Published : 10 Mar 2014 12:00 AM
Last Updated : 10 Mar 2014 12:00 AM

இலவசங்களும் இலவு காத்த கிளிகளும்

தேர்தல் ஆணையம் மக்களவைத் தேர்தலுக்கான தேதிகளை அறிவித்துவிட்டது. “தேர்தல் வந்துடுச்சு, ஆசையில் ஓடிவந்தேன்” என்று எல்லாக் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களுடன் களத்தில் இறங்கிவிட்டன. தேர்தலுக்கான அறிவிப்புடன் மாதிரி நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிட்டன. அம்மா என்பது பொதுப்பெயரா, தனிப்பெயரா என்ற விவாதமும் நடந்துவருகிறது. குடிநீர், உணவகம் இவற்றுக்கெல்லாம் அம்மா பெயரை வைத்ததோடு, முதலமைச்சரின் புகைப்படத்தையும் கூடவே போட்டுவிட்டது, இப்போது திண்டாட்டமாகிவிட்டது. புகைப்படங்களை மறைக்கத் திரைகளைக் கட்டும்படி நிர்ப்பந்தம். மேலும், குடிநீர் பாட்டில்களிலுள்ள இலைச் சின்னத்தை நீக்கிவிட்டு லேபிள் இல்லாமல் விற்கப்படுகிறது. இந்தச் செயல் பொதி கட்டப்பட்டுள்ள பொருட்களை விற்கும் விதிகளுக்கு விரோதமானது. ‘எம்.ஜி.ஆர். சமாதியின் முன்னுள்ள குதிரையின் மேலுள்ளது அதன் இறக்கைகளா, இரட்டை இலையா?’ என்ற விவாதமும் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.

உதய சூரியனை மூட முடியுமா?

உத்தரப் பிரதேசத்தில் கடந்த முறை நடந்த தேர்தலில் அங்கிருந்த பொது இடங்கள், பூங்காக்களில் இருந்த யானைச் சிற்பங்களை மூடச்சொல்லித் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஏனென்றால், மாயாவதியின் தேர்தல் சின்னம் யானை. “தங்கள் சின்னத்தைத் திரையிடச் சொன்னதுபோல், காங்கிரஸின் கைச் சின்னத்தையும்

பா.ஜ.க-வின் தாமரைச் சின்னத்தையும் மறைக்கும் விதமாக அனைவரது கைகளையும் தடாகங்களில் உள்ள தாமரைகளையும் மூடச்சொல்லித் தேர்தல் ஆணையம் உத்தரவிடுமா?” என்று அவர்கள் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. உண்மைதான். தி.மு.க-வின் சின்னம் என்பதால் மறைக்க வேண்டும் என்றால், உதய சூரியனை மூடுவது மனித ஆற்றலுக்கு உட்பட்டதா என்ன?

சின்னங்கள்: தொடரும் பிரச்சினை

வயதுவந்தோர் அனைவருக்கும் ஓட்டு என்று அரசமைப்புச் சட்டத்தில் முடிவான பின்னர் ஏற்பட்ட முதல் பொதுத்தேர்தல் 1952-ம் ஆண்டு நடத்தப்பட்டது. முறையான கல்வியறிவு பெற்ற மக்கள்தொகை மிகவும் குறைவு என்பதால், ஓட்டுப் பெட்டிகளுக்கு விதவிதமான வண்ணங்கள் பூசப்பட்டன. அதிலும் குழப்பம் ஏற்பட்டதால், அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு அதிகாரபூர்வமான தேர்தல் சின்னங்கள் ஒதுக்கப்பட்டன. வாக்காளர்கள் கணினியின் மூலம் வாக்குப்பதிவு செய்யும் முறை இன்றைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரும், கட்சிச் சின்னங்களைத் தொடர வேண்டிய மோசமான நிலைமைதான் உள்ளது.

பணமும் சாராயமும்

மாதிரி நடத்தை விதிகளை அறிவித்த தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை விடுத்துள்ளனர். அதைத் தவிர, தேர்தலில் முறைகேடுகளை விளைவித்தால் ஏற்படும் ஆபத்துகளையும் அறிவித்துள்ளனர். அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின்படி, முறையான தேர்தலை நடத்தக்கூடிய மேற்பார்வை அதிகாரம் தேர்தல் ஆணையத் துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி முறையான தேர்தல்களை இன்றுள்ள நிலையில் நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின்போதும் பணமும் சாராயமும் பெருக்கெடுத்தோடுவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

எத்தனை கோடி?

தேர்தல் செலவினத்தின் வரையறையைச் சட்டபூர்வமாக நிர்ணயித்த பின்னரும் பெரும்பாலான வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகை பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும். ஒவ்வொரு கட்சியும் தனது சார்பாகப் போட்டியிட விரும்பும் நபர்களிடம் நேர்காணல் நடத்தும் புகைப்படங்களை ஊடகங்களில் காணலாம். நேர்காணலின்போது பங்குபெற்ற நபர்களிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி, அவர்களால் செலவழிக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பதுதான். 10 கோடி அல்லது 20 கோடி என்று உறுதி அளிப்பவர்களுக்கு மட்டுமே தொகுதி ஒதுக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகளுக்கு எந்த அரசியல் கட்சிகளிடமிருந்தும் மறுப்பு வரவில்லை.

அழகிரி ‘ஃபார்முலா’

தி.மு.க. தலைவரின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகிரி சமீபத்தில் பேசிய கூட்டம் ஒன்றில் பணம் வைத்திருப்பவர்களுக்குத்தான் கட்சியில் சீட் கிடைப்பதாகத் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிகரமான சூத்திரத்தை அமல்படுத்தி வெற்றிகண்ட அவருக்கே பணத்தின் முக்கியத்துவம் தெரியாதா? இன்றைக்குத் தேர்தல் அகராதியில் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்ற வார்த்தையை நுழைத்த பெருமை அவரையே சாரும். ஆனால், தேர்தல் சூத்திரங்கள் இன்றைக்குத் திருமங்கலத்திலிருந்து விலகி ‘ஏற்காடு ஃபார்முலா’வுக்கு வந்துவிட்டன. போட்டியிடும் பெரிய கட்சிகள் அனைத்துமே பணத்தை வாரியிறைக்கும் நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டன. கடந்த மக்களவைத் தேர்தலில் ரூ. 2,000 கோடி வரை விளம்பரங்களுக்காக மட்டுமே செலவிடப்பட்டது என்ற செய்தியைப் படிக்கும் போது, மற்ற வகையான செலவினங்கள் மேலும் சில ஆயிரம் கோடிகளைத் தாண்டியிருக்கும் என்றுதானே கருத வேண்டியிருக்கிறது.

ஒரு நோட்டு, ஒரு ஓட்டு

ஏகபோக நிறுவனங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு அறக்கட்டளைகளை ஏற்படுத்தி நன்கொடை அளித்து வருகின்றன. அதில் முக்கிய அனுகூலம் பெற்ற கட்சிகள் காங்கிரஸும் பா.ஜ.க-வுமே. இன்றைக்கு பா.ஜ.க-வினர் தெருக்களில் ‘ஒரு நோட்டு, ஒரு ஓட்டு’ என்ற பிரச்சார இயக் கத்தைத் தொடங்கியிருப்பது சிரிக்கவைக்கிறது. உண்டியல் குலுக்கி, கட்சி நிதிக்காக நாணயங்களைச் சேர்க்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளைக் கிண்டலடிக்கும் வகையில் தகரம் கண்டுபிடித்ததே அவர்களுக்காக என்று ஜெயலலிதாவும் மற்ற சிலரும் சொல்லியிருப்பது தேர்தலுக்கான செலவைப் பணமூட்டைகளிடமிருந்து பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு அவர்களிடம் இருப்பதைத்தான் காட்டுகிறது. சொந்தச் செலவில் டீ குடித்து, சுவர் விளம்பரங்கள் செய்துவந்த தொண்டர்கள் எல்லாம் காணாமல் போய் விட்டார்கள். விளம்பர நிறுவனங்கள் மூலம்தான் இன்று சுவரொட்டி மற்றும் தொலைக்காட்சி விளம்பரங்கள் தயார்செய்யப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. ‘பூத் ஸ்லிப்’புகள் தயார்செய்வதற்குக்கூடக் கூலிக்கு ஆள் வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசியல் கட்சிகள் உள்ளன.

தேர்தல் ஆணையமும் டாஸ்மாக்கும்

பணம் ஒரு பக்கம் பெருக்கெடுத்து ஓடினால் மறுபக்கம் சாராயம் வழிந்தோடுகிறது. சமயத்தில் சாராய பலம் பெருகுவதைத் தடுக்கத் தேர்தல் அறிவிப்பிலிருந்து முடிவுகள் வரும்வரை சாராய/ மதுக் கடைகளை மூடி வைக்கும் விதமாக மாதிரி நடத்தை விதிகளில் திருத்தம் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்திவிட்டு, தேர்தல் ஆணையம் டாஸ்மாக்கின் மதுபான விற்பனையைத் தொடர்ந்து தாங்கள் மேற்பார்வையிடப்போவதாகவும், எங்கேனும் கூடுதல் விற்பனை நடந்தால் நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறியுள்ளது நம்மை நகைப்படையச் செய்கிறது. வரப்போகும் தேர்தலில் பணபலம், சாராய பலம் புகுந்து விளையாடப்போவதைக் கட்டுப்படுத்தத் தேர்தல் ஆணையத்திடம் உருப்படியான ஆலோசனை எதுவுமில்லை என்பதைத்தான் இவை காட்டுகின்றன.

இலவசங்கள்

இதுதவிர, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கை களில், தாங்கள் வெற்றி பெற்றால் மக்களுக்கு இலவசப் பொருட்கள் வழங்கப்போவதாக அறிவித்துவருகின்றன. இத்தகைய அறிவிப்புகளை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 123-வது பிரிவின் கீழ் ‘ஊழல் நடத்தை’ என்று அறிவிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணிய பாலாஜி என்ற வழக்கறிஞர் வழக்குத் தொடுத்தார். உச்ச நீதிமன்றம் அந்த மனுவைத் தள்ளுபடிசெய்துவிட்டது. ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சிகள், அரசமைப்புச் சட்டத்தின் நான்காவது பகுதியிலுள்ள, அரசுக்கு வழிகாட்டும் நெறிக்கொள்கைகளைச் சட்டத்தின் மூலம் அமல்படுத்த அரசு கடமைப்பட்டுள்ளது என்றும் அதனால், அச்செயல்களை ஊழல் நடத்தைகள் என்று சொல்ல முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறிவிட்டது. அதே சமயத்தில், தேர்தல் ஆணையமே அரசமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவின் கீழ் இவற்றை மாதிரி நடத்தை விதிகளின் கீழ் கொண்டுவர முடியுமா என்று பரிசீலிக்கும்படியும் உத்தரவிடப்பட்டது. நாடாளுமன்றமே இதுபற்றிய சட்டம் கொண்டுவரலாம் என்ற கருத்தையும் உச்ச நீதிமன்றம் வெளியிட்டது. தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளிடம் கலந்தாலோசித்துவிட்டு எவ்வித உத்தரவையும் வெளியிடவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், தேர்தலின்போது வாக்காளர் களுக்குக் கிடைக்கக்கூடிய சட்டவிரோத ஆதாயங்கள் தவிர, தேர்தல் முடிந்த பின் கிடைக்கப்போகும் இலவசங்களும் காத்திருக்கின்றன. இலவசங்களுக்காக வாக்காளர்களும், இலவு காத்த கிளிகளாக வேட்பாளர்களும் இன்று களத்தில் நிற்கின்றனர்.​

- சந்துரு, உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி, சமூக விமர்சகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x