Published : 31 Oct 2019 07:57 AM
Last Updated : 31 Oct 2019 07:57 AM
அ.குமரேசன்
சுஜித் முகம் என்னைப் பொறுத்த அளவில் குழந்தைகளுக்கான அரசியல் இங்கே என்ன நிலையில் இருக்கிறது என்ற கேள்வியையே எழுப்புகிறது. குழந்தைகளுக்கான அரசியல் என்றால் என்ன? பெரியவர்களுக்குச் சற்றும் குறையாத மதிப்போடு குழந்தைகளை நடத்துகிற, அவர்களுக்கான உரிமைகளை, நலன்களை மேம்படுத்துகிற அரசியலே அது!
ஐநா சபையின் குழந்தை உரிமைகள் மாநாட்டுத் தீர்மானம், “குழந்தைகள் என்போர் பெரியவர்களைச் சார்ந்திருக்கிற அல்லது பெரியவர்களோடு ஒட்டிக்கொண்டு இருக்கிற பிறவிகளே என்று பார்க்காமல், அவர்களைத் தனியொரு சமூக அமைப்பாகப் பார்க்க வேண்டும்” என்கிறது. குழந்தைகள் அவ்வாறு மதிக்கப்படுகிற சமூகம்தான் முன்னேறிய சமூகம். ஆகவேதான், “உலகத்தின் ஆகச் சிறந்தவை அனைத்தும் முதலில் குழந்தைகளுக்கே” என்றார் லெனின்.
குழந்தை உரிமைகளை வரையறுத்த ஐநாவின் மாநாடு, தீர்மானத்தை அங்கீகரித்துள்ள அரசாங்கங்கள் அனைத்தும் தங்களது நாடுகளில் உரிய சட்டங்களை நிறைவேற்றுவதையும், அவற்றின் செயலாக்கத்தை உறுதிப்படுத்துவதையும் கடமைப் பொறுப்பாக்குகிறது. அதேநேரத்தில், அந்தந்த நாடுகளின் சமூகநிலைகளுக்கு ஏற்ப, குழந்தைப் பருவம் என்பதற்கான வயது வரம்பு உள்ளிட்டவற்றை முடிவுசெய்துகொள்ளவும் அனுமதிக்கிறது. உலக மாநாட்டுத் தீர்மானத்தை அங்கீகரித்துள்ள இந்திய அரசாங்கம், இந்த அனுமதியையும் எடுத்துக்கொண்டது.
ஆகவேதான், 18 வயதை அடையும் வரையில் குழந்தையாகவே கருதப்பட வேண்டும் என்பதை ஏற்றுள்ள இந்தியாவில், குழந்தைத் தொழிலாளர் என்று வருகிறபோது, 14 வயது என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, குறிப்பிட்ட தொழில்களில் அல்லது வேலைகளில் ஈடுபடுத்தப்படுகிறவர்கள் 14 வயதை அடைந்திருந்தால், அவர்கள் அந்த இடத்தில் குழந்தைகளாகக் கருதப்பட மாட்டார்கள். 18 வயதுக்குக் கீழுள்ளவர்களுக்குத் திருமணம் செய்துவைக்கத் தடைவிதிக்கிற வரவேற்கத்தக்கச் சட்டம் உள்ள நாட்டில்தான், இப்படி 14 வயதிலிருந்தே வேலை வாங்குவதற்கு அனுமதிக்கிற சட்டமும் இருக்கிறது.
இது குழந்தைமை என்பதை மதிக்காத போக்குதானே?
பெரியவர்களைச் சார்ந்திருப்பவர்களாகக் குழந்தை களைக் கருதும் நிலையிலிருந்துதான், பெரியவர்கள் தங்கள் விருப்பங்களைக் குழந்தைகள் மீது ஏற்றுகிற நிலையும் தொடர்கிறது. ஒரு குழந்தை என்ன படிக்க வேண்டும் என்பதைக்கூட சுயமாக முடிவெடுக்கவிடுவதில்லையே? குழந்தையின் உடையில் தொடங்கி, அதை மதம், சாதி, சித்தாந்தத்தின் கீழ் கொண்டுவருவது வரை எல்லாமே உரிமை மீறல்கள்தான்.
மதத்தை ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்வோம். குழந்தைகளின் உரிமைகளை மதிப்பதென்றால், மதங்கள் பற்றி அவர்கள் படித்தறிய சுதந்திரம் இருக்க வேண்டும். குழந்தைப் பருவ வயதைக் கடந்து பெரியவர்களாகிறபோது, எந்த மதத்தைப் பின்பற்றுவது என்பதை அவர்களே தேர்ந்தெடுக்கிற சுதந்திரமாக அது பரிணமிக்க வேண்டும். 18 வயதில், யார் நாட்டை ஆள வேண்டும் என்று முடிவுசெய்து வாக்களிக்கிறவர்களால் எந்த மதம் தங்களை வழிநடத்த வேண்டும் என்று முடிவுசெய்ய முடியாதா?
குழந்தைகளின் உரிமைகள் என்று இந்தியச் சூழலில் வரையறுக்கப்பட்டிருக்கும் அம்சங்கள் குறைவு. அவற்றில் மீறல்கள் நடக்கும்போதும்கூடப் போதிய அளவுக்கு இங்கே நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. இந்தக் கண்காணிப்பு அமைப்புகளில் போதிய ஊழியர்கள் இல்லாதது, இது மட்டுமே பணியாகச் செயல்பட முடியாமல் மற்ற வேலைகளோடு இதுவும் ஒரு வேலையாகச் செய்ய வேண்டியிருப்பது போன்ற காரணங்களால், முழுமையாகவும் உரிய வேகத்திலும் பங்களிக்க இயலாத நிலைமையே நீடிக்கிறது என்று குழந்தை உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.
அடிப்படையில், அந்தந்த உள்ளாட்சி மட்டத்திலேயே இதற்கான விதிகள், பணியாளர் ஏற்பாடுகள், அதிகாரங்கள் இருந்தால் குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். ஓர் உதாரணம், கேரளத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்படும் ‘ஜாக்ரதா குழு’. ஊராட்சி மன்றம் கூடுகிறபோதெல்லாம் இந்தக் குழுவும் கூடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அந்த வட்டாரத்தில் நடந்த குழந்தை உரிமை மீறல்கள், பாதுகாப்புக் குறைபாடுகள் போன்றவற்றை மட்டுமே இக்குழு விவாதிக்கும்.
குழுவினரின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பதிலளித்தாக வேண்டும். இத்தகைய ஏற்பாடு அடிப்படையான குழந்தை உரிமைக் கொள்கையிலிருந்தே வர முடியும். இப்படியான கொள்கைகளை உருவாக்குவதும் மாநிலங்களுக்கு எடுத்துக்கூறுவதும் வழிகாட்டுவதும் நடுவண் அரசிலிருந்தே தொடங்கி, நாடு முழுவதும் நடைமுறையாகிறபோது, அது நடுக்காட்டுப்பட்டிகளிலும் எதிரொலிக்கும்!
- அ.குமரேசன், ‘தீக்கதிர்’ நாளிதழின் முன்னாள் ஆசிரியர். தொடர்புக்கு: theekathirasak@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT