Published : 02 Jun 2022 07:06 AM
Last Updated : 02 Jun 2022 07:06 AM

கௌரவ விரிவுரையாளர்களை அரசு கைகழுவப்போகிறதா?

சே.சோ.இராமஜெயம்

திறன் மிகுந்த இளைஞர்களைப் பயன்படுத்தி, நிர்வாகச் செயல்முறைகளையும் சேவை வழங்கலின் செயல்திறனையும் மேம்படுத்தும் வகையில் ‘தமிழ்நாடு முதல்வரின் புத்தாக்கத் திட்டம்’ என்ற சிறப்புத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு 30 இளைஞர்களைத் தேர்வுசெய்ய ஆணை பிறப்பித்துள்ள தமிழ்நாடு முதல்வரின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. ஏராளமான இளைஞர்கள் உயர் கல்வி பயில்வதற்கும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் அரசு துணைநிற்பதும் நல்ல கல்விச் சூழலை வளர்க்கும்.

உயர் கல்வி பெற்றவர்களின் கடைசி விருப்ப மாகவே இன்று ஆசிரியர் பணி மாறியிருக்கிறது. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் பல்வேறு நிலைகளில் தற்காலிக ஆசிரியர்களையும் சிறப்பு ஆசிரியர்களையும் தற்காலிகப் பேராசிரியர்களையும் தொகுப்பூதியத்தில் பணியமர்த்துவதை அரசு ஒரு நடைமுறையாகவே கடைபிடித்துவருவதும், அவர்களுக்குரிய அடிப்படைச் சம்பளத்தை உறுதியளிக்காத போக்கும் அண்மைக் காலமாக அரங்கேறிவருகிறது.

ஆசிரியர்கள் விதைநெல்லைப் போன்றவர்கள். அவர்களுக்குரிய தேவைகளைப் பூர்த்திசெய்துகொடுப்பதும், அவர்களின் கற்பித்தல் சூழலையும் நல்ல மனோதிடத்தை வளர்த்தெடுப்பதும் அரசின் கடமை. இதை உணராமல், அரசும் உயர் கல்வித் துறையும் தொகுப்பூதியத்தில் ஏறக்குறைய 4,083 கௌரவ விரிவுரையாளர்களை இரண்டு சுழற்சிகளிலும் தற்காலிக முறைமையில் அரசு கலைக் கல்லூரிகளில் பணியமர்த்திக் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வைத்திருப்பது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டின் அரசு கலைக் கல்லூரிகளில் ஒருசில கல்லூரிகளைத் தவிர, பெரும்பாலானவை 65% கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டுதான் இயங்கிவருகின்றன. தற்போது இவர்களுக்கு அரசு வழங்கிவரும் மாதாந்திரத் தொகுப்பூதியம் வெறுமனே ரூ.20 ஆயிரம்தான் என்பதை அறியும்போது ஆசிரியர்களை அரசு நடத்தும் விதத்தை எளிதில் புரிந்துகொள்ளலாம். இவர்களில் பெரும்பாலானோர் தகுதித் தேர்வு முடித்தவர்களாகவும், முனைவர் பட்டம் பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். ஏறக்குறைய 20 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றிவருவதும் எவ்விதப் பணிப் பாதுகாப்புமின்றி பணிபுரிந்துவருவதும் குறிப்பிடத்தக்கது. என்றைக்காவது ஒரு நாள் அரசு தங்களுக்கு நிரந்தரப் பணியை வழங்கிவிடாதா என்ற கனவுடன், வேறு பணிகளுக்கும் செல்ல முடியாத நிலையில் இவர்கள் உழன்றுவருகிறார்கள்.

சொற்ப ஊதியத்தில் தங்கள் திறன்களைக் கற்பித்தல் பணியில் வெளிப்படுத்தி, ஏராளமான மாணவர்களை உருவாக்கிவரும் இவர்களைப் பற்றி தமிழ்நாடு முதல்வரின் கவனத்துக்கு இதுவரையிலும் உரிய துறை அதிகாரிகள் எடுத்துச்சென்றார்களா என்பது தெரியவில்லை. அப்படி எடுத்துச் சென்றிருப்பின் தமிழ்நாடு முதல்வர் சமூகநீதிப் பார்வையில் அவர்களுக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குறைந்தபட்ச அடிப்படை ஊதியத்தையோ பணி நிரந்தரத்தையோ நிச்சயம் செய்திருப்பார்.

இந்திய அளவில் மற்ற மாநிலங்களைவிட ஒப்பீட்டளவில் தமிழ்நாடு உயர் கல்வியில் முன்னணி மாநிலமாகத் திகழ்ந்துவருவதில் கௌரவ விரிவுரையாளர்களின் பங்கும் அடங்கியிருப்பதை அரசு மறந்துவிடக் கூடாது. மற்ற மாநிலங்களில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஊதியத்தைப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு மட்டுமே குறைந்த ஊதியத்தை அளித்துவருவது புலனாகும். சமூகத்தை நிர்மாணிப்பவர்களில் மிக முக்கியமானவர்களான ஆசிரியர்களை இப்படிச் சுரண்டலாமா என்று பலரும் குமுறுகின்றனர். ஹரியாணா, மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் போன்ற மாநிலங்களில் பல்கலைக்கழக மானியக் குழு வழிகாட்டியிருக்கும் விதிமுறைகளைப் பின்பற்றி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்பட்டுவருவதைப் பார்க்க முடிகிறது. புதுச்சேரியிலும் 40 ஆயிரம் ரூபாய் மாதாந்திர ஊதியமாக வழங்கப்பட்டுவரும் நிலையில், தமிழ்நாடு அரசு மட்டும் குறைந்த ஊதியத்தில் அவர்களைப் பணி புரிய அனுமதிக்கலாமா?

விலைவாசி உயர்ந்துகொண்டே வரும் தற்போதைய சூழலில், குறைந்த ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு, தங்களின் அன்றாடத் தேவைகளை எப்படி இவர்களால் நிறைவேற்றிக்கொள்ள இயலும் என்பதை அரசு எப்போது உணரப்போகிறது? கடந்த 10 ஆண்டுகளாக உயர் கல்வித் துறையில் எவ்விதப் பேராசிரியர் நியமனங்களையும் மேற்கொள்ளாததன் விளைவு, தற்போது ஏறத்தாழ 5,000 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. காலியிடங்களைத் தற்போதைய அரசும் உரிய காலத்துக்குள் நிரப்பாமல் காலம் தாழ்த்திவருவது, உயர் கல்வி பயின்றோரிடம் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

பல பல்கலைக்கழகங்களில் தொகுப்பூதிய முறையிலும் மணிக்கணக்கு என்ற அளவுகோலிலும் கௌரவ விரிவுரையாளர்களைக் குறைந்த ஊதியத்தில் பணியமர்த்தியிருக்கின்றனர். குறிப்பாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் போன்றவை. இவை தவிர, பல்வேறு பல்கலைக்கழகங்களின் ஆளுகையின் கீழ் இருந்துவந்த உறுப்புக் கல்லூரிகளைக் கடந்த அதிமுக அரசும் தற்போதைய திமுக அரசும் அரசு கலைக் கல்லூரிகளாக மாற்றியமைத்திருப்பது உயர் கல்வித் துறையில் நிகழ்ந்த சீர்திருத்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில், பெரும்பாலான கல்லூரிகளில் நிரந்தரக் கட்டிடமின்றி, நிரந்தரப் பேராசிரியர்களைப் பணியமர்த்தாமல், தற்காலிகப் பேராசிரியர்களை வைத்தே மாணவர் களுக்குக் கற்பித்தல் பணியைத் தொடரச் செய்வது என்பது உயர் கல்வித் துறையின்மீது அரசு அலட்சியம் காட்டுகிறதோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

பெரும்பாலான அரசு கலைக் கல்லூரிகளில் புதிதாக முதுகலைப் பாடங்களும் ஆராய்ச்சித் துறைகளும் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், ஆய்வு மாணவர்களுக்கு வழிகாட்டுவதற்கு அங்கு குறைவான பேராசிரியர்களே இருந்துவருவதும், முனைவர் பட்டம் மேற்கொள்ள நினைக்கும் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டிகள் கிடைப்பது அரிதாக இருப்பதற்கும் காரணம், அங்கு பணிபுரியும் திறன் வாய்ந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஆய்வை மேற்பார்வையிடுவதற்கான வாய்ப்புகளை அரசும் உயர் கல்வித் துறையும் வழங்க முன்வராததே. எனவே, ஆய்வுப் புலத்தில் செயல்திறன் மிக்க இளைஞர்களின் மீது அக்கறையுடன் இந்த அரசு இருப்பதால் உயர் கல்வி அமைச்சரும் அதிகாரிகளும் கௌரவ விரிவுரையாளர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்படுவதுதான் உயர் கல்வித் துறையை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும்.

- சே.சோ.இராமஜெயம், தொடர்புக்கு: drramji1978@gmail.com

To Read this in English: Govt. washing its hands off honorary lecturers?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x