Published : 16 Nov 2020 03:12 AM
Last Updated : 16 Nov 2020 03:12 AM
அமெரிக்கத் தேர்தல் நடந்து முடிந்து ஒரு வாரத்துக்கும் மேலாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளிக்கும் வாக்குகள் மாநிலவாரியாக நியமிக்கப்பட்டிருக்கும் தேர்வர்கள் அடங்கிய குழுவுக்குப் போகும். இந்தக் குழுவில் 538 தேர்வர்கள் இருப்பார்கள். இதில் 270 பேரின் ஆதரவைப் பெற வேண்டும். பைடனுக்கு 290 தேர்வர்களின் ஆதரவு கிடைத்துவிட்டது. இன்னும் 16 பேரின் ஆதரவைப் பெறும் வாய்ப்பும் உள்ளது. உலகின் பல நாட்டு அதிபர்களும் பிரதமர்களும் தலைவர்களும் பைடனுக்கு வாழ்த்துத் தெரிவித்துவிட்டனர். ஆனால், ஒருவர் இன்னும் வாழ்த்தவில்லை. அவர் பெயர் ட்ரம்ப்!
ட்ரம்ப் இதுவரை அவரது தோல்வியையும் ஒப்புக்கொள்ளவில்லை. அது மட்டுமில்லை; இந்தத் தேர்தல் மோசடியானது என்று குற்றமும் சாட்டுகிறார். இப்போது இது பேசுபொருளாகிவிட்டது. நடைமுறை, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுடன் அரசமைப்புச் சட்டமும் அலசப்படுகிறது. அமெரிக்காவில் புதிய அதிபர் ஜனவரி 20 அன்றுதான் பதவியேற்பார் என்பதால், இப்போது சூழல் ஆரூடங்களாலும் ஊகங்களாலும் நிறைந்திருக்கிறது.
அமெரிக்கப் பண்பாடு
அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறைதான் அதிபராக முடியும். முதல் முறை அதிபராக இருந்தவர் பெரும்பாலும் அடுத்த முறையும் போட்டியிடுவார். அப்படிப் போட்டியிட்டவர்களில் வெற்றி பெற்றவர்களே மிகுதி. சமீப காலத்தில் வெற்றியைத் தவறவிட்டவர்கள் மூன்று பேர். அதில் ஒருவர் ஜார்ஜ் டபிள்யூ புஷ். 1993, ஜனவரி 20 அன்று தன் கைப்பட எழுதி புதிய அதிபராகப் பதவியேற்ற பில் கிளிண்டனின் அலுவலக மேசை மீது புஷ் விட்டுச் சென்றிருந்த குறிப்பு பிரசித்தமானது. அது இப்படி முடியும்: ‘நீங்கள் இந்தக் குறிப்பைப் படிக்கும்போது எங்கள் அதிபராகியிருப்பீர்கள். உங்களுக்கு எல்லா நன்மைகளும் நேரட்டும். இனி உங்களது வெற்றி என்பது நமது தேசத்தின் வெற்றி.’
அதற்கு முன்பு, அதிபராக இருந்தபோதே தோல்வியடைந்தவர் ஜிம்மி கார்ட்டர். 1980 நவம்பரில் வாக்குகள் எண்ணப்பட்டுக்கொண்டிருந்தபோதே வெற்றிமுகத்திலிருந்த ரொனால்ட் ரீகனை வாழ்த்தினார் அவர். ‘நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் தீர்ப்பை ஏற்று நான் அதிபரானபோது மிகுந்த உற்சாகத்தோடு இருந்தேன். இப்போது அதே மக்கள் தீர்ப்பு எனக்குச் சாதகமாக இல்லை. என்னுள் பழைய உற்சாகம் இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
ஆயினும், இந்த முறையும் மக்கள் தீர்ப்பை ஏற்கிறேன்’ என்பதுதான் அவர் விடுத்த செய்தி. அதற்கு நான்கு ஆண்டுகள் முன்பு இதே கார்ட்டர் வாகை சூடியபோது, அப்போது அதிபராக இருந்த ஜெரால்டு போர்டும் நயத்தக்க நாகரிகத்தோடு நடந்துகொண்டார். 2016-ல் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டபோது அப்போது அதிபராக இருந்தவர் ஒபாமா. இரண்டு முறை அதிபராக இருந்துவிட்டதால் அவர் போட்டியிடவில்லை. அப்போது ஒபாமா நள்ளிரவில் ட்ரம்பை அழைத்து வாழ்த்துச் சொன்னார். ‘அடுத்த இரண்டு மாதங்களுக்கு நீங்கள் பதவியேற்கும் வரை உங்கள் குழுவினருக்கு எனது நிர்வாகம் எல்லா ஒத்துழைப்பையும் நல்கும்’ என்றார்.
இரண்டு நன்மைகள்
தோல்வியடைந்த தலைவர் தோல்வியை ஏற்றுக்கொள்வது நல்ல பண்பாடு என்பது போக, அதனால் இரண்டு உடனடிப் பலன்கள் ஏற்படும். முதலாவது, தலைவரின் ஒப்புதல் வாக்குமூலம் அணிகளுக்குத் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை நல்கும். ட்ரம்புக்கு இது நோக்கமில்லை என்பது தெளிவு. முடிவுகள் தேர்தலன்று இரவே அறிவிக்கப்பட வேண்டும் என்று தனது பரப்புரையில் சொல்லிவந்தார் ட்ரம்ப். அப்படிச் சட்டம் எதுவுமில்லை. என்றாலும், சொல்லிவந்தார். ஏனெனில், தாமதமாக எண்ணப்படும் அஞ்சல் வாக்குகள் தனக்கு எதிராக இருக்கும் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.
இப்போது தேர்தலே ஒரு மோசடி என்று ட்ரம்ப் சொல்லியதும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பைடன் வெற்றி பெற்ற பென்சில்வேனியா, மிஷிகன், நிவாடா, ஜார்ஜியா, அரிசோனா, விஸ்கான்சின் மாநிலங்களில் ட்ரம்ப் ஆதரவாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மோசடி வழக்குத் தொடுத்தனர். ஆதாரம் இல்லாததால் இந்த வழக்குகள் நிற்கவில்லை. தேர்தல் அன்று இரவே உச்ச நீதிமன்றத்துக்குப் போவேன் என்று அறிவித்தவர் ட்ரம்ப். உச்ச நீதிமன்றத்தில் ஒன்பது நீதியரசர்களில் ஆறு பேர் குடியரசுக் கட்சியால் நியமிக்கப்பட்டவர்கள். இதில் மூன்று பேர் கடந்த நான்கு ஆண்டுகளில் ட்ரம்பால் நியமிக்கப்பட்டவர்கள். ஆகவே, நீதிமன்றத்தின் சார்புநிலை குறித்துப் பலரும் அஞ்சுகிறார்கள்.
தலைவரே தோல்வியை அங்கீகரிப்பதில் உள்ள இரண்டாவது நன்மை, அது அதிகாரம் சுமுகமாகக் கைமாற வழிவகுக்கும். ட்ரம்ப் அதையும் விரும்பவில்லை. இப்போது பைடன் அமைத்த கரோனா எதிர்ப்புக் குழுவுக்கு ட்ரம்ப் நிர்வாகம் முட்டுக்கட்டை போடுகிறது. இந்தத் தேசம் ஒரு தர்மசங்கடமான சூழலில் இருக்கிறது என்று பைடன் சொல்லியிருக்கிறார்.
அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் பெயரளவுக்குத்தான் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் அதிபர் தேர்தலை மாநில அரசுகள்தான் நடத்தும். இந்தச் சூழலில் பலரும் அரசமைப்பை வரிவரியாக வாசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
பரீத் சக்காரியா கடந்த செப்டம்பர் மாதம் ‘வாஷிங்டன் போஸ்ட்’டில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் சொல்கிறார்: ஒன்பது மாநிலங்களின் முடிவுகள்தான் தேர்வர் குழுவில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும். இந்த மாநிலங்களில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும். இவை ஊசல் மாநிலங்கள். இவற்றில் எட்டு மாநிலங்களில் குடியரசுக் கட்சிதான் மாநில அளவில் பெரும்பான்மை வகிக்கிறது. இதில் இரண்டு மாநில அரசுகள் தேர்தல் மோசடி என்று சொல்லி முடிவுகளை நிறுத்தி வைத்தால், இரண்டு வேட்பாளர்களாலும் தேர்வர் குழுவில் வெற்றிபெறத் தேவையான 270 இடங்களைப் பெற முடியாது. அப்போது அரசியல் சட்டம் முடிவெடுக்கும் அதிகாரத்தைக் காங்கிரஸுக்கு வழங்குகிறது. இதில் என்ன விநோதம் என்றால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் உறுப்பினர்தான் அனுமதிக்கப்படுவார். மொத்தம் உள்ள 50 மாநிலங்களில் 26-ல் குடியரசுக் கட்சியும், 24-ல் ஜனநாயகக் கட்சியும் பெரும்பான்மை வகிக்கின்றன. ஒரு மாநிலத்தில் பலம் சமமாக இருக்கிறது. இவர்கள் வாக்களித்தால் சட்டப்படி ட்ரம்ப் மீண்டும் அதிபராவார் என்கிறார் சக்காரியா.
இந்தக் கட்டுரையை எனது அமெரிக்க நண்பருக்கு அனுப்பியிருந்தேன். அவர் பதிலெழுதினார்: ‘1800-லும் 1826-லும் இப்படி நடந்திருக்கிறது. சட்டப்படி இது சாத்தியம்தான். ஆனால், இப்போது அப்படி நடந்தால் அது ஜனநாயகத் தற்கொலையாக அமையும். அமெரிக்காவைக் கடவுள் காப்பாற்றட்டும்.’
மௌனத்தில் குடியரசுக் கட்சி
தோல்வியை ஒப்புக்கொள்ள மறுப்பது ட்ரம்ப் மட்டுமில்லை. அவரது குடியரசுக் கட்சியின் பெரும்பாலான தலைவர்களும்கூட மௌனம் சாதிக்கிறார்கள். சிலர் ட்ரம்பின் நிலைப்பாட்டை ஆதரிக்கவும் செய்கிறார்கள். அமெரிக்கா இப்படி இருந்ததே இல்லை. 1974-ல் அதிபர் நிக்ஸன் வாட்டர்கேட் ஊழலில் சிக்கினார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. வழக்காடுவேன் என்றுதான் சொல்லிக்கொண்டிருந்தார் நிக்ஸன். குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக நிக்ஸனைச் சந்தித்தனர். விளைவாக, நிக்ஸன் பதவி விலகினார். துணை அதிபர் போர்டு அதிபரானார்.
இன்று அப்படி யாரும் ட்ரம்பைக் கேட்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. ட்ரம்ப் தனிமனிதரல்ல. அவரது ஆட்சி முறையையும் குணாதிசயங்களையும் தெரிந்துகொண்டுதான் 7 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் அவரை ஆதரித்திருக்கின்றனர். புதிய அதிபர் பதவியேற்க இன்னும் இரண்டு மாத காலம் ஆகும். அதுவரை காட்சிகள் மாறும். ஒரு பெரிய ஜனநாயகத்தில் விழுமியங்கள் நிலைநாட்டப்படும் என்று நம்புவோம்.
- மு.இராமனாதன்,
ஹாங்காங்கின் பதிவுபெற்ற பொறியாளர்.
தொடர்புக்கு: mu.ramanathan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT