Published : 25 May 2014 10:40 AM
Last Updated : 25 May 2014 10:40 AM
போட்டிப் பரிட்சைகளென்பது யாதெனில், இராஜாங்க உத்தியோக வகுப்புகளில் அந்தந்த உத்தியோகத்திற்குத்தக்க போட்டிப் பரிட்சை வைத்து அதில் முன்னேறியவர்களுக்கு உத்தியோகமளிக்க வேண்டுமென்னும் ஓர் ஏற்பாட்டைச் செய்ய வேண்டுமென்பதாய் சிலர் வெளிதோன்றி வாதிட்டு வருகின்றார்கள்.
இத்தகைய போட்டிப் பரிட்சையில் பல சாதியோர்களும் இராஜாங்க உத்தியோகத்திற் சேராமல் ஒருசாதியோரே இராஜாங்க உத்தியோகத்திற் சேர்ந்து சுகமடையும்படியான ஏதுவைத் தரும். அதாவது, இத்தேசத்துள் ஒருசாதி வகுப்பி னரன்றி பல சாதிகள் நிறைந்திருக்கின்றார்கள். அவர்களுட் சிலர் கல்வியின் விருத்தியிலும், கைத்தொழில் விருத்தியிலும், விவசாய விருத்தியிலும் நோக்கமுடையவர்களாயுள்ளதுமன்றி கல்வியில் கொடுத்த பாடத்தை இரவும் பகலும் உருபோட்டு ஒப்பிக்கும் வழக்கம் சகலசாதியோரிடத்திலுங் கிடையாது. பெரும்பாலும் அத்தகைய உருப்போடும் வழக்கம் இத்தேச செல்வந்தர்களுக்கும் உழைப்பாளிகளுக்குங் கிடையாது. சிலசாதியோர்களுக்கு மட்டிலுமுண்டு. அவர்களே போட்டிப் பரிட்சையில் முன்னேறுவார்கள். அவர்களே சகல இராஜாங்க உத்தியோகங்களிலும் நிறைந்துவிடுவார்கள். அத்தகைய நிறைவால் அவர்கள் கூட்டத்தோரே சகல சுகமும் பெற்று வாழ்வதுடன் மற்ற சாதியோர்கள் யாவரும் சகலவிஷய சுகங்களுங்கெட்டுப் பாழடைந்துபோவார்கள். சைனா, ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா முதலிய தேசங் களில் ஏகசாதியோர்களாயிருக்கின்றபடியால் அந்தந்த டிபார்ட்மெண்டில் வைக்கும் போட்டிப் பரிட்சைகளில் முன்னேறுவோரும் பின்னடைவோரும் ஏகசாதி யினராக யிருக்கின்றபடியால் தேறினோரும் தேறாதோரும் அவர் களைச் சார்ந்தவர்களும் சமரச சுகவாழ்க்கையை அநுபவித்து வருகின்றார்கள்.
இந்திய தேசத்தில் அத்தகைய ஏகசாதிகூட்டமில்லா பல சாதிக் கூட்டங்கள் நிறைந்துவிட்டபடியால் ஒருசாதியார் போட்டிப்பரிட்சையில் முன்னேறிவிடுவார்களாயின் மற்றைய சகலசாதியோரும் கெடுவார்களென்பது சொல்லாமலே விளங்கும்.
ஆதலின் நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் பலசாதியோர் நிறைந்துள்ள இத்தேசத்தில் போட்டிப் பரிட்சை வையாது அவரவர்கள் யோக்கியதையையும் அந்தஸ்தையும் உழைப்பையும் இராஜவிசுவாசத்தையும் கண்டு அந்தந்த உத்தியோகங்களைக் கொடுத்துக்கொண்டுவருவதுடன் அந்தந்த டிபார்ட்மெண்டுகளாகும் ஒவ்வொரு வகுப்பிலும் பௌத்தர்கள் இத்தனை பேர், இந்துக்கள் இத்தனை பேர், மகமதியர் இத்தனை பேர், கிறிஸ்தவர்கள் இத்தனை பேர் எனக் குறித்துவிடுவார்களாயின் இத்தேச சகலகுடி களும் சுகம்பெற்று இராஜவிசுவாசத்திலும் நிலைத்து வாழ்வார்கள்.
அங்ஙனமின்றி கருணைதங்கிய ராஜாங்கத்தார் போட்டிப் பரிட்சைக்கு இடங்கொடுத்து ஒரு சாதிகளே முன்னேறி சகல டிப்பார்ட்மெண்டு உத்தியோகங்களிலும் நிறைந்துவிட்ட பின்பு அவர்களைக் குறைப்பதற்கு வழிதேடுவதாயின் அவர்களே தீட்டிய மரத்தில் கூர்பார்ப்பவர்களாகவும் உண்ட வீட்டை ரண்டகம் செய்பவர்களாகுமான சத்துருக்களாயினுமாகுவர். ஆதலின் பலசாதிகள் நிறைந்துள்ள இத்தேசத்தில் போட்டிப் பரிட்சையை வையாது சகலசாதியோரும் சுகம்பெற்று வாழும் அவரவர்கள் அந்தஸ்திற்கும் யோக்கியதைக்கும் தக்கவாறு தெரிந்தெடுத்து உத்தியோகமளிப்பதே சிறப்பாதலின் போட்டிப் பரிட்சையென்னும் கருத்தைப் புறந்தள்ளி இராஜாங்கத்தார் பிரியம்போல் நியமித்தலென்னும் கருத்தை நிலைக்கச் செய்ய வேண்டுகிறோம்.
- ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற நூலிலிருந்து ஒரு பகுதி இங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது; நூலின் தொகுப்பாசிரியர்: ஞான அலாய்சியஸ், வெளியீடு: நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT