Last Updated : 13 Feb, 2015 09:48 AM

 

Published : 13 Feb 2015 09:48 AM
Last Updated : 13 Feb 2015 09:48 AM

மோடிதான் டெல்லி தேர்தலை கவுரவப் பிரச்சினையாக மாற்றினார்: யோகேந்திர யாதவ் சிறப்புப் பேட்டி

ஆஆகவின் முகம் அர்விந்த் கெஜ்ரிவால் என்றால், அதன் மூளை யோகேந்திர யாதவ். கட்சியின் வியூக வகுப்பாளரும் தேசியத் தலைமை ஊடகவியல் தொடர்பாளருமான யாதவிடம் தீர்ப்பு நாளில் பேசினேன்.

இப்படியொரு அசாதாரணமான வெற்றியை எதிர்பார்த்தீர்களா?

மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி, எங்களுக்கு 51 இடங்கள் கிடைக்கக்கூடும். அது 57 வரை போகக்கூடும் என்று கூறினோம். மேலும், அதிக வாக்குகளைப் பெற நாங்கள் பிரச்சாரம் செய்வதாகப் பலர் நினைத்தனர். உண்மையில், எங்கள் கட்சியை நாங்களே குறைத்து மதிப்பிட்டுவிட்டோம். 57 என்று சொன்னோம், 67-ல் வெற்றி பெற்றிருக்கிறோம். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆச்சரியமான வெற்றி. வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. முன்பு தமிழ்நாட்டில் அதிமுகவும் சிக்கிமில் சிக்கிம் சங்ராம் பரிஷத்தும் இப்படி அமோக வெற்றி பெற்றுள்ளன.

வாக்கு சதவீதத்தின்படி?

சிக்கிம் சங்ராம் பரிஷத் இதில் சாதனை படைத்திருக்கிறது. இல்லையென்றால், ஆஆகவின் 54% மிக உயர் அளவாக இருந்திருக்கும்.

ஒரு வகையில் காங்கிரஸ், பாஜக இரண்டுமே டெல்லி பிரதேச அரசியலில் நீடிப்பது கடினம் என்றாகிவிட்டதல்லவா?

காங்கிரஸ் கட்சியைப் பற்றி வேண்டுமானால் இப்படிச் சொல்வது பொருத்தமாக இருக்கலாம். தமிழ்நாடு, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற மாநிலங்களைப் போல டெல்லியிலும் காங்கிரஸ் தன் செல்வாக்கை இழந்து விட்டது. நாட்டின் பல மாநிலங்களில் அது நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பாஜக தோற்றிருக்கிறது. ஆனால், துடைக்கப்பட்டுவிட்டது என்று கருத இடமில்லை. அது அமைப்புரீதியாக வலுவானது, மீண்டும் எழுந்து நிற்கும். பாஜக என்ற பெரும் தேர், முட்டுக்கட்டை போட்டு நிறுத்தப் பட்டிருக்கிறது. இது பல்வேறு வாய்ப்புகளைப் பலருக்கும் அளித்திருக்கிறது. பாஜகவுக்குள்ளும் செய்தி ஊடகங்களுக் குள்ளும் ஆத்மபரிசோதனை செய்துகொள்ளலாம். கர் வாப்ஸி, கோட்சேவுக்குச் சிலை போன்ற விவகாரங்களால் எரிச்சல் அடைந்துதான் மக்கள் அதற்கு வாக்களிக்காமல் புறக்கணித்திருக்கின்றனர். இது அவர்களுக்கு மிகப் பெரிய பின்னடைவு. இந்தத் தீர்ப்பு மதவாதக் கொள்கைகளுக்கு எதிரானதாகவும் அமைந்திருக்கிறது; பொருளாதாரரீதியாகவும் தாங்கள் சுரண்டப்படுவதை அனுமதிக்க மாட்டோம் என்கிற மக்களின் உணர்வையும் உணர்த்துகிறது.

இந்த வெற்றி ஆஆக மீது மிகப் பெரிய பொறுப்பைச் சுமத்தியிருக்கிறது?

ஆமாம், ஒரு வகையில் மக்களுடைய எதிர்பார்ப்புகளும் நியாயமான ஆசைகளும் இதில் இருக்கின்றன. இதுதான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சம். தீர்ப்புக்குத் தலைவணங்கி ஏற்றுக்கொண்டு, அவர்கள் அளித்துள்ள பொறுப்புகளை நிறைவேற்றுவதுதான் அடுத்த வேலை. இதைத்தான் அர்விந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்துள்ளார்.

உங்களுக்குச் சாதகமாக இருந்தது எது?

மக்களவைப் பொதுத் தேர்தல் முடிந்த உடனேயே டெல்லி சட்டப் பேரவைக்குத் தேர்தலை நடத்தவில்லை. இது கட்சியை வலுப்படுத்த கேஜ்ரிவாலுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. பாஜகவின் ஸ்தாபன பலம் மிகப் பெரியது என்று எங்களுக்குத் தெரியும். அதற்கு இணையாக வலுப்பெற நாங்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு உழைத்தோம். ‘டெல்லி டயலாக்’என்ற பெயரில் வாக்காளர்களுடன் நாங்கள் தொடர்ந்து நடத்திய சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஆக்கபூர்வமான செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டோம். ‘நீங்கள் துணிச்சல் மிக்கவர்கள், ஊழலற்றவர்கள். ஆனால், நிர்வாகம் செய்ய உங்களால் முடியுமா?’ என்று மக்கள் எங்களைக் கேட்டார்கள். குடிநீர், மின்சாரம், கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய தேவைகள் தொடர்பாக அவர்களுடைய கேள்விகளுக்கு நாங்கள் பதிலைச் சொன்னோம்.

இந்தத் தீர்ப்பு மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா, 49 நாட்கள் ஆட்சியில் இருந்த ஆஆக அரசின் மீதான கருத்தறியும் வாக்கெடுப்பா?

நிச்சயம் எங்களுடைய 49 நாள் ஆட்சியின் மீதான வாக்கெடுப்புதான். செய்தி ஊடகங்களும் மாற்றுக் கட்சிகளும் நம்ப மறுத்தாலும் நாங்கள் நல்ல ஆட்சி நடத்தியதாகவே மக்கள் கருதினார்கள். பாஜக ஆட்சியின் சில அனுபவங்கள், எங்களுடைய 49 நாள் ஆட்சியை நினைவுகூர அவர்களுக்கு நல்ல வாய்ப்பைத் தந்தது. மாநிலங்களுக்கு நடக்கும் தேர்தலை அதுவும் டெல்லி போன்ற சிறிய பிரதேசத்துக்கு நடைபெறும் தேர்தலை மத்திய அரசின் செயல்பாடு மீதான கருத்தறியும் வாக்கெடுப்பாகக் கருதத் தேவையில்லை. ஆனால், பிரதமர் இந்தத் தேர்தலை அப்படி மாற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டார். டெல்லியில் நடப்பது தேசத்தின் பிரதிபலிப்பு என்றார். இந்தத் தேர்தலில் தன்னுடைய சொந்த கவுரவத்தைப் புகுத்தினார். கேஜ்ரிவால் மீது வசைபாடினார். ஒரு பிரதமருக்கு இப்படிப்பட்ட பேச்சு அழகல்ல. அது அந்தப் பதவியின் மாண்பையே குறைத்து விட்டது. மத்திய அரசின் மீது கருத்தறியும் வாக்கெடுப்பாக இருந்திருக்க முடியாத இதை, அப்படிப்பட்ட ஒன்றாக அவர் ஓரளவுக்கு மாற்றிவிட்டார். இப்போதும்கூட அவர் செல்வாக்கிழந்துவிட்ட பிரதமர் என்று நான் கூற மாட்டேன். மக்களிடையே தனக்கிருக்கும் செல்வாக்கை, தான் விரும்பும் திசையில் - காலி நாற்காலிக்குக்கூட - திருப்பும் ஆற்றலை அவர் இழந்துவிட்டார் என்றே கூறுவேன்.

கிரண் பேடியை முதல்வர் பதவிக்கான வேட்பாளராகத் தேர்ந்தெடுத்ததுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்?

அவர்களுடைய தேர்வு அவர்கள் முகத்திலேயே வந்து தாக்கிவிட்டது. பாஜக தோற்றதற்கு அவர்தான் முக்கிய காரணம் என்று நான் கருதவில்லை. இந்தத் தேர்தலில் தாங்கள் பின்தங்குகிறோம் என்பதை நிச்சயமாகத் தெரிந்துகொண்ட பிறகுதான், அவர்கள் கிரண் பேடியைத் தேர்ந்தெடுத்தார்கள். தேர்தல் முடிவைத் தங்களுக்குச் சாதகமாக அவரால் திருப்பி விட முடியும் என்று நம்பினார்கள். ஆனால், அவருடைய தேர்வு, முடிவை எங்கள் பக்கம் மேலும் சாதகமாகத் திருப்பி விட்டுவிட்டது.

நாட்டில் உங்களுடைய கட்சியை மேலும் விரிவுபடுத்த என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

தேசிய நோக்கம் கொண்ட கட்சியாக எங்கள் கட்சியை உருவாக்குவதே எங்கள் லட்சியம். இது ஒரு பிரதேசத்துக்கு மட்டுமான கட்சியல்ல. கொள்கை சார்ந்த மாற்று அரசியலை மக்களுக்கு அளிக்கும் சோதனை முயற்சிதான் எங்களுடைய கட்சி. நாங்கள் எங்கே ஆரம்பித்தோம், எங்கே போக விரும்பு கிறோம் என்பதை அமர்ந்து பேசி, வெவ்வேறு மாநிலங்களுக்கு ஏற்றவாறு கவனமுடன் திட்டமிட வேண்டும். இப்போதைக்கு நாங்கள் அப்படிப்பட்ட உத்தி எதையும் வகுக்கவில்லை.

பிஹாரில் ஐக்கிய ஜனதா தளத்துடன் நீங்கள் கூட்டணி அமைக்கப்போவதாக வதந்தி நிலவுகிறதே?

அது எப்படிச் சாத்தியம் அல்லது அதில் ஏதேனும் அர்த்தம் இருக்கிறதா என்று தெரியவில்லை. நாங்கள் ஏதோ காங்கிரஸ் எதிர்ப்பு அல்லது பாஜக எதிர்ப்புக் கட்சி அல்ல. இப்போதுள்ள அரசியல் கட்சிகளையே கூடாது என்கிறோம். அதில், மாநிலங்களில் ஆட்சியில் இருந்த / இருக்கும் எல்லாக் கட்சிகளுமே அடக்கம். நாளை நாங்கள் லாலு பிரசாத்துடன் சேர்ந்து மேடை ஏறினால், நேர்மையான அரசியல் நடத்துவோம் என்று சொல்ல எங்களுக்கு என்ன தகுதி இருக்கும்?

உங்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற காலக்கெடு எதையும் நீங்கள் நிர்ணயித்துக்கொள்ளவில்லையே?

மக்கள் எதையும் உடனே செய்ய வேண்டும் என்று எதிர் பார்ப்ப தில்லை. நிச்சயம் செய்ய வேண்டும் என்றுதான் எதிர் பார்க்கி றார்கள் என்பதை எங்களுடைய அனுபவத்திலிருந்து உணர்ந் திருக்கிறோம். நாம் நினைப்பதைவிட மக்கள் பொறுமைசாலிகள்.

டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து இல்லாமல், நீங்கள் விரும்புகிற வகையில் நிர்வாகம் செய்ய முடியுமா?

இந்தியா கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாடு. மத்திய அரசு இந்த உணர்வோடு செயல்படும் என்ற உணர்வோடு நாம் செயல்பட ஆரம்பிப்போம்!

- © ‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x