Published : 07 Feb 2015 10:16 AM
Last Updated : 07 Feb 2015 10:16 AM
சிகிச்சையைப் போலவே அன்பும் பராமரிப்பும் புற்றுநோயாளிக்கு மிகவும் முக்கியம்.
“பத்திரமாகப் போய்விட்டு வா” என்றுதான் விடைபெறும் நண்பர்களுக்குக் கூற விரும்புவேன். இந்த இலையுதிர் காலத்தில், புற்றுநோயுடன் இறுதிப் போர் நிகழ்த்திக் கொண்டிருக்கும் என்னுடைய நண்பர் மைக்கேலைப் பார்த்து அப்படிச் சொல்லாமலிருக்க என்னை நானே கட்டுப்படுத்திக்கொண்டேன்; “பத்திரமாக இரு” என்று சொல்வதையும் தவிர்த்துவிட்டேன். மைக்கேலைப் பொறுத்தவரை இருப்பது, இறப்பது இரண்டுமே துயரம்தான். எனவே, “நலமாக இரு, உன்னைப் பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன்” என்றேன்.
நியூயார்க் சிட்டியில் உள்ள புகழ்பெற்ற மருத்துவ மனையில் அதி நவீன சிகிச்சை மைக்கேலுக்கு அளிக்கப்பட்டது. புற்றுநோய் முற்ற முற்ற சிகிச்சையும் தீவிரமாகிக்கொண்டே வந்தது. ஒவ்வொரு முடிவும், இதுவா - அதுவா என்ற கேள்விக்குப் பதில் தேடு வதாகவே இருந்தது. எதைத் தேர்ந்தெடுப்பது நல்லது என்று முடிவுக்கு வர முடியவில்லை. அவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் நிலைமையை மேலும் மேலும் மோசமாக்கிக்கொண்டே வந்தது.
அது அவருக்கும் தெரியும். நாங்கள் வெளிப்படையாகவே அதைப் பற்றிப் பேசினோம். அவருடைய உயிர் முக்கியமானது, அதைக் காப்பாற்றப் போராடுவது நியாயமே என்று நினைத்தோம். எனவே, ஒவ்வொரு முடிவையும் நன்கு விவாதித்த பிறகே எடுத்தோம். மருந்துகள் எவ்வளவுதான் நவீனமானவையாக இருந்தாலும், இதுவரை ஒருவரைக்கூடச் சாகாவரம் கொண்டவராக மாற்றிவிடவில்லை. எனவே ‘தீவிர சிகிச்சை’ என்பது, ‘நல்ல கவனிப்பு’ என்பதைவிட மேலானதாக இல்லை.
மருத்துவ ஆய்வுச் சிகிச்சை
மைக்கேலுக்கு வழக்கமான சிகிச்சை முறைகளை எல்லாம் மேற்கொண்ட பிறகு, “மருத்துவ ஆய்வுச் சிகிச்சையின் (கிளினிகல் டிரையல்) முதல் கட்டத்தை ஏற்கிறீர்களா?” என்று கேட்டு அந்தச் சிகிச்சையை அளித்தனர். அதனால், அவருக்கு வலி அதிகமாயிற்று, மூச்சுவிடுவதில் பிரச்சினைகள் ஏற்பட்டன. அவருடைய உடல் வலு குன்றத் தொடங்கியதால், வாழ வேண்டும் என்ற ஆசையும் அவருக்குக் குறையத் தொடங்கியது.
மருத்துவ ஆய்வுச் சிகிச்சைக்குப் பதிலாக, வலி தணிப்பு மருந்து - மாத்திரைகளை உட்கொண்டு, அவரது வாழ்நாள் இறுதிவரை குடும்பத்தாருடன் சேர்ந்திருக்கும் சிகிச்சை முறையை அவர் எடுத்துக்கொள்ளலாம் என்று அவரது செவிலியரிடம் தொலைபேசி மூலம் கூறினேன். அந்த சிகிச்சை முறையில் நீண்ட நாட்களுக்கு வேலை செய்யக்கூடிய மருந்துகளும், தேவைக்கேற்ப வலி தணிப்பு மாத்திரைகளும் வழங்கப்படும். இந்தச் சேவையை (ஹாஸ்பிஸ்) அவரது வீட்டிலேயே வைத்து அவருக்கு வழங்கலாம்.
அவருடைய மனைவியும் குழந்தைகளும் உடனிருந்து அவருக்கு ஆறுதலைத் தருவதுடன், அவருக்குத் தரப்படும் மருந்துகளைப் பற்றி கேள்விகளும் கேட்டு விளக்கம் பெற முடியும். சிகிச்சையா, வீட்டிலிருந்து பராமரிப்பா என்பதை நோயாளிதான் தீர்மானிக்க வேண்டும் என்று அவரது செவிலியர் பதிலளித்தார்.
இதில் எந்த முடிவை எடுப்பதும் சுலபமில்லை. மைக்கேல் பிறகு இறந்துவிட்டார். வலி தணிப்பு மாத்திரைகளை உட்கொண்டு, புற்றுநோய்க்கான மருந்துகளைச் சாப்பிடாமல் குடும்பத்தாருடன் சில நாட்களை அமைதியாகக் கழித்த பிறகுதான் இறந்தார். அந்த முடிவை எடுப்பதற்கு முன்னால் மிகுந்த வேதனைகளை அனுபவித்தார். ‘மருத்துவ ஆய்வுச் சிகிச்சை’ என்பது நோயைக் குணப்படுத்தும் என்று கூறிவிட முடியாது.
சோதனை முறை என்பதால், சில வேளைகளில் வழக்கமான சிகிச்சையில் ஏற்படுவதைவிட அதிக வலிகளைத் தாங்க வேண்டியிருக்கும். இந்த முதல்கட்ட மருத்துவ ஆய்வுச் சிகிச்சையில் குடும்பத் தாருடன் கழிக்க முடியாது. இனி வரும் காலத்திலாவது மருத்துவ ஆய்வுச் சிகிச்சைக்கு உட்படும் நோயாளியை அவருடைய குடும்பத்தாருடன் இருக்க அனுமதிக்க வேண்டும்.
குடும்பத்தாரின் அன்பு, அரவணைப்பு
வாழ்நாளின் இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டவர் களுக்கு நோய்க்கும் சிகிச்சை தேவை, வலியும் குறைக்கப்பட வேண்டும், குடும்பத்தாரின் அன்பும் அரவணைப்பும்கூட அனுமதிக்கப்பட வேண்டும். நோயாளியின் கண்ணியத்தைக் காக்க வேண்டும். அவருடன் மருத்துவமனையில் தங்கும் குடும்பத்தார் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும். அவர்களுக்குத் தேவைப்படும் தகவல்களைத் தெரிவிக்க வேண்டும்.
புற்றுநோயால் பீடிக்கப்பட்ட அமெரிக்கர்களில் 25% பேர் மருத்துவமனையிலேயே இறக்கின்றனர். அவர்கள் கடைசி ஒரு மாதத்தைத் தீவிர சிகிச்சைப் பிரிவிலேயே கழிக்கிறார்கள். நோய் முற்றிய நிலையில் நுரையீரல் அல்லது இதய நோயாளிகளும் தங்களுடைய கடைசி நாட்களைத் தீவிர சிகிச்சைப் பிரிவில் கழிப்பதுதான் அதிகம். அல்சைமர்ஸ் நோயாளிகளின் இறுதி நாட்களும் மருத்துவமனையில்தான். ஆனால், பெரும்பாலான மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகளுக்கும் செவிலியர்களுக்கும் மருத்துவ உதவியாளர்களுக்கும் எப்போதும் பற்றாக்குறைதான்.
இவ்வளவு கடினமாக இருக்க வேண்டுமா?
இறப்பது என்பது அவ்வளவு சாதாரணமில்லைதான்; அதற்காக அதை இவ்வளவு கடினமானதாக ஆக்கியிருக்க வேண்டாம். பெரும்பாலான அமெரிக்கர்கள் இறப்பதைப் பற்றி, வாழும்போதே நினைக்க விரும்புவதில்லை. நம்முடைய மரணம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திப்பதே பல சிக்கல்களை ஏற்படுத்திவிடும். இறப்புக்கு முன்பாக நிறைய செலவாகும் என்றே பலரும் நினைக்கின்றனர்.
ஆனால், உண்மை அதற்கு நேர்மாறானது. கடந்த 20 ஆண்டுகளாக மூப்பியல், வலி தணிப்பு மருத்துவம், ஹாஸ்பிஸ் முறை ஆகிய துறைகள் நன்கு வளர்ந்துள்ளன. நோயாளிகளால் செலவு செய்யக்கூடிய வகையிலும் எளிதாகக் கிட்டும் வகையிலும்தான் உள்ளன.
ஒவ்வொரு கட்டத்திலும் அறிகுறிகளைப் பார்த்ததுமே அடுத்த சிகிச்சைக்கான முடிவுகளை எடுப்பது, நோயாளிக்கு அதில் வேண்டியதைத் தீர்மானிக்கச் சுதந்திரம் அளிப்பது, நோயாளியின் உறவினர் எதை முதலில் செய்ய வேண்டும், எது முக்கியம் என்று கருதுகிறாரோ அதற்கு முன்னுரிமை தருவது என்று எல்லாமும் நன்கு ஒருங்கிணைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படுகிறது. அதனால், நோயாளிக்குத் தரமான கவனிப்பு கிடைக்கிறது, அதிக நாட்களுக்கு நிம்மதியாக வாழ முடிகிறது, மருத்துவச் செலவும் மிச்சப்படுகிறது.
நோயாளிகள் மருத்துவமனைகளில் தனியாக, மிகுந்த வேதனையோடு இறப்பதே வழக்கமாக இருந்ததால், வீட்டாருடன் அல்லது வீட்டிலிருந்துகொண்டே இறுதிக் கால சிகிச்சை பெறும் முறையை 1970-களில் கொண்டுவந்தோம். அது மிகவும் பலனளித்ததால் சுகாதாரத் துறையின் சிகிச்சை முறைகளில் ஒன்றாகவே ஆகிவிட்டது. அமெரிக்கா முழுக்க 4,000 இடங்களில் இத்தகைய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையைப் பெறுவதென்பது, எல்லா நோய்களுக்கும் உற்ற மருத்துவ சிகிச்சை முறை என்று சொல்லிவிட முடியாது.
கல்லூரிகளிலேயே பயிற்சி அவசியம்
மருத்துவக் கல்லூரிகள் இளம் மாணவர்களுக்குக் கல்வி அளிக்கும்போதே நோயாளிகளின் வலியையும் வேதனையையும் அடையாளம் கண்டு சிகிச்சை தரவும், நோயாளியின் கவலை என்ன என்று பொறுமையாகக் கேட்கவும், எந்த விதமான சிகிச்சை முறை என்பதை நோயாளியும் அவருடைய குடும்பத்தாரும் ஆலோசித்து முடிவு செய்ய உதவும்படியாகவும் பயிற்சி பெற வேண்டும். இத்தகைய சிகிச்சைகளை அளிக்கும் மருத்துவமனைகளின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வரிசைப் படுத்தப்பட வேண்டும்.
இத்தகைய சிகிச்சை தரும் மருத்துவமனைகள் போதிய எண்ணிக்கையில் செவிலியர்களையும் இதர மருத்துவப் பணியாளர்களையும் நியமித்துக்கொள்ள வேண்டும். நோயாளிகளைக் கவனித்துக்கொள்ளும் நேரமும் அதிகரிக்கப்பட வேண்டும்.
இதற்காக ஒரு மசோதாவைக் கொண்டுவந்தால், மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்கள், பெருநிறுவனங் களின் தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பார்கள். எதிர்ப்பவர்கள் இதை அரசியலாக்குவார்கள். நாடாளு மன்றம் செயலிழக்கும் அளவுக்கு அமளி செய்வார்கள். இறுதியில் அவர்களுக்குத் தோல்விதான் கிட்டும். வாழ்க்கையின் இறுதிக்கட்டம் வரும்போது, இறப்பை நாம் வரவேற்கிறோமா அல்லது இறப்பதற்கு அஞ்சுகிறோமா என்பது முக்கியமில்லை. இறக்கும் விதத்தைப் பாதுகாப்பானதாகவும் கண்ணியமானதாகவும் ஆக்குவதே முக்கியம்.
- © ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில்: சாரி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT