Published : 10 May 2014 12:00 AM
Last Updated : 10 May 2014 12:00 AM
அக்னி நட்சத்திரத்தின் வெம்மை சென்னையில் சூழ்ந்துள்ள நிலையில் ஆழ்வார்பேட்டை வின்யாசா கலைக் கூடத்தில் இடம்பெற்றுள்ள தண்மையான ஓவியங்கள் காண்போரைத் தங்கள் பக்கம் ஈர்த்துவிடுகின்றன. ஜூன் 30 வரை நடைபெற உள்ளது இந்த ஓவியக் கண்காட்சி. 90 ஓவியர்கள் தீட்டிய 350 ஓவியங்கள் கலைக் கூடத்தின் ஒவ்வொரு சுவரையும் மெருகேற்றுகின்றன. இந்தக் கலைக்கூடத்தில் நடைபெறும் 15-ம் ஆண்டு கண்காட்சி இது என்கிறார்கள்.
வளர்ந்துவரும் இளங்கலைஞர்கள் மூத்த கலைஞர்களுடன் கலந்து உறவாடும் வாய்ப்பை இந்தக் கண்காட்சி வழங்கியுள்ளது. அது மாத்திரமல்ல, புதிதாக ஓவியம் வாங்க வருபவர்களைப் புதியதொரு மாய உலகுக்குள் வழிநடத்திச் செல்கிறது இந்த வண்ணமயக் கண்காட்சி. ஓவியங்களை வாங்குபவர்களுக்கும் ஓவியக் கலைஞர்களுக்கும் இணக்கமான கண்காட்சியாக இது உள்ளது என்கிறார் கலைக்கூடத்தைச் சேர்ந்த விஜி நாகேஸ்வரன்.
பொதுவாக ஓவியங்களை வாங்க விழைபவர்கள் ஓவியங்களின் விலை மிக அதிகமாக இருக்கும் என்றும் இது தமக்கானது இல்லை என்றும் எண்ணுவார்கள். ஓவியர்களோ தங்கள் திறமையின் வெளிப்பாடான கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்துவதில் பல சிக்கல்களை எதிர்கொள்வார்கள். இந்த இரண்டு பிரிவினரையும் இணைத்து, கலையைக் கலைஞர்களிடமிருந்து புதிய கலை ஆர்வலர்களிடம் கொண்டுசேர்க்கும் வெளியே இந்தக் கலைக்கூடம் என்று அவர் கூறுகிறார்.
கலைக்கு விலை கிடையாது. உயிரோட்டமான ஓவியங்களுக்கு விலையை நிர்ணயிப்பது கடினம். எனினும் ஓவியத்தை விலை கொடுத்து வாங்க நினைப்பவர்கள் எந்தத் தயக்கமுமின்றிக் கண்காட்சியைத் தேடி வருவார்கள். ஒவ்வொரு கலைஞரும் அவர்களது ஓவியங்களுக்கான குறைந்தபட்ச விலையை நிர்ணயித்துள்ளனர் என்று விஜி தெரிவிக்கிறார். ‘‘சிலர் கண்காட்சிகளுக்குச் சென்று ஓவியங்களைக் கண்டுவருவார்கள். ஓவியங்கள் சாதாரணர்களுக்கானது அல்ல எனும்படியாக அந்தக் கண்காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால் இதைப் போன்ற கண்காட்சிகள் மூலம் கலை எல்லோருக்குமானது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்” என்கிறார் மூத்த ஓவியக் கலைஞர் ஆர்.பி. பாஸ்கரன்.
எந்தக் கல்லூரியில் பயின்ற ஓவியர்களின் ஓவியங்கள் என இங்கு வரும் பார்வையாளர்கள் பார்ப்பதில்லை, ஓவியங்கள் சிறப்பாகப் படும் பட்சத்தில் வாங்கிவிடுகிறார்கள் என்று அவர் மேலும் கூறுகிறார்.
இந்தக் கண்காட்சியின் சூழல் ஜனநாயகத் தன்மையுடன் விளங்குவதாக அச்சுதன் கூண்டலூர் என்னும் மூத்த கலைஞர் கூறுகிறார். சிறப்பான கலை காலத்தைக் கடந்து நிற்கும். இந்த ஓவியங்களைப் பார்த்தபடியே நகரும் உங்களைக் கண்டிப்பாக ஏதேனும் ஓர் ஓவியம் கவர்ந்திழுத்து வாங்கவைத்துவிடும். தற்போது இளம் கலைஞர்கள் ஓவியங்களை உருவாக்கும் நுட்பமும் வெளிப்படுத்தும் விதமும் கடுமையான சவாலை ஏற்படுத்தக்கூடியவையாக உள்ளன. அவர்கள் அனைவரும் கடும் உழைப்பாளிகள் என்றும் அச்சுதன் புளகாங்கிதம் அடைகிறார். இதைப் போன்ற கண்காட்சியில் ஏற்கனவே கலந்துகொண்ட கலைஞர்களுடன் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியைச் சேர்ந்த 20 இளங்கலைஞர்கள் இதில் பங்கேற்கிறார்கள். ஓவியர் ஏ. செல்வராஜின் உணர்ச்சி பொங்கும் கண்கள் கொண்ட பெண், சி. டக்ளஸின் சொற்களும் கூடுகளுமான ஆண்களின் உலகம், அச்சுதன் கூண்டலூரின் கோட்டோவியங்கள் போன்ற பல உயிர்ப்பு மிக்க ஓவியங்கள் நமது கண்களைக் குளுமைப்படுத்துகின்றன.
© தி இந்து (ஆங்கிலம்)
தமிழில்: செபா
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT