Published : 20 Mar 2022 06:00 AM
Last Updated : 20 Mar 2022 06:00 AM
தொன்மைவாய்ந்த நமது தமிழ் மொழியானது இலக்கியம், வாழ்வியல், மருத்துவம், அறம் என்று எல்லாவற்றிலும் தொன்றுதொட்டு நமக்கு வழங்கிவரும் வளங்கள் அளப்பரியன. பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு, தன் அடிப்படைத்தன்மை மாறாமல் இருந்துவரும் மொழி நம்முடையது. காலத்தால் தமிழுக்குப் பிறகு தோன்றிய மற்ற மொழிகள் பேசும் நாடுகளில் அந்நாட்டினர் கல்வியைத் தாய்மொழி வழியாக வழங்கிவருகிறார்கள். எந்தத் துறை சார்ந்த அறிவாக இருந்தாலும் தாய்மொழி வழியாகப் பயிற்றுவிக்கப்படும்போது கருத்துகள் எளிமையாகப் புரிந்துகொள்ளப்படுவதோடு சிந்தனையும் வளமடைகிறது. புதிய யோசனைகளும் ஆராய்ச்சிகளும் அதனால் தூண்டப்படுகின்றன.
சீனா, ஜப்பான், கொரியா, ஐரோப்பிய நாடுகள், இங்கிலாந்து, அமெரிக்கா போன்றவற்றில் மருத்துவம் அந்நாட்டினரின் தாய்மொழியில்தான் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆனால், தமிழுக்குச் செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டும்கூட மருத்துவக் கல்வியானது தமிழ்நாட்டில் ஆங்கிலத்திலேயேதான் பயிற்றுவிக்கப்படுகிறது. நம் மருத்துவர்களிடையே மருத்துவ ஆராய்ச்சிகளும் புதுமைகளும் தாய்மொழியில் பயின்ற மற்ற நாடுகளின் மருத்துவ வளர்ச்சிக்கு இணையாக இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. மக்கள் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை எடுத்துத் தமிழ் மொழி காப்பதற்கு அரும்பணியாற்றிவரும் தமிழக அரசு நம் மாநிலத்தில் தமிழ்வழி மருத்துவக் கல்லூரி ஒன்றை நிறுவினால், அது தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும். ஏற்கெனவே, இலங்கை போன்ற நாடுகளில் மருத்துவ வல்லுநர்களால் தமிழ்வழி மருத்துவ நூல்கள் எழுதப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிகிறோம். தாய்மொழியில் பயிலும் மருத்துவர்கள் மிகச் சிறந்த மருத்துவர்களாக உருவாக அதிக வாய்ப்புகள் உண்டு.
நான் சென்னை மாநகரச் சுகாதார அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் தண்டையார்ப்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி உருவாக்குவதற்காக அன்றைய சென்னை மேயரும், இன்றைய மருத்துவம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியனால் திட்டம் உருவாக்கப்பட்டு, அதற்கான ஆரம்பக்கட்டப் பணிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டது. அதன் பின்னர் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் இத்திட்டம் நடைமுறைப்படுத்த இயலாமல் போனது. இந்த மருத்துவக் கல்லூரி, சென்னை மாநகராட்சியில் நிர்வகிக்கப்படுவதோடு சென்னை மக்களின் வரிப் பணத்தில் நடத்தக்கூடியதாக அமையும். எனவே, வரி செலுத்தும் அனைத்து சென்னை மக்களும் அதன் பங்குதாரர்களாக இருக்க முடியும். சென்னை மாநகராட்சிக்குப் பிறகு தோன்றிய மும்பை மாநகராட்சியில் ஏற்கெனவே மூன்று மருத்துவக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன என்பது இதற்கு ஒரு முன்னுதாரணமாக அமையலாம். மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நினைவாக அவரது பெயரிலேயே இம்மருத்துவக் கல்லூரியை உருவாக்குவதற்குத் தமிழக அரசு முயற்சி மேற்கொள்ளலாம். மருத்துவத் துறையில், குறிப்பாக சென்னையில் உள்ள மூன்று மருத்துவக் கல்லூரிகளிலும் (MMC, SMC, KMC) பல புதிய துறைகளை (Neurosurgery, Cardiosurgery, Thoracicsurgery, Liver transplant, Oncosurgery) உருவாக்கிய பெருமை மு.கருணாதியையே சாரும். அதைப் போன்று, 1930-களில் தாம்பரம் அருகே உள்ள மாடம்பாக்கத்தில் சுமார் 35 ஏக்கர் நிலத்தை மருத்துவம் / தொழுநோய் சார்ந்த மருத்துவமனையைக் கட்ட ஒரு சமூக ஆர்வலரால் வழங்கப்பட்ட இடத்திலும் மருத்துவக் கல்லூரியை நிறுவுவதற்குத் திட்டமிடலாம்.
தமிழ்வழி மருத்துவக் கல்லூரிகளை நிறுவினால், தமிழகம் மற்றும் இந்திய வரலாற்றில் முக்கிய இடம்பெறும் என்று நிச்சயமாக நான் கருதுகிறேன். அதுமட்டுமின்றி, மற்ற மொழி பேசும் மாநிலங்களும் இதனை முன்னுதாரணமாகக் கொண்டு தாய்மொழியில் மருத்துவக் கல்லூரி நிறுவக்கூடும். மருத்துவம் தாய்மொழியில் கற்பிக்கப்படும்போது அது மருத்துவர்களுக்கு மட்டுமல்ல மக்களுக்கும் மிகுந்த நன்மையை ஏற்படுத்தும்.
- மருத்துவர், முன்னாள் சென்னை மாநகர தலைமை சுகாதார அலுவலர்.
தொடர்புக்கு: drkugan@yahoo.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT