Published : 27 Jun 2022 09:55 PM
Last Updated : 27 Jun 2022 09:55 PM
நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. வரும் ஜூலை 1-ம் தேதியன்று இந்தத் திரைப்படம் திரைக்கு வரவுள்ளது. இது, இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வியத்தகு வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் திரைப்படம்.
இதனை பலரும் அறிந்திருக்கலாம். இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழா உட்பட அமெரிக்கா, அமீரகத்திலும் திரையிடப்பட்டுள்ளது. மாதவனுடன் கவுரவத் தோற்றத்தில் ஷாருக்கான், சூர்யா போன்றவர்களும் இதில் நடித்துள்ளனர். 80 வயதான விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்து நடிகர் மாதவன் ஏன் ஒரு திரைப்படம் இயக்க வேண்டும்? தமிழ் உட்பட மூன்று மொழிகளில் இந்தப் படத்தை வெளியட வேண்டிய அவசியம் என்ன? - இதையெல்லாம் சற்றே ஒதுக்கிவைத்துவிட்டு நம்பி நாராயணன் வாழ்வில் அப்படி என்ன நடந்தது என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
யார் இந்த நம்பி நாராயணன்? - பிரிட்டிஷ் இந்தியாவில் 1941-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அன்றைய திருவனந்தபுரம் சமஸ்தானத்தின் கீழ் இருந்த நாகர்கோவில் பகுதியில் வசித்து வந்த தமிழ்க் குடும்பத்தில் பிறந்தார் நம்பி நாராயணன். இவரது பூர்விகம் நெல்லை என அவரே சொல்லியிருக்கிறார்.
தனது பள்ளி படிப்பை நாகர்கோவிலில் பயின்றுள்ளார். தொடர்ந்து மதுரையில் உள்ள தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் பட்டப்படிப்பும், திருவனந்தபுரம் பொறியியல் கல்லூரியில் பட்ட மேற்படிப்பும் பயின்றுள்ளார். இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை எனப் போற்றப்படும் விக்ரம் சாராபாயை தனது குருவாக போற்றுபவர் நம்பி நாராயணன்.
மறுபக்கம், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் அவருக்கு ஃபெல்லோஷிப் கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆல்பர்ட் ஐன்ஸ்டின் பாடம் நடத்திய உலக புகழ்பெற்ற அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கெமிக்கல் ராக்கெட் புரோபல்ஷன் (Propulsion) தொடர்பாக தனது ஆராய்ச்சி சார்ந்த படிப்பை முடித்துள்ளார். அமெரிக்காவில் வேலை செய்யும் வாய்ப்பும் அவரை தேடி வந்துள்ளது. அதற்காக அமெரிக்க சிறப்பு குடியுரிமை வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் அதை எல்லாம் உதறிவிட்டு இந்தியா திரும்பியுள்ளார் நம்பி நாராயணன்.
இந்தியா வந்த கையோடு 1970-களின் தொடக்கத்தில் இஸ்ரோவில் இணைந்து திரவ எரிபொருள் ராக்கெட் தொழில் நுட்பத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி பணிகளின் எதிர்காலம் கருதி அவர் அறிமுகம் செய்துள்ளார். படிப்படியாக தனது ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் இஸ்ரோவில் இணைந்த போது சுமார் 25 விஞ்ஞானிகள் மட்டும்தான் இருந்துள்ளனர். அதில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் ஒருவர். இன்றைய இஸ்ரோவின் அடித்தளத்தை அமைத்தவர்களில் ஒருவராக இருப்பவர் நம்பி நாராயணன்.
பிஎஸ்எல்வி-யின் இரண்டாம் மற்றும் நான்காம் நிலைகளின் திட்ட இயக்குநர், கிரையோஜெனிக் திட்ட இயக்குநர், பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி-யின் அசோசியேட் திட்ட இயக்குநர், திரவ எரிபொருள் புரோபல்ஷன் துணை திட்ட இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளின் கீழ் இஸ்ரோவில் பணியாற்றியுள்ளார். சுமார் 20 ஆண்டு காலத்திற்கு மேலாக இஸ்ரோவில் பணியாற்றி வந்த அவர் மீது 1994 வாக்கில் ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அது அவரது வாழ்வையே புரட்டிப் போட்டது.
குற்றச்சாட்டு என்ன? - நம்பி நாராயணன், இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கடந்த 1994-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி கேரள போலீசாரால் நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.
மாலத்தீவு உளவுப் பிரிவைச் சேர்ந்த மரியம் ரஷீதா, பவுஸியா உசேன் மூலம் இந்திய ராக்கெட் தொழில் நுட்பங்களை ரஷ்யா மற்றும் பாகிஸ்தானுக்கு விற்றதாகவும், உளவு பார்த்ததாகவும் நம்பி நாராயணன் உட்பட மூன்று விஞ்ஞானிகள் அப்போது கைது செய்யப்பட்டனர். சுமார் 50 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
பின்னர், அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரித்த சிபிஐ, “குற்றசாட்டுகளுக்குப் போதிய ஆதாரங்கள் இல்லை; வழக்கை முடிக்கலாம்” என்று பரிந்துரைத்தது. 1998-ம் ஆண்டு வாக்கில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் என நிரூபணமானது. வெறும் சந்தேகத்தின் பேரிலான வழக்கு என்று கூறி இந்த வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அவரது ஓய்வு காலம் வரை பெரிய பொறுப்புகள் ஏதும் தரப்படாமலேயே கடந்த 2001-ல் இஸ்ரோவில் இருந்து நம்பி நாராயணன் ஓய்வு பெற்றார்.
சட்டப் போராட்டம்: இந்தக் குற்றச்சாட்டு காரணமாக எல்லையற்ற அவமானங்களைச் சந்தித்தார். தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காகவும், நேர்ந்த அவமானத்துக்காகவும் அவர் வழக்கு தொடுத்தார். நியாயம் அவர் பக்கம் இருந்த காரணத்தால் அதில் வெற்றியும் பெற்றார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பி நாராயணனுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்குமாறு கேரள அரசுக்கு உத்தரவிட்டது.
“விண்வெளி சார்ந்த ஆராய்ச்சி பணிகள் எனது வாழ்வில் ஒரு பகுதி எனச் சொன்னால், எனக்கு நடந்த அநீதிக்கு எதிராக நான் நடத்திய சட்டப் போராட்டமும் என் வாழ்வின் மற்றொரு பகுதி” என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“விண்வெளியில் இந்தியாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் இலக்கோடுதான் பணிக்கு வந்தேன். வழக்கில் சிக்க வைக்கப்பட்டு மேலே வர முடியாத நிலைக்கு ஆளாக்கினர். நான் எந்த தவறும் செய்யாத போது ஏற்படும் நல்லது, கெட்டதை ‘விதி' என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த 'விதி'யை மாற்ற, இன்னொரு 'விதி' தேவைப்பட்டது. விதியின் விளைவு தான் இப்போதைய தீர்ப்பு. இது சட்ட விதி!
இலக்கிலிருந்து வழிமாறிப் போகும்போது, தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட்டது என நான் எண்ணுபவன் அல்ல. அதில் எனக்கான இலக்கை நோக்கி ஓடினேன். வேறு யாரும் 24 ஆண்டுகள், மனம் தளராது போராடுவார்களா என்பது சந்தேகமே!” என தனது சட்ட போராட்ட வெற்றிக்கு பிறகு தெரிவித்திருந்தார் விஞ்ஞானி நம்பி நாராயணன்.
2019-ம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி இந்திய அரசு கவுரவித்தது. அப்போது அவரது மனதில் இருந்து உதிர்த்த வார்த்தைகள் முக்கியமானவை. “வெளிநாடுகளுக்கு ரகசிய தகவல் அளித்ததாக என் மீது குற்றம்சாட்டியதன் காரணமாக, எனது பெயர் நாடு முழுவதும் பிரபலம் அடைந்தது. தற்போது, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் எனது பங்களிப்புக்கு இறுதியாக அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனக்கு கிடைக்கப்பெற்ற பத்மபூஷண் விருதினை எனது பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன்” என்றார் உணர்வுபூர்வமாக.
இப்போது அவரது வாழ்க்கை கதையைத் திரைக்கதையாக விவரிக்கும் படம் வெளிவரவுள்ளது. அதில் இயக்குநர் மாதவன் என்ன சொல்லியுள்ளார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT