Published : 19 Nov 2014 09:50 AM
Last Updated : 19 Nov 2014 09:50 AM

மெல்லத் தமிழன் இனி...! 29 - கள்ளச்சாராயம் பாயும் இன்னொரு பாதை!

தமிழகத்தில் மது பெருக்கெடுத்து ஓட அரசுத் தரப்பு சொல்லும் முக்கியமான காரணம்: “மதுவிலக்குக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதாலேயே மதுக் கடைகளை வைத்திருக்கிறோம்” என்பது. ஆனால், இப்போது இன்னொரு வடிவத்தில் கள்ளச்சாராயம் பெருகியிருப்பது அரசுக்குத் தெரியுமா?

தினமும் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிடிபடும் போலி மது ஆலைகளின் பின்னணியில் இருப்பவர்களை நினைத்தால், அதிர்ச்சியாக இருக்கிறது. ஓர் ஆண்டுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகேயுள்ள பூதிபுரம் என்கிற ஊரில், போலி மது ஆலையைக் காவல் துறையினர் கண்டுபிடித்தனர். அப்போது அதன் பின்னணியை விசாரித்தபோது காவல் துறையினரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதற்கான துறையின் அதிகார மட்டத்தில் இருப்பவரின் உறவினர்களே அதில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.

இப்படித்தான் உற்பத்தியாகிறது போலி மது!

இப்போதெல்லாம் திண்டுக்கல் மாவட்டத்தில் சின்னாளப்பட்டி, சூசைப்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, குட்டத்துப்பட்டி - மைலாப்பூர், சிறுமலை அடிவாரம் - இங்கெல்லாம் காவல் துறையினர் மற்றும் மதுவிலக்குக் காவல் பிரிவினர் போலி மது பிடித்து வழக்குப் போடுகிறார்கள். இது எப்படி எனில், ‘நீ அடிக்கிற மாதிரி அடி, நான் அழுகிற மாதிரி அழுகிறேன்’ என்பதுபோல.

கணக்குக் காட்டுவதற்கான வழக்குகள். குட்டத்துப்பட்டி - மைலாப்பூர், சிறுமலை அடிவாரம் ஆகிய பகுதிகளில் வீடுகளில், தோப்புகளில், கிடங்குகளில் போலி மது உற்பத்தி குடிசைத் தொழில்போல நடக்கிறது. புதுச்சேரியில் இருந்து எரிசாராயம் வருகிறது. பெங்களூருவிலிருந்து ‘எசன்ஸ்’ வருகிறது. அவரவர் வசதிக்கேற்ப சிறு, பெரு இயந்திரங்கள் மூலம் மது தயாரித்து, ‘டாஸ்மாக்’ நிறுவனத்தின் பாட்டிலில் ஊற்றி, முத்திரை போட்டு அனுப்புகிறார்கள். தவிர, பெங்களூரு மதுபானம், புதுச்சேரி மதுபானம், கோவா மதுபானம் என்று விதவிதமாக பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்தும் விற்கிறார்கள்.

அரசு மதுவுக்குப் போட்டியாகத் தனியார் மதுபானம். இது கள்ளச்சாராயம் இல்லாமல் என்னவாம்? இப்படி அரசுக்குப் போட்டியாகப் போலி மதுபானம் மட்டுமல்ல, அரசு அங்கீகாரம் பெற்ற மதுபானக்கூடங்களுக்குப் போட்டியாகப் பல்வேறு நூதனமான வழிகளில் தனியார் மதுபானக்கூடங்களும் பெருகிவிட்டன.

இங்குதான் விநியோகிக்கப்படுகிறது போலி மது!

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தின் மதுக் கடை களின் எண்ணிக்கை 6,826. இவற்றில் 4,032 கடைகளில் அனுமதி பெற்ற மதுக் கூடங்கள் செயல்படுகின்றன. சுமார் 800 கடைகளில் மதுக் கூடம் இல்லை. மீதம் இருக்கும் சுமார் 2,000 கடைகளில் மதுக் கூடங்கள் அனுமதி இல்லாமல் செயல்படுகின்றன. இதன் மூலம் வரும் வருவாய் எல்லாம் அரசியல் செல்வாக்கு கொண்ட தனி நபர்களுக்குச் சென்றுவிடுகின்றன. அதாவது, மூன்றில் ஒரு பங்கு டாஸ்மாக் நிறுவனத்தின் வருவாய் சட்டவிரோதமாகத் தனியாருக்குச் செல்கிறது. இன்னொரு பக்கம் ‘மனமகிழ் மன்றம்’, ‘ரிக்ரியேஷன் கிளப்’ என்றெல்லாம் புதுப்புது வழிகளில் பாய்கிறது மது.

மது பாயும் இன்னொரு பாதை

தமிழகத்தில் மது விற்பனை செய்ய நான்கு வகைகளில் உரிமம் வழங்கப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு எஃப்.எல்-1, டாஸ்மாக் நிறுவனக் கடைகளுக்கு

எஃப்.எல்-2, மனமகிழ் மன்றம், கிளப் மற்றும் 21 அறைகளைக் கொண்ட தங்கும் விடுதிகளுக்கு

எஃப்.எல்-3, வெளிநாட்டு வகை மதுபான விற்பனைக்கு

எஃப்.எல்-5 - இவையே அந்த உரிமங்கள்.

இவற்றில் எஃப்.எல்-3 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்கள், கிளப்களில் அதன் உறுப்பினர்கள், அவர் தம் நண்பர்கள் மட்டுமே மது அருந்த முடியும். மேலும், ஒரு மனமகிழ் மன்றம் அல்லது கிளப்புக்கு 180 மில்லி லிட்டர் கொண்ட குவார்ட்டர் பாட்டில்கள் அதிகபட்சமாக 450 மட்டுமே டாஸ்மாக் நிறுவனம் விநியோகிக்க வேண்டும். இது சட்டம். சமீபத்தில் குவார்ட்டர் பாட்டில்கள் எவ்வளவு வேண்டுமென்றாலும் இங்கு விநியோகிக்கலாம் என்று சத்தமில்லாமல் விதியைத் தளர்த்திவிட்டார்கள். எதற்குத் தெரியுமா?

கடந்த இரு ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் வலுத்துவருகின்றன. இன்னொரு பக்கம் நீதிமன்றம், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் கடைகளை அகற்றச் சொல்லிவிட்டது. கோயில் அருகே, பள்ளிக்கூடம் அருகே இருக்கிறது என்று மக்கள் போராடுகிறார்கள். அங்கெல் லாம் நல்ல பிள்ளையாகக் கடையை மூடிவிடுகிறார்கள். ஆனால், அதோடு பிரச்சினை முடிவதில்லை. அருகிலேயே விரைவில் புதியதாக மனமகிழ் மன்றம் ஒன்று முளைக்கும். இது தனியார். தயாராக வாங்கி வைத்த எஃப்.எல்-3 உரிமத்தைச் சட்டம்போட்டு மாட்டி வைத்துவிட்டு கனஜோராகத் தொழிலைத் தொடங்குகிறார்கள். கடந்த இரு ஆண்டுகளில் சுமார் 100 உரிமங்கள் இப்படி வழங்கப்பட்டு உள்ளன.

இப்படியாக போலி மது தயாரிப்பதில் தொடங்கி, அவற்றை விற்கும் புதுப்புது உத்திகளை உருவாக்குவது வரை பின்னணியில் இருப்பது ‘அதிமுக்கிய நபர்’களே. வேலியே பயிரை மேய்ந்தால் எங்கு சென்று முறையிடுவது?

(தெளிவோம்)

டி.எல். சஞ்சீவிகுமார்,

தொடர்புக்கு: sanjeevikumar.tl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x