Published : 18 Oct 2013 03:50 PM
Last Updated : 18 Oct 2013 03:50 PM
இறைவன் பேரைச் சொல்லி அறுக்கப்படாத எந்த விலங்கினத்தையும் உண்ணக்கூடாது. தாமாக இறந்த விலங்குகளைப் புசிக்கக்கூடாது (கடல்வாழ் உயிரினங்கள் விலக்கு.) எந்த விலங்கினத்தின் ரத்தமும் உண்ணக்கூடியதல்ல. பன்றிக்கறியைத் தொடக்கூடாது. இது குரான் சொல்வது (சூரா பகரா 2:173). எனவே நாய், பூனை, குரங்கு மட்டுமல்ல. வழக்கமாக மாமிச உணவாகும் மிருகங்கள் தவிர மற்ற அனைத்துமே இஸ்லாத்தில் ஹராம்தான்.
இப்போ என்ன அதுக்கு என்று கேட்டுவிடாதீர்கள். பக்ரீதுக்கு உலகெங்கும் எத்தனை லட்சம் ஆடுகள் வெட்டப்பட்டிருக்கும், எத்தனை ஒட்டகங்கள் பிரியாணியாகியிருக்கும், எத்தனை சந்தோஷமாக, திருப்தியாக, ருசித்துச் சாப்பிட்டிருப்பார்கள், மகா ஜனங்கள்! ஆனால், இந்த வருஷ பக்ரீதுக்கு சிரியா மக்களுக்கு பிரியாணியல்ல; வெறும் சோறே பிரச்னைக்குரியதாகிவிட்டது. யுத்த களேபரத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் வீட்டைத் துறந்து, ஊரைத் துறந்து எங்கெங்கோ ஓடிப் போய் பதுங்கிக்கொண்டிருக்கிறார்கள். தொழுகைக்குக் கூட மசூதிப் பக்கம் போக முடியாத சூழ்நிலை. பெருநகரங்கள் நீங்கலாக மற்ற இடங்களில் கடைகண்ணியெல்லாம் சுத்தமாக இழுத்து மூடப்பட்டுவிட்ட நிலையில் சாப்பாட்டுக்கு வழியே இல்லாமல், குடிக்க நீர் கூட இல்லாமல் ஒரு மாபெரும் மனிதக்கூட்டம் சின்னாபின்னமாகிக்கொண்டிருக்கிறது.
யுத்தம் ஒன்றும் உடனடியாக ஓயப் போவதில்லை; ஒழிகிறது, ஒரு பண்டிகை நாளையாவது கொண்டாட விடமாட்டார்களா? ம்ஹும். சாஸ்திரத்துக்கு ஒரு பிரியாணி சமைக்காமல் என்ன பக்ரீத்? ஆனால் அரைக்கிலோ அரிசி வாங்கவே வழியில்லாத சூழலில் ஆடு எங்கே வாங்குவது? ஹலால் பிரியாணி எப்படி சமைப்பது? சரி இன்னொரு பட்டினி தினம் என்று அமைதியுற வேண்டியதுதான். அப்படித்தான் முடிவு செய்தார்கள்.
சற்றும் எதிர்பாராவிதமாக அந்த ஃபத்வாவை டெமஸ்கஸில் உள்ள ஒரு பாலஸ்தீனிய அகதி முகாமிலிருந்து ஓர் இமாம் வெளியிட்டார். நீங்கள் நாய்க்கறி சாப்பிடலாம். பூனைக்கறி சாப்பிடலாம். குரங்கின் கறியைக் கூடச் சாப்பிடலாம். இறைவன் பேரைச் சொல்லி வெட்டுங்கள். குண்டடி பட்டு இறந்த விலங்கினமாயிருந்தாலும் பரவாயில்லை. இறைவன் பேரைச் சொல்லி சமைத்தால்கூடப் போதும். குர்பானி ஏற்கப்படும்.
மதம் தடை செய்ததைச் செய்யாதிருப்பதைவிட மனித குலம் தழைத்திருப்பது முக்கியம். ஒன்றும் தெய்வக் குத்தம் இல்லை. இதே குரான், 'வரம்பு மீறி, பாவம் செய்யும் நோக்கமின்றி எவரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டு இவற்றைப் புசித்துவிட்டால் அது குற்றமாகாது (6:145) என்றும் சொல்லியிருக்கிறது.
பசியும் பஞ்சமும் பட்டினியும் கொன்று குவித்த மனிதர்கள் உலகமெங்கும் சரித்திரமாகியிருக்கிறார்கள். எலிக்கறி சாப்பிட்ட விவசாயிகளின் சரித்திரம் நம்மிடத்திலும் உண்டு. ஆனாலும் மீண்டும் மீண்டும் இவ்வாறான ஓர் அவலத்தைக் கேள்விப்படும்போது ஐயோவென்றுதான் ஆகிவிடுகிறது. 2011 தொடக்கத்தில் ஆரம்பித்த சிரியா உள்நாட்டு யுத்தம் இப்போது அதன் உச்சத்தில் இருக்கிறது. விரைவில் என்னவாவது நல்லது நடந்தாலொழிய மிச்சமிருக்கும் மக்களைக் காப்பாற்றுவது கஷ்டம். ஏனெனில் ஐநா அனுப்பிவைத்த ஒரு வல்லுநர் குழு, அடுத்த சில மாதங்களில் குறைந்தது நாற்பது லட்சம் பேர், உணவு உற்பத்தி செய்யவோ, காசு கொடுத்து வாங்கவோ சுத்தமாக வழியற்றுப் போயிருப்பார்கள் என்று கணக்குப் போட்டுச் சொல்லியிருக்கிறார்கள்.
எல்லாம் சரியாகிவிடும், எதிர்ப்பாளர்களை காலி பண்ணிவிடுவேன், ஆய் ஊய் என்று அதிபராகப்பட்டவர் இப்போதும் உற்சாகமாகத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறார். அவரது பிரிட்டிஷ் மனைவியாரும் ஆங்காங்கே விழாக்கள் ஏற்பாடு செய்து, கலந்துகொண்டு, நல்லவார்த்தை ஜக்கம்மா ஜோலி பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆயினும் நாளது தேதியில் எதிர்ப்பாளர்கள் கைதான் மேலோங்கியிருக்கிறது.
வயிற்றெரிச்சல் என்னவென்றால், சிரியாவிலிருந்து அகதிகளாக அக்கம்பக்கத்து தேசங்களுக்குச் சென்று, எல்லையில் முகாம்களில் தங்கியிருப்பவர்களுக்கெல்லாம் அந்தந்த தேசத்து அரசுகள் பக்ரீதுக்கு ஆடு சப்ளை செய்திருக்கின்றன. தலைக்கொரு ஆடு முடியாது போனாலும் தலைக்கொரு பிளேட் பிரியாணியாவது சித்தித்திருக்கிறது. சொந்த நாட்டு வாசிகளுக்குத்தான் சொஸ்தக்கேடெல்லாம்.
இந்த பிரியாணி மேட்டர் ஒரு பெரிய விஷயமல்ல. அது ஒரு குறியீடு மட்டுமே. நாய்க்கறி, பூனைக்கறி சங்கதியைக் கூட நாலு நாள் வருந்திவிட்டு அப்புறம் மறந்துவிடலாம். ஆனால் காலம் திணித்திருக்கும் இந்தக் குரூரத்தை சிரிய மக்கள் அத்தனை சீக்கிரம் மறக்கமாட்டார்கள். அசாத் பாய் பதில் சொல்லியே தீரவேண்டியிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT