Last Updated : 25 Oct, 2013 04:20 PM

 

Published : 25 Oct 2013 04:20 PM
Last Updated : 25 Oct 2013 04:20 PM

பாடல் வேறு - ராகம் ஒன்றுதான்!

ஆதிக்க சக்திகளுக்கு எதிராக குரல் கொடுத்த குற்றத்துக்காக படுகொலை செய்யப்பட்ட மாமன்னர்கள் மருதுபாண்டி யர்களின் 202-வது நினைவேந்தல் தினம் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

ஒரு காலத்தில் கிழக்கத்திய நாடுகளுடன் மேற்கொண்ட வணிகம் மேற்கத்திய நாடுகளுக்கு பெரும் லாபத்தை ஈட்டித் தந்தது. எனவே மேற்கத்திய நாடுகள் இந்தியாவிலும் வணிகத் தொடர்பை அதிகப்படுத்தின. காலப்போக்கில் இங்குள்ள சிதறுண்ட சூழல்களை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர்; நம்மையும் அடிமைப்படுத்தினர்.

இந்தச் சரித்திர குருதி தோய்ந்த நிகழ்வுகள் நம் எதிர்கால சந்ததிக்கு சில எச்சரிக்கைகளை விட்டுச் சென்றி ருக்கின்றன. அந்த ரத்தத்தால் எழுதப்பட்ட எச்சரிக்கைகளை வெள்ளையர்களின் நிரந்தர எதிரியான மாமன்னர் மருது பாண்டியர்களும் 500-க்கும் மேற்பட்ட ஆங்கில எதிர்ப்பாளர்களும் (ஆயுதம் ஏந்திட இயலாத பாலகர்கள் உள்ளிட்டு) தூக்கிலிடப்பட்ட நாளை நினைவு கூரும் இந்த நேரத்தில் இந்திய இளைஞர்களுக்கு எடுத்துச் சொல்லி இந்திய நாட்டின் இறையாண்மை பற்றிய விழிப்புணர்வையும், நாட்டுப்பற்றையும் நம் கலாச்சாரப் பெருமையையும் தூண்டி முதலாளித்துவச் சுரண்டலிருந்து மக்களைக் காக்கவேண்டியது அவசியம்.

வணிகம் செய்ய வந்தவர்கள்…

வணிக நிமித்தம் இந்தியத் துணைக் கண்டத்தில் காலடியெடுத்து வைத்த ஆங்கிலேயர்கள், இங்கு தங்களின் அரசியல் ஆதிக்கத்தை வேரூன்றச் செய்திட அன்றைய காலக்கட்டங்களில் நிலவிய அரசியல் குழப்பங்களையும் அரசியல் குதர்க்கங்களையும் சரி யாகப் பயன்படுத்திக் கொண்டனர். இந்திய நாட்டின் சமஸ்தான எல்லைத் தகராறுகளில் முதலில் தலையிட்டனர். அடுத்ததாக, ஆட்சி செய்வதற்கான வாரிசு உரிமைகளை நிர்ணயிக்கும் பிரச்சினைகளில் தலையிட்டு சமஸ்தான அதிபர்களை மதிமயங்கச் செய்து, சமஸ்தானங்களையே தங்களது கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

சமஸ்தானதிபதிகளின் வாரிசு உரிமை களை நிர்ணயிப்பதற்குதான் இந்திய நாட்டின் அரசியல் பிரச்சினைகளில் தலையிடுவதாகக் ‘கட்டியம்’ கூறிக்கொண்டு, ஆங்கிலேயர்கள் இந்திய மண்ணை ஆக்கிரமித்தனர் என்பதுதான் விடுதலைக்கு முந்தைய சோக வரலாறு! மீண்டும் அந்த சரித்திரம் திரும்பிவிடக் கூடாது என்பதுதான் இந்திய மக்களின் கவலை!

ஆங்கிலேய ஏகாதிபத்திய தாக்கு தலைத் தாக்குப் பிடித்து நாட்டுப்பற்றையும் மொழிப்பற்றையும் கலாச்சாரப் பற்றை யும் காப்பாற்ற எண்ணிய தன்மானத் தலைவர்கள், இந்திய மண்ணில், ஆங்கிலேயர்களின் ஆயுத பலத்தாலும், வெடிமருந்துகளாலும் இந்த மண்ணின் சிலரது இனத் துரோகத்தாலும் அழித்தொழிக்கப்பட்டனர். மாமன்னர் மருது பாண்டியர்கள், வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னர் பூலித்தேவன், மாவீரன் சுந்தரலிங்கம், மாவீரன் வெள்ளையத் தேவன், தீரன் சின்னமலை, மாவீரன் கோபால்நாயக்கர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த வீரநங்கை குயிலி, மாவீரன் ஊமத்துரை உள்ளிட்டவர்கள் அப்படித்தான் அழித்தொழிக்கப் பட்டனர்.

இவர்களின் வீரவரலாறு இந்த மண்ணைவிட்டும், இந்த மக்களின் மனதைவிட்டும் அகலாது பார்த்துக் கொள்ளவேண்டிய கடமை நாட்டுப்பற்று கொண்ட அனைவருக்கும் உண்டு. இவர்கள் இந்த மண்ணில் நிகழ்த்திய வீரம் செறிந்த போராட்டங்கள் 1790-ம் ஆண்டு தொடங்கி 1801-ம் ஆண்டு அக்டோபர் திங்களுடன் முடிவடைகிறது. உலக வரலாற்றில் பெரிதும் பேசப்படுகின்ற அல்லது நினைவுபடுத்தப்படுகின்ற சுதந்திரத்துக்கான போராட்டம் அமெரிக்க மண்ணில் 1779-ம் ஆண்டு தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மக்களின் உரிமைக் குரலுக்கான புரட்சி, பிரான்ஸ் நாட்டில் 1789-ல் தொடங்கியது. ஏறத்தாழ சமகாலத்தில்தான் இந்திய நாட்டின் விடுதலைக்கான முதல் சுதந்திரப் போராட்டம் தமிழ் மண்ணில் உருவாகியது என்பது நாமெல்லாம் பெருமைப்படக்கூடிய ஓர் வரலாற்றுச் செய்தியாகும்.

அமெரிக்க சுதந்திரப் போராட்டத்தைப் பற்றியும், பிரான்ஸ் நாட்டில் நடைபெற்ற புரட்சி பற்றியும் உலக மக்கள் அறிந்த அளவுக்கு ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுதமேந்திய இந்த முதல் சுதந்திரப் போராட்டம் பற்றியும், அதுதொடர்பான வீரம் செறிந்த வரலாறு பற்றியும் உலகுக்கு இன்னும் சரிவர தெரிவிக்கப்படவில்லை என்ற ஆதங்கம் நம்மை நிலைய குலையச் செய்கிறது.

முதல் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில், ஆங்கிலேயருக்கு எதிராக 16.06.1801-ல் மாமன்னர் மருதுபாண்டியர்களால் வெளியிடப்பட்டதும், திருச்சி ஆற்காடு நவாப் கோட்டையிலும் ஸ்ரீரங்கம் கோயிலிலும் பொதுமக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டதுமான ‘யுத்தப் பிரகடனம்’ இன்னும் உலக வரலாற்று ஏடுகளில் உரிய இடம் பெற்றிடவில்லை. அதற்கான முயற்சியை வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொள்ள வேண்டியது அவர்களின் தலையாயக் கடமையாகும். அந்த யுத்தப் பிரகடனத்தில் இந்தியாவுக்கு எந்தக் காலத்துக்கும் பொருத்தமான ஒருபகுதியே இங்கே மேற்கோள் காட்டப்படுகிறது.

’ஆங்கிலேயருடைய இரட்டை வேடத்தை நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள். கொஞ்ச மும் சிந்தனையின்றி ஒருவருக்கொருவர் மாறுபட்ட எண்ணங்களை வளர்த்துக் கொண்டு இந்த மண்ணின் அரசாட்சியை ஆங்கிலேயருக்கு அடிபணிந்து கொடுத்து விட்டீர்கள். மிகவும் இழிந்த குணம் படைத்த ஆங்கிலேயர்களால் இந்த நாடு ஆளப்பட்டு வருவதால், இந்த நாட்டுக் குடிமக்கள் ஏழைகளாகி விட்டனர். ஆங்கிலேயரால் உருவாக்கப்பட்ட செயற்கையான துயரங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்வதற்கு இன்னும் மக்கள் வழியறியாது இருக்கின்றனர்..’ இது யுத்தப் பிரகடனத்தில் வரும் வரிகள்.

இதில் ஆங்கிலேயர் என்ற சொல் ஆதிக்க சக்தி என மாற்றப்படுமானால், இந்த அறிக்கை இன்றைக்கும் இந்திய அரசியல் சூழ்நிலையில் மிகவும் பொருத்தமான ஒன்றேயாகும். அன்றைய ஆங்கில ஆதிக்க சக்திகள், சுதேசி மன்ன ர்களின் உண்மையான வாரிசு உரிமையை நிலைநாட்டுவதற்காக அவர்களின் ராஜிய விவகாரங்களில் தலையிட்டதாகச் சொல்லி உள்ளே வந்தார்கள். அவர்க ளோடு அந்த ஆதிக்க உணர்வு பட்டுப்போய்விடவில்லை. மாறாக மாறுவேடத்தில் மறுமுகம் காட்டுகிறது. ஆக, உலக ஆதிக்க சக்திகளின் பாடல்கள் வேறாக இருக்கலாம்; ஆனால், ராகம் ஒன்றுதான்!

அன்று வாரிசு உரிமை வாங்கித்தரு வதற்காக உள்ளே வந்தார்கள். இன்று, மனித உரிமைக்காக தலையிடுகிறோம் என்று உலக ஆதிக்க சக்திகள் ஒன்று கூடி வருகின்றன. மேம்போக்காக பார்த்தால், இவர்கள் சொல்வது நியாயமானதாகத் தெரியலாம். ஆனால், இந்த ஆதிக்க சக்திகளின் தலையீட்டால் அங்கு மனித உரிமைகள் வேரறுக்கப்படுகின்றன என்பதுதான் எதார்த்தம்.

பிற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும், அங்குள்ள மக்களை அடிமைப்படுத்துவதற்கும், அங்குள்ள இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதற்கும்தான் இந்த மனித உரிமைத் தலையீடுகள் உலக ஆதிக்க சக்திகளுக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்திய நாட்டு மக்களாகிய நாம் விடுதலைபெற்ற சுதந்திர பூமியில் வாழ்கிறோம் என்றா லும், இந்த பூமியின் இயற்கை வளங்கள் ஆதிக்க சக்திகளால் கொள்ளை யடிக்கப்படும்போது அதைத் தடுக்க முடியவில்லையெனில், நாம் உண்மை யிலேயே விடுதலைபெற்ற மண்ணில் வாழ்கிறோமா என்பதைச் சிந்திப்பதற்கான விழிப்புணர்வு தருணமாக இந்தத் தருணம் கருதப்பட வேண்டும்.

இந்திய நாட்டின் இறையாண்மை யையும், மக்களின் உரிமைகளையும், இயற்கை வளங்களையும் சீர்குலைக்கும் ஆதிக்க சக்திகள் எந்த வடிவத்தில் வந்தாலும் தடுப்போம்; தகர்ப்போம் என முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீர்ர்களின் நினைவிடங்களிலிருந்து சபதமேற்போம்.. சூளுரைப்போம்!

பொன்முத்துராமலிங்கம், தீர்மானக்குழுத் தலைவர் - தி.மு.க

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x