Published : 18 Apr 2014 10:00 AM
Last Updated : 18 Apr 2014 10:00 AM
மகாராஷ்டிர மாநிலத்தின் ஹாட்கனாங்களே மக்களவைத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார் விவசாயிகள் சங்கத் தலைவர் ராஜு ஷெட்டி (46). ஸ்வாபிமானி பக்ஷ என்ற கட்சியின் தலைவரான இவருடைய சின்னம் விசில். பாரதிய ஜனதா, சிவசேனை ஆகிய கட்சிகள் இவரை ஆதரிக்கின்றன.
காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் சார்பில் சர்க்கரை ஆலைத் தொழிலதிபர் கல்லப்ப அவாடே (84) போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் ஷெட்டி மீண்டும் வெற்றிபெற்றுவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும் சர்க்கரை ஆலை அதிபர்கள் வட்டாரங்களும் குறியாக இருக்கின்றன.
அரசியல் சக்தி
ஷெட்டி வீட்டுக்கு வீடு சென்று வெகு அமரிக்கையாக வாக்குகள் சேகரிக்கிறார். பெரிய கூட்டமோ வாகனத் தொடர்களோ இல்லை. கரும்புக்கு அதிக விலை தரப்பட வேண்டும் என்று அடிக்கடி போராட்டம் நடத்தி வெற்றி கண்டு விவசாயிகளின் நண்பனாக இருக்கிறார் ஷெட்டி. அவருடைய எளிமையும் நேர்மையும் தொகுதி மக்களால் பாராட்டப்படுகின்றன.
கோலாப்பூர் மாவட்டத்தின் வால்வா வட்டத்தில் அடங்கிய இந்தப் பகுதி கரும்பு வயல்களும் சர்க்கரை ஆலைகளும் நிரம்பிய பகுதி. இந்தப் பகுதியில் சர்க்கரை ஆலை அதிபர்கள் வைத்ததுதான் சட்டம். அவர்களை மிஞ்சி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. சர்க்கரை ஆலை அதிபர்களில் பெரும்பாலானவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்.
மகாராஷ்டிரத்தின் முதலமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களில் பெரும்பாலானவர்கள் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான் என்றால் இவர்களுடைய அரசியல் சக்தி சொல்லாமலேயே புரியும்.
பத்து வருடப் போராட்டம்
ராஜு ஷெட்டி வெகு எளிதாக இங்கே காலூன்றிவிடவில்லை. அவர் முதலில் சரத் ஜோஷியின் ஷேட்காரி சங்கதானா என்ற தொழிற்சங்க அமைப்பில்தான் சேர்ந்தார். 2004-ல் அதிலிருந்து பிரிந்து ஸ்வாபிமானி ஷேட்காரி சங்கதானா என்ற அமைப்பைத் தொடங்கினார்.
கடந்த பத்தாண்டுகளாகக் கரும்பு சாகுபடியாளர்களுக்காகப் போராடிவருகிறார். அவருடைய போராட்டங்களின் விளைவாகவே சர்க்கரை ஆலை அதிபர்கள் விலையை உயர்த்தித் தருகின்றனர். 2004-ல் சுயேச்சையாகச் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பிறகு, 2009-லும் சுயேச்சையாகவே போட்டியிட்டு மக்களவை உறுப்பினரானார். எம்.பி-யானதும் தன்னுடைய போராட்ட குணத்தை அவர் கைவிட்டுவிடவில்லை.
2012-ல் கரும்பு கொள்முதல் விலையை உயர்த்தித் தர வேண்டும் என்பதற்காக மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத்பவார் வீட்டு எதிரிலேயே ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
நல்ல நிலையில் இருக்கும் கூட்டுறவு ஆலைகளைக்கூட நலிவுற்றுவிட்டதாக அறிவித்துத் தனியாருக்கு விற்றுவிடும் மோசடியைக் கண்டித்து 2013-ல் போராட்டங்களை நடத்தினார். ஊழல் ஒழிப்பு நாயகரான அண்ணா ஹசாரே, மேதா பட்கர் ஆகியோரும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
இப்போது பா.ஜ.க - சிவசேனையின் ஆதரவைப் பெற்றுள்ளதால், இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இவரை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிகிறது. ஹாட்கனாங்களே தொகுதிக்கு அருகில் உள்ள மாடா மக்களவைத் தொகுதியிலும் இவருடைய கட்சியின் வேட்பாளர் போட்டியிடுகிறார். இந்தத் தொகுதி சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸின் கோட்டையாக இருந்துவருகிறது.
சீட்டிக்கு ஓட்டு!
ஷெட்டியின் சீட்டிக்கு (விசில்) வாக்களியுங்கள் என்று தொண்டர்கள் உற்சாகமாகக் கூவி வாக்கு சேகரிக்கின்றனர். அப்போது ஒரு வீட்டிலிருந்து வெளியே வந்த விவசாயி, ஷெட்டியின் காருக்குள் தலையை நீட்டி, “ஐயா, நீங்கள் மறுபடியும் இங்கே வந்து வாக்கு சேகரித்து நேரத்தை வீணாக்காதீர்கள்; இந்தக் கிராமங்களில் எல்லாம் உங்களுக்காக வாக்கு சேகரிப்பது எங்களுடைய கடமை. நீங்கள் வேறு வேலைகளில் கவனம் செலுத்துங்கள்” என்று அன்போடு கேட்டுக்கொள்கிறார்.
கோலாப்பூர் மாவட்டத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இங்குள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தபட்சம் ஒருவராவது சர்க்கரை ஆலைத் தொழிலாளராக இருக்கிறார். என்னையோ ஸ்வாபிமான் பக்ஷவையோ ஆதரித்துவிடக் கூடாது என்று எல்லோருக்கும் கடுமையாக நெருக்குதல் தரப்படுகிறது. ஆனாலும், மக்கள் அதையெல்லாம் லட்சியம் செய்யாமல் என்னை ஆதரிக்கின்றனர் என்கிறார் ஷெட்டி.
2009 மக்களவைப் பொதுத்தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிவேதிதா மனேவை 96,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் ராஜு ஷெட்டி. எனவே, இம் முறை காங்கிரஸ் கட்சி இந்தத் தொகுதியைக் கேட்டதும் மிகுந்த மகிழ்ச்சியோடு விட்டுக்கொடுத்துவிட்டது தேசியவாத காங்கிரஸ்.
ராஜு ஷெட்டியை எதிர்த்து காங்கிரஸ் நிறுத்தியுள்ள செல்வாக்குமிக்க ஆலை அதிபர் கல்லப்ப அவாடேயும் ஜெயின் சமூகத்தவர். “சும்மா கரும்பு விலை உயர்வுக்காக மட்டும் போராடிக்கொண்டிருந்தால் போதுமா? தொகுதி மக்களுக்கு மற்ற எதிர்பார்ப்புகள் இருக்காதா? அவற்றையெல்லாம் என்னால்தான் நிறைவேற்ற முடியும்” என்கிறார் கல்லப்ப அவாடே.
ஷெட்டியின் லட்சியம்
நரேந்திர மோடி தலைமையில் மத்திய அரசு அமைந்தால், தொகுதி மக்களின் இதர தேவைகளை நிறைவேற்றிவிட முடியும் என்று நம்புகிறார் ராஜு ஷெட்டி. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, நிலையான ஆட்சியைத் தருவது, மக்களுக்குத் தேவையான பொருளாதாரப் பாதுகாப்பை வழங்குவது ஆகியவையே எனது லட்சியம் என்கிறார் ராஜு ஷெட்டி.
“எங்களுக்கு நிறையவே வேலைவாய்ப்புகள், வருமானம் வேண்டும். ஷெட்டியால் இதை அளிக்க முடியுமா என்று தெரியாது. ஆனால், அவர் தன்னால் இயன்ற முயற்சிகளைச் செய்வார். மற்றவர்கள் தேர்தல் காலத்தில் மட்டுமே வருவார்கள். ராஜு ஷெட்டி எப்போதும் எங்களுடன் இருப்பார்” என்கிறார் மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT