Published : 14 Nov 2013 12:00 AM
Last Updated : 14 Nov 2013 12:00 AM
ஹனிமூனுக்குப் போவதென்றால் தங்கத் தமிழன் ஊட்டி, கொடைக்கானலை உடனே நாடுவது போல யாராவது அமைதிப் பேச்சுக்கு மாநாடு கூட்ட நினைத்தால் உடனே ஜெனிவாவைத்தான் தலமாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். அழகான ஸ்விச்சர்லாந்தின் அம்சமான நகரம். கொதிப்புகளைத் தாற்காலிகமாக இறக்கி வைத்துவிட்டு அமைதிப்புறா பறக்கவிட்டுப் பார்க்கலாம்.
ஜெனிவாவில் விரைவில் சிரியா உள்நாட்டுக் களேபரங்களைப் பேசித் தீர்ப்பதற்காக ஒரு மாநாடு நடக்கப் போகிறது. யாருடன் எதைப் பேசுவது? அதிபர் பஷார் அல் அஸாத் அவசியம் வருவார். ஏனென்றால் அமைதிக்கு அறைகூவல் விடுத்திருக்கும் கோஷ்டியார் அவருக்கு வேண்டப்பட்டவர்கள். அமெரிக்கச் சிங்கங்களும் பிரித்தானியத் தங்கங்களும் முனைந்திருக்கும் திருப்பணி எதுவானாலும் அவர் எஸ் சார் என்பார். அதில் சந்தேகமில்லை.
ஆனால் எதிர்த்தரப்பில் யார் உட்காரப் போகிறார்கள்? இதுதான் நேற்று வரைக்கும் மாபெரும் கேள்வியாக இருந்தது. இன்றைக்கு விடை சித்தித்திருக்கிறது.
நேற்றைக்கு துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் கூடிப் பேசிய சிரிய எதிர்த்தரப்புக் கூட்டணியினர் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டால் ஜெனிவாவுக்கு நாங்கள் வரத் தயார் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதிபரை அகற்றி வைத்துவிட்டு ஓர் இடைக்கால அரசாங்கத்தை நிறுவி அதில் ஒன்பது அமைச்சர்களை உட்காரவைப்பது வரைக்கும் அவர்கள் திட்டம் போட்டுவிட்டார்கள். தங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை. பஷார் பதவி விலகியே தீரவேண்டும். கொஞ்ச நாளைக்கு இடைக்கால அரசு. அப்புறம் தேர்தல். அதற்கப்புறம் என்னவென்பதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். இப்போதைக்கு வேண்டியது இதுவே. இதை இங்கே உட்கார்ந்தும் சொல்லுவோம், ஜெனிவாவுக்கு வந்தும் சொல்லுவோம். ஒன்றும் பிரச்னை இல்லை.
ஆனால் வரவேண்டுமானால் சில சங்கதிகள் நடந்தாகவேண்டும். யுத்த வெடிகளில் சிக்கிச் சின்னாபின்னமாகியிருக்கும் சிரியாவின் நாலாபுறங்களிலும் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடைபெற்றாகவேண்டும். நிவாரண உதவிகள் தடையின்றிக் கிடைக்கவேண்டும். அதை விட முக்கியம், பஷாரின் அரசாங்கம் சிறைப் பிடித்து வைத்திருக்கும் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யவேண்டும்.
இதையெல்லாம் செய்தால் ஜெனிவாவுக்கு வருவது பற்றி யோசிக்கலாம். சிரிய மக்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதைக் கேட்டுச் செயல்படுவதே எங்கள் திட்டம் என்று ஒப்புக்கு ஒரு எண்ட் பஞ்ச்.
இந்த அறிவிப்பை அடுத்த செகண்டே அமெரிக்காவும் பிரிட்டனும் வரவேற்றுவிட்டன. இனி வரிசையாக ஐரோப்பிய தேசங்கள் ஒவ்வொன்றாக வரவேற்கும். எதிர்க்கூட்டணியினருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பார்கள். எதிர் சீட்டில் உட்கார்ந்து பேச ஒருத்தராவது இருந்தால்தானே அதன் பெயர் பேச்சுவார்த்தை? யாருமில்லாமல் பின்னே சுவரைப் பார்த்தா பேசமுடியும்?
இது நிற்க. இந்தப் பேச்சுவார்த்தை ஒருவேளை நடைபெற்று, ஒருவேளை சிரியா மக்களுக்குச் சாதகமாக என்னவாவது நிகழ்ந்து, ஒருவேளை பஷார் பெரிய மனசு பண்ணி ராஜினாமா செய்து, ஒருவேளை தேர்தல் நடந்து, ஒருவேளை ஜனநாயகம் தழைத்து, ஒருவேளை -மறுவேளை உயிர் பிழைத்திருப்பது பற்றிய கவலை மட்டுமே இப்போது மக்களுக்கு இருக்கிறது. இந்த ஒருவேளைகளால் ஒரு புண்ணாக்கு உபயோகமும் ஏற்படப் போவதில்லை. ஏனென்றால் பஷார் அல் அஸாத் பதவி விலகக்கூடியவரும் அல்லர்; அவரைப் பதவியில் இருந்து தூக்கியடிக்கக்கூடிய வல்லமையும் இந்த எதிர்த்தரப்புக்கு இல்லை.
மைனாரிடி ஷியா பிரிவினைச் சேர்ந்தவரான அதிபருக்கு அங்கே ஹெஸ்புல்லா உள்பட சில வலுவான இயக்கங்களின் துணை இருக்கிறது. எதிர்த்தரப்பில் ஏகப்பட்ட வெளி தேசத்துப் போராளிக் குழுக்களும் உள்நாட்டுக் குழுக்களும் கலந்திருப்பினும் அவர்களுக்குள் சரியான ஒருங்கிணைப்பு இல்லை. இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜெனிவா டூர் போக ஒப்புக்கொண்ட பிரகஸ்பதிகளுக்குள்ளேயே நிறைய கருத்து வேறுபாடுகள் எழத் தொடங்கியிருக்கின்றன. பார்ட் டைம் சப்போர்ட் பண்ண ஒப்புக்கொண்டு களமிறங்கியிருக்கும் அல் காயிதாவுக்கு எதிர்த்தரப்புக்குள்ளேயே ஒரு கோடி எதிரித் தரப்புகள் இருப்பது கலவரமூட்டியிருப்பதாகத் தெரிகிறது.
மத்தியக் கிழக்குப் போராளிக் குழுக்களை மொத்தமாக சிரியாவுக்குள் கொண்டுவந்து குவித்து கம்ப்ளீட்டாகக் கபளீகரம் பண்ணுவதற்கு அமெரிக்கா இந்தத் தருணத்தை வசமாகப் பயன்படுத்தப்பார்க்கிறது.
மாட்டிக்கொண்டு அவதிப்படும் மக்கள்பாடுதான் பேஜார்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT