Published : 29 Apr 2014 08:13 AM
Last Updated : 29 Apr 2014 08:13 AM
நிலக்கரித் துறையில் நடந்தது ஊழலா, வெறும் குளறுபடியா என்று பெரும் விவாதம் நடக்கிறது. அது குளறுபடியல்ல, திட்டமிட்ட ஊழல் என்பாரும் உண்டு. 2004-ல் பதவிக்கு வந்தவுடன் 4,000 கோடி டன் நிலக்கரியிருந்த வயல்களை, சொந்த மின்னுற்பத்தி தயாரிப்புக்கென ஏராளமான தொழில் நிறுவனங்களுக்கு எந்தவிதத் தகுதியையும் ஆராயாமல் வழங்கியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. பத்தாண்டுகளில், இப்படி வழங்கப்பட்ட நிலக்கரி வயல்களிலிருந்து வெறும் 150 லட்சம் டன் நிலக்கரி மட்டுமே வெட்டி எடுக்கப்பட்டதாகப் பதிவாகியிருக்கிறது.
உண்மையில் அவ்வளவுதான் வெட்டப்பட்டதா அல்லது வெட்டாமலேயே நிலக்கரி வயல் சும்மா வைத்திருக்கப்பட்டதா என்பதே கேள்வி. முன்னதுதான் சரி என்றால் நிர்வாகக் கோளாறாக அதைக் கருதலாம். இல்லை வெட்டி எடுத்தார்கள், அதைக் கணக்கில் காட்டாமல் திருட்டுத்தனமாக விற்றுவிட்டார்கள் என்றால் மாபெரும் ஊழல் நடந்திருக்கிறது, பொதுச்சொத்து கொள்ளையடிக்கப்பட்டது என்று பொருள். இதைத்தான் ‘நிலக்கரி ஊழல்’ என்கிறார்கள்.
ஆணைகள் ரத்தாகின்றன
சட்டரீதியான நடவடிக்கைகள் தங்கள்மீது வந்துவிடாமலிருக்க காங்கிரஸ் தலைமையிலான அரசு 2005 முதல் 2009 வரையில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு 64 நிலக்கரி வயல்களில் நிலக்கரியை வெட்டி எடுத்துக்கொள்ள வழங்கிய அனுமதியை, அவசர அவசரமாக ரத்துசெய்துகொண்டிருக்கிறது. சொந்தப் பயன்பாட்டுக்காக நிலக்கரியை எடுத்துக்கொள்ள அரசுத்துறை நிறுவனங்களுக்கு வழங்கிய சுமார் 70 நிலக்கரி வயல்கள் தொடர்பான உத்தரவுகளையும் ரத்துசெய்துவருகிறது.
அப்படியென்றால், அடுத்து வரும் அரசு, மின்சார உற்பத்தியை முடுக்கிவிட வேண்டும் என்றால் முதலில் நிலக்கரி வயல்களை ஒதுக்குவதிலிருந்து வேலையைத் தொடங்க வேண்டும். நிலக்கரி வயல் வேண்டுவோரிடம் மனுக்களைப் பெற்று, அவற்றைப் பரிசீலித்து, தகுதியுள்ளவர்களுக்கு அவற்றை வழங்கி, அதை அவர்கள் பெற்று, அதன் பிறகு அவர்கள் அங்கே தங்களுடைய நிறுவனத்தைக் கொண்டு நிலக்கரியை அகழ்ந்து எடுப்பதற்குள் பல ஆண்டுகள் ஆகிவிடும். அத்துடன் புதிதாகக் கொண்டுவரப்பட்டுள்ள நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான சட்டமும் இந்த நடவடிக்கைகளுக்குப் பெருத்த இடையூறாகிவிடும்.
எனவே, யார் ஆட்சிக்கு வந்தாலும், தொழில்நிறுவனங்கள் சொந்த உபயோகத்துக்காக நிலக்கரி வயல்களைக் குத்தகைக்குப் பெறுவது நத்தை வேகத்தில்தான் நடைபெற முடியும். இதனால் நிலக்கரி உற்பத்தியும் மின்சார உற்பத்தியும் கணிசமான இழப்புகளைச் சந்திக்க நேரும்.
எதிர்காலம் கேள்விக்குறி
தனியாருக்கும் அரசுத்துறை நிறுவனங்களுக்கும் இப்படி வழங்கப்பட்ட 130 நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் சரிபாதி மின்னுற்பத்தி நிறுவனங்களுக்காக வழங்கப்பட்டவை. அவற்றின் உத்தேசமான மின்சார உற்பத்தித் திறன் 11,000 மெகாவாட். ஆனால் அவை அனைத்தும் உரிய காலத்தில் மின்னுற்பத்தியைத் தொடங்கும் வகையில் தயார்படுத்தப்படவில்லை. இப்போது அவற்றின் எதிர்காலம் மேலும் கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது! இந்தப் பிரச்சினை போதாது என்று, சரியாகத் தயார்படுத்தப்படாத நிலக்கரி வயல் குத்தகைகள் இப்போது ரத்துசெய்யப்பட்டுவிட்டன.
இப்போது இவற்றை ‘கோல் இந்தியா லிமிடெட்' என்ற அரசு நிறுவனத்திடமும் ஒப்படைக்க முடியாது. ஏனென்றால், 78,000 மெகாவாட் மின்னுற்பத்தி செய்வதற்கான நிலக்கரியை வெட்டித்தர வேண்டும் என்ற பொறுப்பு ஏற்கெனவே அதன்மீது சுமத்தப்பட்டிருக்கிறது. எனவே, இந்த வயல்களை அதனால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதைவிடக் கொடுமை ஆம் கொடுமைதான் அந்த 78,000 மெகாவாட் திறனுக்கான நிலக்கரியை அகழ்ந்தெடுக்கவே அதற்கு ஆற்றல் போதாது என்பதுதான்!
இறக்குமதி ஏன்?
தன்மீது சுமத்தப்பட்ட பொறுப்புக்கு ஏற்ப நிலக்கரி வெட்டி எடுக்கும் ஆற்றல் தன்னிடம் இல்லை என்பதால், தான் தர வேண்டிய நிலக்கரியின் 90% அளவுக்குப் பதிலாக 65% அளவைத்தான் அது தந்துகொண்டிருக்கிறது. இதனால்தான் புதிய தேவைகளுக்காக வெளிநாடுகளிலிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரியை இறக்குமதி செய்துகொண்டிருக்கிறோம்.
எல்லா மின்னுற்பத்தி நிலையங்களும் ‘வரையறுக்கப்பட்ட கட்டண விகித முறைமை'யின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தால் இந்த முறையில்கூட பிரச்சினைகள் வந்திருக்காது. ஆனால் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு எல்லாவற்றிலும் ‘வித்தியாசமாகவே' சிந்தித்துச் செயல்பட்டிருக்கிறது.
நஷ்டப்பட நேர்ந்தது
மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின் அடிப்படையில் பேரம் பேசி முடிவு செய்யுமாறு விநியோக நிறுவனங்களைக் கட்டாயப்படுத்தியது அரசு. இதனால் நிலக்கரியின் விலை உயர்ந்தபோதுகூட மின்னுற்பத்தி நிறுவனங்கள் அந்தக் கூடுதல் சுமையை நுகர்வோர்மீது சுமத்த முடியாமல் நஷ்டத்தை ஏற்க நேர்ந்தது.
தனியார் துறையில் 48,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரத்தை, 7 ஆண்டுகள் முதல் 25 ஆண்டுகள் வரையில்கூட, குறிப்பிட்ட கட்டண விகிதத்தில் விற்பதற்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டிருந்தன. அந்த 48,000 மெகாவாட்டிலும் சுமார் 12,000 மெகாவாட் முதல் 14,000 மெகாவாட் வரையிலான மின்சாரம், விலை அதிகமுள்ள இறக்குமதி நிலக்கரியைக் கொண்டுதான் உற்பத்தி செய்யப்பட்டது . அரசும் தனியாரும் செய்துகொண்ட இத்தகைய மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களில் ஒருசில மட்டுமே அமல்படுத்தப்பட்டன. எஞ்சியவை இதில் ஏற்படப்போகும் இழப்பைக் கருதி அப்படியே நிறுத்திவைக்கப்பட்டன.
நெருக்கடியில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு உதவுவதாகக் கூறி மத்திய மின்சாரக் கட்டுப்பாட்டு ஆணையம் சமீபத்தில் புதிய தீர்வைக் கூறியது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் 2 நிறுவனங்கள், ‘நஷ்டத்தை ஈடுகட்டும் வகையிலான' கட்டணத்துக்கு மாறிக்கொள்ளலாம் என்பதே அந்தத் தீர்வு. இது வம்பை விலைக்கு வாங்கியதைப் போல ஆனது; மேலும் 19 நிறுவனங்கள் இந்த புதிய ஏற்பாட்டில் தங்களையும் சேர்க்க வேண்டும் என்று கோரி ‘பின்வாசல் கதவை’த் தட்ட ஆரம்பித்தன.
பயன்படுத்தப்படாத நிலக்கரித்திறன்
குறுகிய காலத்துக்கு இப்படி அதிகக் கட்டணத்தை வசூலிக்க சிலருக்கு அனுமதி தந்தால், மற்ற நிறுவனங்களை நீதிமன்றங்களுக்குத்தான் செல்ல அது வழிவகுக்கும். அத்துடன் இப்படி மின்சார விலையை உயர்த்தினால் அதை யாராவது வாங்குவார்களா என்றும் பார்க்க வேண்டும்.
ஒரு யூனிட் 3 ரூபாய் என்று விலை கொடுத்து வாங்க யாரும் தயாராக இல்லாததால் மத்திய அரசு, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் வசமிருக்கும் மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்து 27,000 மெகாவாட் மின்சாரம் வாங்கப்படாமலேயே இருக்கிறது! யூனிட்டுக்கு 3 ரூபாய் என்ற இந்தக் கட்டணமே புதிய மின்னுற்பத்தி நிறுவனங்களுக்குக் கட்டுப்படியாகாது. இப்போதுள்ள மின்சார உற்பத்தியுடன் இந்த நிதியாண்டிலேயே மேலும் 20,000 மெகாவாட் மின்சார உற்பத்தியும் சேரவிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரியிலிருந்து தயாரிக்கப்படும் மின்சாரத்துக்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும் பிரச்சினையும் தொடரப்போகிறது.
பிஸினஸ் லைன், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT