Last Updated : 09 Jan, 2014 12:00 AM

 

Published : 09 Jan 2014 12:00 AM
Last Updated : 09 Jan 2014 12:00 AM

சிங்கப்பூர் சீற்றம் ஏன்?

சிங்கப்பூரில் டிசம்பர் 8-ம் தேதி இரவு நடந்த கலவரம், வேலைக்காக ஒரு நாட்டில் குடியேறும் தொழிலாளர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை உலகுக்கே உணர்த்தும் பாடமாகும். இப்போது பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளையும் இப்பிரச்சினை பாதித்துவருகிறது.

வெள்ளை அறிக்கை

சிங்கப்பூர் என்பது ஒற்றை ஆட்சி முறை உள்ள, மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமாகும். சிங்கப்பூரின் மக்கள்தொகை 54 லட்சம். இந்த மக்கள்தொகை சிங்கப்பூரின் வளர்ச்சித் தேவைகளுக்கும் பொருளாதார வளர்ச்சி விகிதத்துக்கும் போதுமானதாக இல்லை என்பதால் 2030-ம் ஆண்டு வாக்கில், இதன் மக்கள்தொகை 69 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும் என்று அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையை மக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் கடந்த சில ஆண்டுகளாகவே சரிந்துவருகிறது. அத்துடன் மூப்படைவோரின் எண்ணிக்கை யும் உயர்ந்துவருகிறது. 2020 முதல் இது மேலும் தீவிரமாகும் என்று மதிப்பிடப்படுகிறது. மக்கள்தொகையைத் தொடர்ந்து அதிகரிக்கச் செய்யவும் பொருளாதார உற்பத்தித் திறனைக் கூட்டவும் ஆண்டுதோறும் 15,000 முதல் 25,000 தொழிலாளர்கள் குடியேற அனுமதிக்கலாம் என்று வெள்ளை அறிக்கையில் கூறப்பட்டது. வெளிநாடு களில் வசிக்கும் சிங்கப்பூர்வாசிகளை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திரும்ப ஈர்ப்பது என்றும் அரசு முடிவுசெய்திருக்கிறது.

சிங்கப்பூரார்களின் அச்சம்

அதிக அளவுக்கு வெளிநாட்டுத் தொழி லாளர்களை ஈர்க்கும் அரசின் கொள்கையை சிங்கப்பூர்வாசிகள் நிராகரித்துள்ளனர். வீதிகளில் அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நடமாடுவதால், சிங்கப்பூர்வாசிகள் அச்சப்படுகின்றனர். வெளிநாட்டவர்கள் அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரில் குடியேற ஆரம்பித்தால், உள்நாட்டவர்கள் கலாசார அடையாளத்தையே இழந்துவிடுவார்கள் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அத்துடன் அதிக மக்கள் குடியேறினால் குடிநீர், கழிப்பிட வசதி, பொதுஇடங்கள் ஆகியவற்றுக்குப் போட்டி அதிகரித்துவிடும் என்பதும் அவர்களுடைய கவலை.

அளவுக்கு மிஞ்சிய விருந்தினர்கள்

சிங்கப்பூரின் பொருளாதாரம் கடந்த 30 ஆண்டுகளில் வளர்ச்சிபெற பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சாதகமான வர்த்தகச் சூழல், துறைமுகமும் சரக்குப் பெட்டக முனையங்களும் கேந்திரமான இடத்தில் இருப்பது, மையப்படுத்தப்பட்ட நிர்வாகம் கொண்ட ஜனநாயக அரசு ஆகியவை இந்த வளர்ச்சிக்குக் காரணமான சில அம்சங்கள். எண்ணெய் சுத்திகரிப்புப் பணியிலும் கட்டுமானத் துறையிலும் வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பயனுள்ள வகையில் பயன்படுத்திக்கொள்கிறது சிங்கப்பூர்.

இருப்பினும், உள்நாட்டு மக்கள்தொகை எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுத் தொழிலாளர்களின் சதவீதம் உயர்ந்துகொண்டேபோகிறது. அதே வேகத்தில் கலாச்சாரரீதியிலான பகிர்தல் நடைபெறுவதில்லை. வெளி நாட்டுத் தொழிலாளர்களின் மனக் கசப்புக்கு இதுதான் முக்கியக் காரணம் என்றாலும், டிசம்பர் 8-ம் தேதி நடந்த பஸ் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் உயிரிழந்தது குவிமையமாக உருவெடுத்துவிட்டது. சிங்கப்பூர்வாசிகளின் வருவாய்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் பெறும் வருவாய்க்கும் இடையிலான வேறுபாடும் அதிருப்தி வளர முக்கியக் காரணம். சிங்கப்பூரின் 54 லட்சம் மக்கள்தொகையில் 15.5 லட்சம் பேர் - அதாவது 28.8% - வெளிநாட்டவர்.

