Published : 21 Mar 2022 06:07 AM
Last Updated : 21 Mar 2022 06:07 AM

இலங்கையை மீட்டெடுக்க என்ன செய்யலாம்?

எம்.ரிஷான் ஷெரீப்

இலங்கையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள், எரிபொருட்கள், ஆடைகள், கட்டுமானப் பொருட்கள் போன்றவற்றின் விலையையும் புகையிரத, பேருந்துக் கட்டணத்தையும் நாளாந்தம் ஏற்றிப் பல சுமைகளை இலங்கை அரசு பொதுமக்கள் மீது திணித்துவருவதைப் பற்றிக் கடந்த வாரம் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கட்டுரை எழுதியிருந்தேன். தற்போது பிரித்தானியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளும் இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் செல்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு தமது தேசத்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன. காகிதத் தட்டுப்பாடும் உச்ச அளவில் காணப்படுவதால் இலங்கை அரச பாடசாலைகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்களின் பரீட்சைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமது குழந்தைகளுக்கு உணவளிக்க இயலாமல் போன கவலையிலும் பட்டினியாலும் பெற்றோர்கள் பலரும் தற்கொலைசெய்துகொண்டது, உணவுப் பொருட்களையும் மண்ணெண்ணெயையும் பெற்றுக்கொள்வதற்காக மணித்தியாலக் கணக்கில் பல கிலோமீற்றர்கள் நீளமான வரிசைகளில் பட்டினியோடு காத்துக்கொண்டிருந்தவர்கள் மயங்கி வீழ்ந்து மரணிப்பது போன்ற செய்திகள் இலங்கை ஊடகங்களில் தினமும் காணக்கூடியதாக இருக்கிறது.

இலங்கையில் இவ்வாறான பொருளாதார நெருக்கடியும் பஞ்சமும் ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பிரதமர் மஹிந்த ராஜபசவின் புதல்வரும் அமைச்சருமான நாமல் ராஜபக்ச மாலத்தீவில் கேளிக்கை விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளமை நாட்டுமக்களிடையே பெரும் அதிருப்திக்கும் கண்டனத்துக்கும் காரணமாகியிருக்கிறது.

இலங்கை அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராகக் கடந்த வாரம் எதிர்க்கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை பல்லாயிரக்கணக்கான பொதுமக்களை ஒன்றுதிரட்டி கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தியதில் கொழும்பு நகரின் பல பகுதிகள் முடங்கிப் போயிருந்தன. மீண்டும் உடனடியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாசவின் கோரிக்கையாக இருந்தது. தனக்கு எதிராகக் கிளம்பியுள்ள இந்த அரசியல் நெருக்கடிகளைக் கண்ணுற்ற ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச உடனடியாக, கடந்த 16-ம் திகதி தொலைக்காட்சி வழியாக நாட்டுமக்களுக்கு உரையாற்றினார். அதில் நாட்டில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிநிலையைத் தான் அறிவேன் என்றும் இந்த நெருக்கடிக்குக் காரணம் தானல்ல என்றும் தெரிவித்ததோடு, சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதற்குத் தான் முடிவெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஒரு நாட்டில் வாழும் மக்கள் மீது தனக்குள்ள பொறுப்பை இவ்வளவு எளிதாகக் கடந்து செல்ல அந்த நாட்டின் அரசாங்கத்தால் முடியாது. தனது தேசத்தவர்கள் நாட்டில் நிம்மதியாகவும் கௌரவமாகவும் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுத்தல், அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றத் தேவையான வசதிகளை வழங்குதல் போன்றவை ஒரு அரசாங்கத்தின் கட்டாயக் கடமைகளாகும். என்றாலும், இப்போது இலங்கையிலுள்ள அரசாங்கம் அந்தக் கடமைகளைச் சரிவரச் செய்கிறதா என்பது தவிர்க்க முடியாத கேள்வியாக மக்களிடம் எழுந்திருக்கிறது.

‘நான் செய்வதுதான் சரியானதும் முழுமையானதும் ஆகும்’ என்று நாட்டின் ஜனாதிபதி மார்தட்டிக்கொள்வதை நிறுத்திவிட்டு, ஏனையவர்களின் கருத்துகளைக் கேட்டுச் செயலாற்ற வேண்டும். அவ்வாறே இந்த நெருக்கடி நிலையை மாற்ற அனைவரினது உதவிகளையும் பெற்றுக்கொள்ளக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும். தகுந்த ஆலோசனைகளையும் உதவிகளையும் பெறுவதற்கு நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் ஒன்றுகூடச் செய்ய வேண்டும்.

அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை அனைவரும் ஒன்றாகச் சேர்ந்துதான் மீட்டெடுக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு, அனைத்துக் கட்சிகளும் ஒன்றுதிரண்டு ஒருமித்த மனதோடு இந்தச் சந்தர்ப்பத்தில் தமது ஒத்துழைப்பை நேர்மையான மனதோடு வழங்க வேண்டும். சில பிரச்சினைகளுக்குக் காலம் தீர்வளிக்கும். என்றாலும், அவ்வாறான ஒன்றை எதிர்பார்த்து வெறுமனே காலம்தாழ்த்துவது இருக்கும் பிரச்சினைகளை மேலும் மேலும் உக்கிரமாக்கி, சிக்கல்களுக்குள்ளாக்கும். அதல பாதாளத்தில் வீழ்ந்திருக்கும் நாட்டை மேலே தூக்கிவிட உடனடி நடவடிக்கை அவசியமாகும். தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைக் காண்பதற்குக் காலம் தாழ்த்துவது என்பது பிரச்சினைகளை மேலும் தீவிரமாக்கவே செய்யும்.

தமக்குத் தேவையானவற்றை வாங்குவதற்காக வரிசைகளில் காத்திருக்கும் மக்கள், செய்திக் காணொளிகளில் தெரிவிக்கும் கருத்துகள் மூலம் பொதுமக்களை வருத்தும் நெருக்கடிகள் எவை என்பதை அரசியல்வாதிகள் எளிதில் அறிந்துகொள்ளலாம். அந்த நெருக்கடிகள், நாட்டுமக்கள் அனைவருக்கும் உரியவை. கடக்கும் ஒவ்வொரு மணித்தியாலமும், ஒவ்வொரு நாளும் அந்த நெருக்கடிகளை மேலும் மேலும் தீவிரமாக்குவதையே செய்துவருகின்றன.

அவற்றுக்கான அரசாங்கத்தின் தீர்வு அருகில் இல்லை என்பது பொதுமக்களை மேலும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளதோடு மக்களது சந்தோஷத்தையும் நிம்மதியையும் இழப்பதற்குக் காரணமாகவும் உள்ளது. தமது வாழ்க்கையில் இவை இரண்டும் இல்லாமல் ஒவ்வொரு நாளையும் கடத்த வேண்டி நேர்ந்திருப்பது எந்த அளவு மோசமானதும், துயர் நிறைந்ததுமான நிலைமை என்பதை வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவுக்கு இலங்கையர்கள் அனைவரும் இன்று தமது அனுபவத்தில் அறிந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்க அரசாங்கமானது, பல்வேறு நாடுகளிடம் உதவி கோரியபோதிலும் இந்தியா மாத்திரமே தனது ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து இலங்கைக்கு வழங்கிவருகிறது. தற்போதைய நிலையில், இலங்கை அரசாங்கத்தின் ஒரே நம்பிக்கையாக இந்தியா இருக்கிறது. ஆகவே, கடந்த 16-ம் திகதி இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து நிதியுதவி கோரியதோடு, ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களை நிபந்தனையற்ற கடனாக இந்தியா வழங்கியது. கடந்த டிசம்பர் மாதமும் பசில் ராஜபக்ச இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்துக் கலந்துரையாடியதில் நிதியுதவி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை நாடு சவால்களை வாய்ப்புகளாகக் கருதி, பல வெற்றிகளைக் கண்ட நாடு. இப்போதும் ஒன்றன் பிறகு ஒன்றென வந்துகொண்டேயிருக்கும் நெருக்கடிகளை எதிர்த்து வெல்ல நாட்டுமக்களால் முடியும். அதற்கு, நாட்டுமக்கள் அனைவருக்கும் அந்த ஒரே குறிக்கோள்தான் இருக்க வேண்டும். அத்தோடு, ஒரு சரியான செயல்திட்டமும் இருக்க வேண்டும். கட்சிகளும் தலைவர்களும் மக்களும் என அனைவரும் ஒன்றுசேர்ந்தால் அந்த செயல்திட்டத்தை உருவாக்குவது சிரமமில்லை.

- எம்.ரிஷான் ஷெரீப், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், இலங்கை. தொடர்புக்கு: mrishansh@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x