Last Updated : 20 Nov, 2013 12:00 AM

 

Published : 20 Nov 2013 12:00 AM
Last Updated : 20 Nov 2013 12:00 AM

பாலுக்கு பதிலாக போதை

பெற்ற பிள்ளைகளுக்குச் சாப்பாடு போட வழியில்லாமல் வேளைக்கு ஒரு டோஸ் ஓபியம் கொடுத்து தூங்க வைக்கிற தாய்மார்களைக் கண்டிருக்கிறீர்களா? ஒன்றும் செய்வதற்கில்லை. மூன்று வயதிலிருந்து பதினைந்து வயது வரையிலான குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் - குறைந்தது ஆறு லட்சம் பேர் - இன்றைக்கு ஆப்கனிஸ்தானில் போதை அடிமைகளாகியிருக்கிறார்கள். பசிக்கிறதா? ஓபியம் கொடு. குண்டுச் சத்தம் கேட்டு குழந்தை வீறிட்டு அழுகிறதா? ஓபியம் கொடு. சிறு குழந்தையைத் தூக்கிக்கொண்டு வேலைக்குப் போய் சம்பாதிப்பது சிரமமாக இருக்கிறதா? ஓபியம் கொடுத்து உறங்க வைத்துவிட்டு வேலையைப் பார். அப்போதுதான் அடுத்த வேளைக்காவது ரொட்டி கிடைக்கும்.

இதன் விபரீதம் என்னவென்று கூட அறியாத தாய்மார்கள் தாங்களும் தின்று தங்கள் குழந்தைகளுக்கும் கொடுத்து, இப்போது அவர்கள் ஒருவேளை ஓபியம் இல்லாவிட்டால் கைகால் நடுங்குவதைப் பார்த்து, 'ஐயோ குழந்தை இப்படியாகிவிட்டதே' என்று அழுதுகொண்டிருக்கிறார்கள். தேசத்தின் பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கு இடையே இந்தப் பிரச்னையின் பக்கம் திரும்பக் கூட கவர்மெண்ட்டுக்கு அவகாசமில்லாமல் இருக்கிறது.

இது நிற்க. ஓபியம் உற்பத்தியில் உலகத்தில் ஆப்கனிஸ்தானை அடித்துக்கொள்ள இன்னொரு நாடில்லை என்பது தெரிந்த சங்கதி. ஆனால் தீவிரவாத இயக்கங்களின் ஆயுதங்களாக மட்டுமே இது உருமாறுகின்றன என்று எண்ணிக்கொண்டிருக்கும் வேளையில் உள்நாட்டிலேயே ஒரு ஓபியம் அடிமைத் தலைமுறை உருவாகியிருப்பது பற்றி ஐநா பெரும் கவலை தெரிவித்திருக்கிறது.

ஆண்கள் மட்டுமல்ல. ஆப்கனிஸ்தானின் கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்களிலும் பலர் ஓபியம் அடிமைகள். (குறைந்தது நான்கு லட்சம் பேர் என்று ஒரு புள்ளி விவரம் இருக்கிறது.) இவர்களை இந்தப் பழக்கத்தில் இருந்து மீட்பதற்காக பிரசார நிமித்தம் இந்த கிராமப்புறங்களுக்குச் செல்லும் டாக்டர்கள் சொல்லும் ஒரு விவரம் பயங்கரமாக இருக்கிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் ஓபியம் புகைத்தபடியே குழந்தைகளுக்குப் பால் கொடுக்க, மிகச் சிறு வயது முதலே அந்தப் புகையின் நெடிக்குப் பழகிவிடும் குழந்தைகள், மூன்று நான்கு வயதுக்குள்ளாகவே ஓபியம் புகையின்றி வாழமுடியாத அளவுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். தமது பணிகளுக்குக் குழந்தைகள் இடையூறின்றி இருக்க இந்தத் தாய்மார்கள் அப்போது நேரடியாகவே அவர்களுக்கு இந்தப் போதைப் பொருளை அளித்துத் தூங்கவைத்துவிடுகிறார்கள்.

மிக மோசமான உடல்நலக் கேடு என்ற ஒன்று வந்தால் மட்டுமே இவர்கள் டாக்டர்களை நாடுவார்கள். அப்போது என்ன சிகிச்சை அளித்து இந்தக் குழந்தைகளைக் காப்பாற்றுவது என்று புரியாமல் டாக்டர்கள் பெரும்பாலும் கைவிரிக்கும் சூழல் ஏற்படுகிறது.

போதை மறுவாழ்வு மையங்கள் போதுமான அளவுக்கு இல்லாத நிலையில் ஒரு பெரும் தலைமுறையையே ஓபியத்துக்கு பலி கொடுத்துக்கொண்டிருக்கிறது ஆப்கனிஸ்தான்.

பெண் குழந்தைகள் படிக்கக்கூடாது, முகத்தை மூடாமல் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது, பாடக்கூடாது, ஆடக்கூடாது, ஓடக்கூடாது, நிற்காதே, நடக்காதே, பேசாதே என்று தொட்டதற்கெல்லாம் அட்டகாச ஆட்டம் புரியும் தாலிபன்கள் இந்த விவகாரத்தை இதுகாறும் கண்டுகொண்டதாகக் கூட சரித்திரக் குறிப்புகள் இல்லை. ஹமீத் கர்சாயின் அரசாங்கம் ஓபியம் தோட்டங்களை அழிப்பதற்கு ஒரு செயல்திட்டம் போட்டு அவ்வப்போது எட்டாம் பக்கத்து ரெண்டு காலம் நியூஸ் அளவுக்கு என்னவாவது நடவடிக்கை மேற்கொண்டாலும் அதனால் உபயோகம் ஒன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

ஆட்சியில் இருந்த காலத்தில் (2000) தாலிபன்கள் ஓபியம் பயிரிடுவதை சட்டபூர்வ

மாகத் தடுத்து வைத்திருந்தார்கள் என்பது உண்மையே. ஆனால் சட்டத்தையெல்லாம் யார் மதித்தார்கள்? தாலிபன்கள் போய் கர்சாய் வந்தபிற்பாடு, அதுவரை ரகசியமாக நடந்த காரியம் வெளிப்படையாகவே நடை

பெறத் தொடங்கிவிட்டது. இன்றைக்கு ஆப்கனிஸ்தான் ஒரு பிரம்மாண்டமான ஓபியம் காடு. அங்கிங்கெனாதபடி எங்கும் விளைவது அதுவே. ஏற்றுமதி ஒரு பக்கம். உள்நாட்டுப் பயன்பாடு மறுபக்கம். அழிவின் அனைத்து சாத்தியங்களிலும் அதிவேகமாகப் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள் அப்பாவி மக்கள்.

ஏற்கெனவே சொன்னதுதான். ஆப்கனிஸ்தானின் அவசரப் பிரச்னை அமெரிக்காவல்ல. வறுமையல்ல. தீவிரவாதமல்ல. கல்விதான். கல்வியின் போதாமைதான் அந்த மக்களை இந்தப் படுகுழிகளைத் தேடித்தேடித் தள்ளிக்கொண்டிருக்கிறது.

என்னவாவது செய்யவேண்டும் என்று எல்லோருக்குமே தெரிகிறது. செய்வதற்குத்தான் யாருமில்லாமல் இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x