ஆளுக்கொரு நியாயம்

வெளிநாட்டுத் தொழிலாளர் சராசரியாக 7,200 டாலர்கள் ஊதியம் பெறுகிறார். அதே சிங்கப்பூர்வாசியின் சராசரி தேசிய நபர்வாரி வருமானம் 42,930 டாலர்கள். இது கிட்டத்தட்ட ஆறு மடங்கு குறைவு. தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதியோ, வசதியான குடியிருப்பு வசதியோ கிடையாது. வெளிநாட்டுத் தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் ஒண்டிக்கட்டை. குடும்பத்துடன் இருக்க முடிவதில்லை. சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினருடனான தொடர்புக்கு மொபைல் போன்களையோ, இணைய தளங்களையோதான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.

மறுக்கப்படும் ஜனநாயக உரிமை

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு சிங்கப்பூரில் அரசியல் உரிமைகள் ஏதும் கிடையாது. இங்கு நடைபெறும் தேர்தல் களில் அவர்கள் வாக்களிக்க முடியாது. அதே வேளையில், சொந்த நாட்டில் தேர்தல் நடந்தாலும் இங்கிருந்தபடியேயும் வாக்களிக்க முடியாது, வாக்களிப்பதற்காக ஊருக்கும் போய்வர முடியாது. எனவே, தங்களுடைய உரிமைகளுக்காகத் தாய்நாட்டிலும் குடியேறிய நாட்டிலும் குரல்கொடுக்க முடியாத ஊமைகளாக இருக்கின்றனர். எனவே, ஜனநாயக உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்படுகின்றன.

தகவல் தொழில்நுட்பம் காரணமாகத் தங்கள் நாட்டில் அல்லது மாநிலத்தில் அன்றாடம் நடப்பவற்றை அவர்களால் தெரிந்துகொள்ள முடிகிறது. செல்வாக்குள்ள தொழிலாளர்கள் தேர்தல் காலத்தில் சொந்த மாநிலத்தில் உள்ள வேட்பாளர்களுக்காக ஊர்க்காரர்களிடம் தொலைபேசியில் பேசி வாக்கு சேகரிப்பதைக்கூடப் பார்க்க முடிகிறது. இருப்பினும், இதற்கு மேல் இந்தத் தகவல் தொழில்நுட்பம் அவர்களுக்கு ஜனநாயகப் பங்களிப்புக்கு உதவும்படியாக இல்லை.

வேலைக்காகக் குடியேறிய நாடுகளில் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்கும் முழு உரிமை இல்லாததால், சமூக வலைத்தளங்களில்கூட அவர்களால் ஓரளவுக்குத்தான் தங்களுடைய கருத்துகளைத் தெரிவிக்க முடிகிறது. குறிப்பாகச் சொல்வதென்றால், பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் வசிக்கும் இந்தியர்கள் தங்கள் நாட்டின் அரசியல் பிரச்சினைகளுக்காக லண்டனிலும் நியூயார்க்கிலும் ஊர்வலம் செல்லவும் கண்டனம் தெரிவிக்கவும் முடிகிறது. சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு அப்படிப்பட்ட உரிமைகளோ வடிகால்களோ இல்லை.

இடைவெளியை நிரப்ப

சிங்கப்பூர் சமூகத்துடன் இந்தியத் தொழிலாளர்கள் ஒருங்கிணைக்கப்பட அவர்களை அனுப்பும் நாடும், அவர்களைப் பெறும் நாடும் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

முதலாவதாக, இவர்களைக் குறைந்த கூலிக்குக் கிடைத்த வேலையாள்களாகப் பார்க்கும் மனோபாவம் சிங்கப்பூருக்கு மாற வேண்டும். அவர்கள் தங்களுடைய தொழில் திறமைகளை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையின் படிநிலையில் மேலும் முன்னேற வாய்ப்பளிக்க வேண்டும்.

இந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை யைப் பாதிக்கும் விஷயங்கள்குறித்து அவர்கள் பேசவும் அவற்றுக்குப் பரிகாரங் களைப் பெறவும் சமூக நிலைகளில் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

நிதிப் பற்றாக்குறையாலும் தொழில் நுட்ப அறிவு போதாமையாலும் முன்னுக்குவர என்ன செய்ய வேண்டும் என்று வழிகாட்ட ஆள்கள் இல்லாததாலும், தேக்க நிலையில் வசிக்கும் - வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் சமூகத்தின் பிற தரப்பினரோடு தொடர்புகொள்ள உரிய தகவல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

சொந்த நாட்டில் வசிக்கவில்லை அல்லது வசிப்பது சொந்த நாடாக இல்லை என்ற காரணத்தால், இந்தத் தொழிலாளர்கள் தொழில்திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இதனால், கலாச்சாரரீதியாகப் பின்தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், தகவல் தொழில்நுட்பங்களை ஏற்பதிலும் பயன் படுத்துவதிலும் பின்தங்கியிருக்கின்றனர்.

இந்தக் கோளாறுகளையெல்லாம் ஒட்டு மொத்தமாகச் சரி செய்வதன்மூலம்தான், தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும். அவர்களுக்கும் சிங்கப்பூர்வாசிகளுக்கும் இடையிலான தேவையற்ற பதற்றங்களைத் தணிக்க முடியும்.

ராஜீவ் அரிகாட் - கட்டுரையாளர், சிங்கப்பூரின் நான்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பி.எச்.டி. மாணவர். பிசினஸ் லைன்

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x