதைக் கண்டறிந்தது.
அதிக வெப்பநிலையில் மனிதர்களுடைய உணர்வு வெளிப்பாடும் கவலை, மனச் சோர்வை அதிகரிக்க வழிவகுக்கும். இதனால், தற்கொலை செய்துகொள்ள முயல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
நாடு முழுவதும் வெப்பநிலை அதிகரிக்கும்போது மனவெழுச்சி, திடீர் மனப்பிறழ்வு, இருமுனை பிறழ்வு நோய் உள்ள நோயாளிகளுக்கு அறிகுறிகள் அதிகரிப்பதை மனநல நிபுணர்கள், மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதிகரித்து வரும் வெப்பநிலை உலகளவில் தூக்கமின்மைக்குக் காரணமாக இருப்பதாகப் புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.
‘ஒன் எர்த்’ என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு, இந்தியா உட்பட 68 நாடுகளின் தரவுகளைப் பகுப்பாய்ந்து, சராசரியாக ஒரு நபர் ஒரு வருடத்துக்கு 44 மணி நேரம் தூக்கத்தை இழக்கிறார் என்கிறது. வெப்பநிலை 30 டிகிரிக்கு மேல் இருக்கும்போது, மிகவும் சூடான இரவுகளில், சராசரித் தூக்க நேரத்தில் 14 நிமிடங்கள் குறைகின்றன. காலநிலை மாற்றம் புறச்சூழலில் மட்டுமல்லாமல், மனிதர்களை நேரடியாகப் பாதிக்க உள்ளதன் ஒரு சிறு பகுதி மட்டுமே இந்த உடல்நல-மனநலப் பிரச்சினைகள் என்பதை மறந்துவிடக் கூடாது.
- பிரியங்கா திருமூர்த்தி, சுயாதீனச் சூழலியல் இதழாளர்.
தொடர்புக்கு: priyankathirumurthy24@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT