Published : 23 Jan 2020 08:00 AM
Last Updated : 23 Jan 2020 08:00 AM
சேலத்தில் ஆட்சேபகரமாக நடந்த ஊர்வலத்துக்கு அரசிடமிருந்து முன்அனுமதி எதையும் பெறவில்லை, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி நடத்தப் போவது குறித்து மட்டுமே முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது என்று தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. கருணாநிதி இன்றிரவு தெரிவித்தார்.
சென்னை சூளைமேட்டில் பரத்வாஜேஸ்வரர் காலனியில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசினார். அவர் பேசியதாவது:
அநாகரீகமான இந்த ஊர்வலத்தை நடத்த நான் அனுமதி கொடுத்ததைப்போல எதிர்க்கட்சிகள் சித்தரிக்கின்றன. ஊர்வலத்துக்கான ஊர்திகள் தயாரிப்பு ரகசியமாக மேற்கொள்ளப்பட்டதால் அரசாங்கத்துக்கு எதுவுமே தெரியாமல் போனது. சேலம் சம்பவம் தொடர்பாக அரசுக்குத் தெரியவந்ததுடன் காவல்துறை அதிகாரிகள் மீதும், ஊர்வலத்துக்குப் பொறுப்பானவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. மக்களுடைய மத உணர்வுகளைப் புண்படுத்தும் எந்தச் செயலையும் என்னுடைய அரசு அனுமதிக்காது.
ஊர்வலத்தின்போது காவல்துறையினர் ஏன் மவுன சாட்சியாக இருந்தனர் என்று கேட்கின்றனர். 1967 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கும்பகோணத்தில் சங்கராச்சாரியாரின் உருவப்படம் அவமதிக்கப்பட்டது. அப்போதும் காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர், அதைத் தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. சேலத்திலும் அதே நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று காவல்துறையினர் நினைத்துவிட்டார்கள் போலும்.
ஆபாசமான சித்தரிப்புள்ள ஊர்வல வண்டி குறித்த புகைப்படங்கள் அச்சிடப்பட்டதால்தான் சென்னையில் ‘துக்ளக்' பத்திரிகை பறிமுதல் செய்யப்பட்டது. வகுப்பு ஒற்றுமையைப் பாதுகாக்கவும் அமைதிக்கு பங்கம் நேரக்கூடாது என்பதற்காகவும்
மக்களுடைய மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்பதற்காகவும் அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
என்னுடைய அரசு ஒரு பத்திரிகையின் குறிப்பிட்ட ஒரு இதழை மட்டும்தான் பறிமுதல் செய்தது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் செய்தித்தாள்களுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. காங்கிரஸுக்கு எதிரான பிரச்சாரத்துக்காக பத்திரிகை ஆசிரியர்கள்கூட கைது செய்யப்பட்டிருக்கின்றனர். சி.என். அண்ணாதுரையும் நானும் எழுதிய நாடகங்களும் புத்தகங்களும் தடை நடவடிக்கைகளுக்கே உள்ளாக்கப்பட்டன.
ராஜாஜிக்கு பதில்
சேலம் சம்பவம் தொடர்பாக மூத்த அரசியல் தலைவர் சி. ராஜகோபாலாச்சாரி கருத்து தெரிவித்திருக்கிறார். தர்மம் பற்றி உபதேசித்திருக்கிறார். 1953-ல் ராஜாஜி முதலமைச்சராக இருந்தபோது இதே போன்ற நடவடிக்கைகளுக்காக ஈ.வெ.ரா. மீது எந்த
நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை. சேலத்தில் மட்டுமல்ல, சென்னையிலும் மாநிலத்தின் வேறு நகரங்களிலும்
விநாயகர் சிலைகளை உடைக்கப்போவதாகவும் ராமர், கிருஷ்ணர் படங்களை எரிக்கப் போவதாகவும் முன்கூட்டியே அறிவித்தார் பெரியார். ராஜாஜி அவருடைய அறிவிப்புகளை அலட்சியம் செய்ததோடு, ‘நாயக்கரின் செயல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை' என்று அலுவலகக் கோப்பில் எழுதினார்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
(‘தி இந்து’ 18.02.1971)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT