Last Updated : 25 Dec, 2014 02:16 PM

 

Published : 25 Dec 2014 02:16 PM
Last Updated : 25 Dec 2014 02:16 PM

மனித உரிமைகள்: கிலோ எவ்வளவு டாலர்?

அபு சுபைதா என்பவரை எந்த விசாரணையும் இன்றி 12 ஆண்டுகள் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

சி.ஐ.ஏ-வின் ரகசிய சிறைச்சாலை, சித்திரவதை, மனித உரிமை மீறலுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாத நாட்டில் விசாரணை என்பதை யெல்லாம் கேள்விப்பட்டவர்களுக்குக்கூட, அமெரிக்க செனட் கமிட்டி அளித்த சித்திரவதை முகாம்களைப் பற்றிய அறிக்கை ரத்தத்தை உறைய வைத்திருக்கும்.

விசாரணைக்காக அழைத்துச் சென்றவர்களையும் கைது செய்தவர்களையும் திட்டமிட்ட வகையில் சி.ஐ.ஏ. சித்திரவதை செய்தது, மனித உரிமைகளை மதிக்காமல் நடத்தியது என்பதைவிட, அமெரிக்க அரசுக்கும் வேறு சில நாடுகளின் அனைத்து நிலை அதிகாரவர்க்கத்துக்கும் தெரிந்தேதான் இவையெல்லாம் நடந்திருக்கிறது என்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணமாக இருக்கும். இப்படிப்பட்ட ரகசிய முகாம்கள், கைதுகள், சித்திரவதைகள்குறித்து இத்தனை ஆண்டுகளாக யாரும், ஏதும் அறிய முடியாதபடிக்கு மறைத்து வைக்க முடிந்திருக்கிறது என்பதைத்தான் அறிக்கை வெட்டவெளிச்சமாக்குகிறது.

இப்படிக் கைதானவர்களில் ஒருவரான அபு சுபைதாவின் வழக்கறிஞர் நான். போலந்து, லிதுவேனியா நாடுகளுக்கு எதிராக ஐரோப்பிய மனித உரிமை நீதிமன்றங்களில் தொடுத்துள்ள வழக்குகளில் அவர் சார்பில் வாதாடுகிறேன். தன்னுடைய நாட்டு எல்லையில் ரகசிய இடத்தில் முகாம் அமைத்து, சி.ஐ.ஏ. நடத்திய சித்ரவதைகளுக்கு போலந்து அரசுதான் பொறுப்பு என்று அந்நாட்டு நீதிமன்றம் ஜூலை 24-ம் தேதி சுட்டிக்காட்டியிருக்கிறது. அப்படி நடந்ததுகுறித்து விசாரிக்கவும் தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தவறிவிட்டதாகவும் போலந்து அரசை அது குற்றம்சாட்டியிருக்கிறது.

1,001 முறை குறிப்பு

செனட் கமிட்டி அறிக்கையில் அபு சுபைதாவை ‘ஆதாரம்-1’ என்று இனி குறிப்பிடக்கூடும். சி.ஐ.ஏ-வின் ரகசிய விசாரணை முகாமின் முதல் விருந்தாளி அவர். அவர்கள் படிப்படியாக சித்ரவதைகளை அதிகரித்துக்கொண்டே போனதற்கும் சாட்சி அவர்தான். சி.ஐ.ஏ. கையாண்ட அத்தனை வகை சித்ரவதை களுக்கும் அவர் உள்ளாகியிருக்கிறார். செனட் அறிக்கையில் அவரைப் பற்றி மட்டும் 1,001 முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சுவரில் அறைதல், பெட்டிக்குள் கை-கால்களை மடக்கியபடி உட்காரவைத்தல், தொடர்ந்து 180 மணி நேரத்துக்குத் தூங்க விடாமல் தடுத்துக்கொண்டே இருத்தல், ஆடையே இல்லாமல் - மிகவும் அசௌகரியமான வகைகளில் உட்காரவும் நிற்கவும் வைத்தல், முகத்தைத் துணியால் மூடி, ஈரத் துணியால் முகத்தை அழுத்தி மூச்சுவிட முடியாமல் திணறவைத்து, தண்ணீரில் மூழ்கும்போது தத்தளிப்பவரின் நிலைக்குக் கொண்டு சென்று, மூச்சு அடங்கப்போகும் கடைசி நொடியில் மீண்டும் சுவாசிக்க விடுதல் (வாட்டர் போர்டிங்) என்ற சித்ரவதைகளுக்கு அவர் ஆட்படுத்தப்பட்டார். இந்த வாட்டர் போர்டிங் முறையால் வலிப்பும் வாந்தியும்கூட வந்துகொண்டே இருக்கும். இந்த வாட்டர் போர்டிங் என்ற சித்ரவதையை ஒரே மாதத்தில் 83 முறை அவரிடம் மேற்கொண்டுள்ளார்கள். உடலெல்லாம் விறைத்து மரக்கட்டையாகி வாயிலிருந்து நுரை வருமளவுக்கு அவரை வாட்டர் போர்டிங்கில் சித்ரவதை செய்துள்ளார்கள். இங்கே பட்டியலிட்டதைவிட மோசமான வழிகளிலும் சித்ரவதை செய்துள்ளார்கள். ஆனால், அவை பற்றியெல்லாம் விசாரணைக்கு வந்தவர்களிடமோ மேலதிகாரிகளிடமோ அவர்கள் தெரிவிக்கவேயில்லை.

உண்மைக்கு மாறான தகவல்கள்

சித்ரவதை ஒருபக்கம் இருந்தாலும், அபு சுபைதா போன்ற முக்கியக் கைதிகளை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதை நியாயப்படுத்தி அறிக்கை அளித்திருக்கிறது சி.ஐ.ஏ. அமைப்பு. அல்-காய்தா அமைப்பில் 3-வது அல்லது 4-வது இடத்தில் இருப்பவர்தான் அபு சுபைதா என்று பலமுறை கூறிவிட்டு, இறுதியில் அவர் அதன் உறுப்பினர் அல்ல என்றும் முடிவுரையாகக் குறிப்பிட்டுள்ளது.

இரட்டைக் கோபுரத் தகர்ப்பில் அவருக்கு முக்கியப் பங்கு உண்டு, பல விஷயங்களை மறைக்கிறார், சித்ரவதை யால்தான் பல துப்புகளை அளித்துவருகிறார் என்றெல்லாம் முதலில் கூறிவிட்டு, அந்தச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இல்லை என்று கடைசியில் தெரிவித்திருக்கிறது. இதையெல்லாம் ஆராய்ந்த செனட் கமிட்டி, சி.ஐ.ஏ-வின் இந்த சித்ரவதைகளால் துல்லியமான தகவல்களையும் கறக்க முடியவில்லை, புலனாய்வில் கைதிகளின் ஒத்துழைப்பையும் பெற முடியவில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறது.

குவாண்டாநாமோ கொடுஞ்சிறை

கியூபாவின் குவாண்டாநாமோ விரிகுடாவில் சி.ஐ.ஏ. வைத்திருந்த ரகசியச் சிறையிலும் அபு சுபைதா அடைக்கப் பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். அவருக்கு எதிராக எந்த கிரிமினல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட வில்லை. எந்தச் சட்டப்பிரிவின் கீழ் அவர் அங்கு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் என்று எந்த அதிகாரியும் விசாரிக்கவில்லை. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரியுங்கள் என்று அவருடைய அமெரிக்க வழக்கறிஞர் வலியுறுத்தியும்கூட அதிகாரிகள் கேட்கவில்லை.

அமெரிக்காவுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் அவரைக் காலவரம்பின்றி காவலில் வைத்திருக்க முடியும் என்றே அதிகாரிகள் வாதிட்டார்கள். அவரை ரகசியச் சிறையில் அடைத்திருக்கிறார்கள், சித்ரவதை செய்திருக்கிறார்கள், எந்தவிதக் குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்று எல்லாவற்றையும் சுட்டிக்காட்டியும் எங்களுக்கு நீதி கிடைக்க வில்லை. ஐரோப்பிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான நீதிமன்றம் ஆணையிடும்வரை, அவருடைய அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதற்குக்கூட ஒரு அங்கீகாரம் இல்லை.

விவரம் இல்லாத அறிக்கை

செனட் கமிட்டி அறிக்கை அளித்திருந்தாலும் அதில் பல தகவல்கள் மறைக்கப்பட்டிருக்கின்றன. அதாவது, எந்த நாட்டில் சிறை வைக்கப்பட்டிருந்தார் என்பது போன்ற தகவல்கள் எழுத்துபூர்வமாக இடம்பெறவில்லை. ஆனால், அதைக் கண்டுபிடிப்பது கடினமல்ல. விசாரணைக்காகப் பிடிக்கப்படுபவரை அந்த நாட்டில் வைத்து விசாரிக்க அமெரிக்காவுக்கும் அந்த நாட்டுக்கும் இடையில் ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு கட்டத்தில் அந்த நாடும் தனக்கு ஏற்படும் அசௌகரியத்தைச் சுட்டிக்காட்டியது. உடனே, அந்நாட்டுக்கான அமெரிக்கத் தூதர் அங்கு வந்து லட்சக் கணக்கான டாலர்களைக் கொடுத்ததும், எத்தனை பேரை வேண்டுமானாலும் இங்கு வைத்து விசாரித்துக்கொள்ளுங்கள் என்பதைப் போல அனுமதித்துவிட்டார்கள். இப்படி ஏராளமானவர்களை எங்கள் நாட்டுக்கு அழைத்துவந்து விசாரணை என்ற பெயரில் சித்ரவதை செய்கிறீர்களே என்று அந்த அதிகாரிகள் வருத்தப்படவில்லை. மாறாக, இதிலெல்லாம் ரகசியத்தைக் காக்க முடியாதவர்களாக இருக்கிறீர்களே என்றே வருத்தப்பட்டார்கள்.

போலந்தின் ஆட்சேபம்

ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்திடம் போலந்து அரசு ஆட்சேபம் தெரிவித்துள்ளது. எங்கள் நாட்டில் இப்படியொரு சித்ரவதைக்கூடமே கிடையாது. நீங்கள் இதைக் கண்டித்திருக்கக் கூடாது என்பதுதான் அந்த ஆட்சேபம். இனி, இந்த விவகாரத்தை நீங்கள் விசாரிக்க வேண்டாம். உங்களுடைய உச்ச நீதிமன்றம் விசாரிக்கட்டும் என்றும் கூறியிருக்கிறது. எங்கள் நாட்டு ரகசிய விவகாரங்களை உங்களுடன் விவாதிக்க முடியாது என்று கூறி, போலந்து அரசு ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்துவிட்டது.

செனட் அறிக்கை வந்த பிறகு, போலந்தின் பல்லவி மாறிவிட்டது. அந்த சிறைச்சாலை இருப்பது உண்மைதான். ஆனால், அறிக்கையில் குறிப்பிட்டபடி எதுவும் நடக்கவில்லை என்று மறுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாது என்று தடுக்கவும் தாமதப்படுத்தவும் போலந்து அரசு அடுக்கடுக்காக நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இப்படியொரு அறிக்கை வெளியான பிறகு, முறையாக அதுகுறித்து வழக்குப் பதிவு செய்வதும் விசாரிப்பதும் போலந்து, பிரிட்டன் போன்ற நாடுகளின் சர்வதேசச் சட்டக் கடமையாகும். முகாம்களில் உள்ளவர்கள் மீது குற்றம்சாட்டி வழக்கு நடத்த வேண்டும் அல்லது விடுதலை செய்ய வேண்டும். சட்டங்களையும் மனித உரிமைகளையும் மீறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எந்தெந்த நாடுகளில் இந்த வதைக்கூடங்கள் இருந்தனவோ அந்த நாடுகளின் கடமை இது. அப்படி அவை நடவடிக்கை எடுக்காவிட்டால், மனித உரிமை நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும். உண்மை, நீதி, பொறுப்பேற்றல் என்ற கடமைகளை நிறைவேற்றவும், சட்டப்படியான ஆட்சி என்பதை நிலைநாட்டவும் நீதி விசாரணை அவசியம்.

தி கார்டியன், தமிழில்: சாரி









FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x