Published : 20 Sep 2013 12:30 PM
Last Updated : 20 Sep 2013 12:30 PM
ஜவாஹிரியை நேற்று ஜாமூனில் முக்கியதற்கு சரியான தண்டனை. துருக்கி எல்லையில் இருக்கிற அஜாஸ் என்னும் சிரியாவின் நகரத்தை அல் காயிதா சப்போர்ட்டுடன் கிளர்ச்சியாளர்கள் அல்லது புரட்சியாளர்கள் அல்லது அரசு எதிரிகள் அல்லது அதிரின் எதிரிகள் கைப்பற்றிவிட்டார்கள். நாளது தேதி வரை ஹிஸ்புல்லாவும் அல் நுஸ்ராவும்தான் அங்கே உள்நாட்டு அரசெதிர்க் குழுக்களுக்கு சகாயம் பண்ணிக்கொண்டிருந்தது. லிஸ்டில் இப்போது அல் காயிதா சேர்ந்திருக்கிறது. பத்தாது? சுபம் சீக்கிரம்.
லிபியாவில் புரட்சியெல்லாம் முடிந்து கடாஃபி ஆட்சி காலாவதியாகிவிட்ட பிற்பாடு அங்கே புரட்சி செய்யப்போன குழுக்களுக்கு அடுத்த அசைன்மெண்ட்டாக அகப்பட்டது சிரியாதான். கடாஃபி மாதிரியே யுகக்கணக்கில் ஆட்சி செய்யும் சிரிய அதிபர் குடும்பத்தை விட்டுவைப்பது தகாதல்லவா? எனவே அவர்கள் மூட்டை கட்டிக்கொண்டு துருக்கி வழியாக சிரியாவுக்குள் வந்து சேரத்தொடங்கினார்கள்.
அவர்களை வரவேற்று இடம் கொடுத்தது, சுதந்தர சிரிய ராணுவம். அதிபரை வீட்டுக்கு அனுப்பும் தலையாய நோக்கத்துடன் 2011ம் ஆண்டு Free Syrian Army என்ற இந்தப் போராட்டக்குழு உருவாக்கப்பட்டது. சிரியாவின் அரசு ராணுவத்தில் இருந்த பலபேர் உத்தியோகத்தைத் துறந்து இந்தத் தனி ராணுவ அமைப்பை உருவாக்கி ஆள் சேர்த்தார்கள். அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் கண்டமேனிக்கு ஊர்வலம், பொதுக்கூட்டம், அடையாள வேலை நிறுத்தமெல்லாம் நடத்திக்கொண்டிருந்த புரட்சியின் தொடக்க தினங்கள் அவை. ஊர்வலம் போகிற ஜனங்களுக்கு போலிஸ் மற்றும் ராணுவத்தினரிடமிருந்து பாதுகாப்பு தருகிறேன் என்று சொல்லித்தான் எஃப்.எஸ்.ஏ களத்தில் இறங்கியது. அது அப்படியே கொஞ்ச கொஞ்சமாக புரட்சிப் படையாக மாறி எக்கச்சக்க ஆயுத பலம், வெளிநாட்டு கரன்சி பலம் எல்லாம் வந்து ப்ராப்பர் போராளிக் குழுவாகக் கூடிய சீக்கிரமே அடையாளம் கண்டது.
சிரிய அதிபர் ஜகஜ்ஜாலக் கில்லாடி. அரசாங்க ராணுவம் என்று ஒன்று இருந்தாலும், அவரது மாமா, சித்தப்பா, ஒண்ணு விட்ட அண்ணன் மகன், கொழுந்தியாவின் சீமந்த புத்திரன் என்று பார்த்துப் பார்த்து அதில் அதிகாரிகளை நியமித்திருந்தாலும், எதற்கும் இருக்கட்டும் என்று தனக்கென ஒரு தனி ராணுவத்தையும் அவர் வைத்திருக்கிறார். ஷாபிஹா என்று அதற்குப் பேர். அதிபரின் சொந்த ஜாதி ஆட்களைத் தவிர இதில் வெளியாளுக்கு இடமில்லை. (பஷார் அல் அசாத், சிறுபான்மை அலாவைட் இனக்குழுவைச் சேர்ந்தவர்.) அந்தப் பாழாய்ப்போன ரசாயன ஆயுதப் பிரயோகத்தையெல்லாம் கூட இந்த பிரைவேட் தாதாக்கள்தான் செய்தார்கள்.
சிரிய போராட்டக்காரர்கள், அதிபரின் இந்த இரு ராணுவத்தினரையும் சமாளித்தாக வேண்டியிருக்கிறது. அது சிரம சாத்தியம். தவிரவும் அதிபருக்கு ரஷ்யாவின் பலத்த சப்போர்ட் இருக்கிறது. சப்போர்ட் என்றால் வார்த்தையளவில் அல்ல, வாழ்க்கையளவில். இந்தப் பக்கம் நான் உந்தன் தோழன் முஸ்தபா பாடுவது இரான். பத்தாததற்கு சீனாவும் பெருஞ்சுவராக நிற்பேனென்கிறது. கத்தி கபடாவிலிருந்து கண்டமேனிக்கு ஆயுத சப்ளை ஒரு பக்கம். அறிக்கை சப்போர்ட் ஒரு பக்கம். வேறு வழி? கூப்பிடு, ஊர் சுற்றிப் புரட்சியாளர்களை.
மக்கள் பாடுதான் ரொம்ப பேஜாராகிக் கிடக்கிறது. அதிபர் பதவி விலகித்தான் தீரவேண்டும் என்பதில் அவர்களுக்கு மாற்றுக்கருத்தே இல்லை. ஆனால் அதெல்லாம் நடந்து முடிந்து எலக்ஷன் மாதிரி என்னவாவது ஒன்று நடத்தப்பட்டு புதிய மக்கள் ஜனநாயக மறுமலர்ச்சி விடிவெள்ளி முளைக்கும் நேரம் அதைப் பார்ப்பதற்கு ஊராந்திரத்தில் நாலைந்து பேராவது இருக்க வேணாமா?
நாளது தேதியில் மேற்படி சிரிய உள்நாட்டு யுத்தத்தில் குறைந்தது ஒரு லட்சம் பேராவது இறந்திருக்கிறார்கள் என்று கணக்கு வழக்கு வல்லுநர்கள் சொல்கிறார்கள். அரசுத் தரப்பும் சரி, எதிர்த்தரப்பும் சரி. தாக்குதல் தொடங்கிவிட்டால் கண்மண் தெரியாமல் அடிக்கிறார்கள். இடையே மாட்டிக்கொண்டு செத்துப் போகும் அப்பாவிகளைக் குறித்து லவலேசமும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. இதுவரை சுமார் பதினைந்து லட்சம் பேர் எல்லைகளில் வாழமுடியாமல் அகதிகளாக அக்கம்பக்கத்து தேசங்களில் தஞ்சம் போயிருக்கிறார்கள்.
நியாயமாக இப்போது நடக்க வேண்டியது பேச்சுவார்த்தை. அதிபர் சமர்த்தாகப் பதவி விலகிவிட்டு தேர்தல் அறிவித்தால் ஊருக்கு நல்லது. இதை ரஷ்யாவே அவருக்கு எடுத்துச் சொல்லிப் புரியவைத்தால் அவருக்கு நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT