Published : 09 Feb 2015 09:13 AM
Last Updated : 09 Feb 2015 09:13 AM

ரஷ்யாவிலிருந்து இஸ்ரேல் வந்த ‘யூதர்’களின் கதை

சோவியத் ஒன்றியத்திலிருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட யூதர்கள், இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்ததன் 25-வது ஆண்டு இது. இஸ்ரேலிய சமூகத்தில் இது குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.

சோவியத் ஒன்றியத்தின் இரும்புத் திரை விலகிய பின்னர், இஸ்ரேலை நோக்கி யூதர்கள் திரண்டு வரத் தொடங்கினர். இஸ்ரேலில் இன்று இருக்கும் யூதர்களில் 5-ல் ஒருவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்தவர்தான். ரஷ்யாவிலிருந்து குடிபுகுந்த அலியாக்களின் (வெவ்வேறு நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்குள் குடிபுகுந்த யூதர்களைக் குறிக்கும் சொல்) வாழ்க்கைச் சரித்திரம், வெற்றிக் கதைகளுக்கு உதாரணம்.

“ஒருசில ஆண்டுகளிலேயே இஸ்ரேலின் மக்கள்தொகையில் 20% அதிகரித்துவிட்டது” என்று நினைவுகூர்கிறார் சோவியத் ஒன்றியத்தை எதிர்த்துப் போராடிய யூதர்களில் ஒருவரான நடான் ஷாரன்ஸ்கி. மனித உரிமைப் போராளியான இவர், சோவியத் ஒன்றியத்திலிருந்து யூதர்களை இஸ்ரேலுக்குக் கொண்டுவருவதற்காகக் கடுமையாகப் போராடியவர். “இதுபோன்ற வெற்றிகரமான ஒற்றுமையை உலகில் வேறெங்கும் பார்த்திருக்க முடியாது” என்கிறார் ஷாரன்ஸ்கி.

ஆனால், “ஒற்றுமை என்பது தவறான வார்த்தை” என்கிறார் இஸ்ரேலிய பத்திரிகையாளரும் யூதர்களின் குடிபெயர்வைக் குறித்துப் பேசும் ‘தி மில்லியன் தட் சேஞ்ச்டு தி மிடில் ஈஸ்ட்’ எனும் புத்தகத்தின் இணை ஆசிரியருமான லிலி காலிலி.

“ஒற்றுமை என்பதைக் குறித்து அவர்கள் பெரிதாகப் பேசவில்லை. அவர்களைப் பொறுத்தவரை, தலைமைதான் குறி. அது அவர்களின் இயல்பு. அவர்களது மரபணுவிலேயே இருப்பது. அவர்கள் வெளிப்படையாகவே சொன்னார்கள், ‘நாங்கள் இங்கிருப்பது ஒருங்கிணைப்பதற்காக மட்டுமல்ல, தேவையில்லாமல் உங்கள் நாட்டையோ, கலாச்சாரத்தையோ நாங்கள் புகழ மாட்டோம். ஆனால் அதை எப்படி மேம்படுத்துவது என்பது எங்களுக்குத் தெரியும்’ என்று அவர்கள் குறிப்பிட்டார்கள்” என்கிறார் லிலி காலிலி.

1990-களில் வளைகுடாப் போர் நடந்துகொண்டிருந்த சமயத்தில், இஸ்ரேல் விமான நிலையத்தில் மூட்டை முடிச்சுடன் வந்திறங்கிய சோவியத் ஒன்றிய யூதர்கள், உள்ளூர் வசிப்பிடங்களையும் பணியிடங்களையும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விரிவாக்கத் தொடங்கினார்கள்.

தினமும் வந்து குவிந்துகொண்டிருந்த சோவியத் ஒன்றிய யூதர்களுக்காக, ஏராளமான தற்காலிகக் குடியிருப்புகளை இஸ்ரேல் அரசு உருவாக்கித்தந்தது. வந்து சேர்ந்தவர்களுக்குத் தங்கள் தகுதிக்கேற்ற வேலை கிடைத்துவிடவில்லை. சோவியத் ஒன்றியத்தில் மருத்துவர்களாக, விஞ்ஞானிகளாக, இசைக் கலைஞர்களாக வேலை பார்த்தவர்கள், இஸ்ரேலில் சாலையைப் பெருக்குவது முதல் காவலாளி வேலை வரை, கிடைத்த பணிகளைச் செய்ய நேர்ந்தது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாமே மாறியது. ரஷ்ய மொழி பேசும் யூதர்கள் அரசியல் தலைவர்களாகவும் மருத்துவர்களாகவும் உயர் தொழில்நுட்பப் பொறியாளர்களாகவும், மென்பொருள் வல்லுநர்களாகவும் வளர்ந்திருக்கிறார்கள். இஸ்ரேலின் வெளியுறத் துறை அமைச்சர் அவிக்டார் லியபெர்மான், ரஷ்ய மொழி பேசும் யூதர்தான். இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகர் யூலி எடெல்ஸ்டேனும் சோவியத் ஒன்றியத்திலிருந்து வந்த யூதர்தான். இஸ்ரேல் பள்ளிகளில், ஜிம்னாஸ்டிக், நடனம், இசை என்று பல்வேறு விஷயங்களைக் கற்றுத்தரும் ஆசிரியர்களில் பலர் ரஷ்ய மொழி பேசும் யூதர்களே!

அதேசமயம், 1990-லிருந்து சோவியத் ஒன்றியத்திலிருந்து இஸ்ரேலுக்குக் குடிபெயர்ந்துவந்தவர்கள், மதக் கோட்பாடுகளின்படி யூதர்கள் என்றே கருதப்படுவதில்லை என்பது இன்னொரு விஷயம். அவர்கள், ‘நாடு திரும்புதல் சட்ட’த்தின் கீழ், இஸ்ரேலுக்குத் திரும்பி வருவதற்கான அனுமதி பெற்றவர்கள்தானே தவிர முழுமையான யூதர்களாகக் கருதப்படவில்லை.

இவர்கள், இஸ்ரேலில் உள்ள யூதர்களுடன் திருமண உறவு வைத்துக்கொள்ள அனுமதி இல்லை. யூதர்களின் கல்லறையில் இவர்களது உடல் புதைக்கப்படவும் அனுமதி இல்லை. இதனால், புதிய புகலிடத்தில் அந்நியர்களாகவே வாழ்கிறார்கள், ரஷ்ய மொழி பேசும் யூதர்கள். இதனால், கடந்த சில ஆண்டுகளில் இஸ்ரேலிலிருந்து வெளிநாடுகளுக்குக் குடிபெயர்பவர்களில் குறிப்பிடத் தக்க எண்ணிக்கையில், ரஷ்ய மொழி பேசும் யூதர்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை!

'ஹாரெட்ஸ்' இஸ்ரேல் நாளிதழ் தலையங்கம்.

- தமிழில்: வெ. சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x