Last Updated : 17 Feb, 2014 11:36 AM

 

Published : 17 Feb 2014 11:36 AM
Last Updated : 17 Feb 2014 11:36 AM

ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்- டி. ஜெயராமன்

குறைந்தபட்சக் கூலியில் ஒரு பக்கம் வறுமையோடு போராட்டம், மறுபக்கம் பணிநிரந்தரம் கோரி அரசோடு போராட்டம் என்று தொடர்கிறது இந்தியப் பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வாழ்க்கை. அவர்களில் ஒரு குழுவினர்தான் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

லாபம் மட்டுமே குறி!

விவசாயம், தொழில், சேவைத் துறை இந்த மூன்றும் சேர்ந்ததுதான் மொத்த உள்நாட்டு உற்பத்தி. இதில் தொழில் துறை, சேவைத் துறையில் பணியாற்றுபவர்களில் 90% பேர் ஒப்பந்தத் தொழிலாளர்கள். நேருவின் பஞ்சசீலக் கொள்கையில் உருவான பொதுத்துறை நிறுவனங்களின் நோக்கம் லாபம் மட்டுமே அல்ல; வேலைவாய்ப்பு மற்றும் உள்நாட்டு உற்பத்திப் பெருக்கத்துக்காகவும் அவை ஏற்படுத்தப்பட்டன.

ஆனால், அந்தக் கொள்கையைக் கிடப்பில் போட்டுவிட்டு, லாபம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பொதுத்துறை நிறுவனங்கள் செயல் படுகின்றன. பல்வேறு பணிகள் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டு விட்டன. எட்டு மணி நேர வேலை 12 மணி நேரமாக்கப்பட்டது. ஒப் பந்தத் தொழிலாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே ஓய்வுபெறும் அவலச் சூழல் உருவாகிவிட்டது.

சட்டத்தை மதிக்காத நிர்வாகங்கள்

என்.எல்.சி-யில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்களைச் சுரண்டி வருகி றார்கள். தொடர்ச்சியாக 450 நாட்கள் பணிசெய்வோரை, நிரந்தரமாக்க வேண்டும் என்று சட்டம் இருந்தும், அதனை நிர்வாகம் பொருட்படுத்தவில்லை. கொத்தனார், சித்தாள்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களைவிட பொதுத்துறை நிறுவனங்களின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் கூலி மிகக் குறைவு என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

பணி நிரந்தரம்தான் இதற்கு ஒரே தீர்வு. அதற்காக நெய்வேலியில் வேலைநிறுத்தப் போராட்டங்களை மேற்கொண்டோம். போராட்டம் மூலமாகவே இந்தியாவில் வேறு எந்த பொதுத்துறை நிறு வனத்திலும் கிடைக்கப்பெறாத ஊதிய உயர்வை முதன்முதலாகப் பெற்றோம். சொல்லப்போனால், எங்களை முன்னு தாரணமாகக் கொண்டுதான் நாட்டின் இதர பொதுத்துறை நிறுவனங்களிலும் ஊதிய உயர்வு கிடைக்கப்பெற்றது.

உதாசீனப்படுத்தப்படும் தீர்ப்பு

உச்ச நீதிமன்றம், நெய்வேலித் தொழி லாளர்களைப் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், நிர்வாகம் சாக்குப்போக்குச் சொல்லி காலம் தாழ்த்திவருகிறது. ஒவ்வொரு முறையும் போராட்டங்களின் மூலமே எங்களது நியாயமான உரிமைகளைப் பெற முடிகிறது. அதனால், மீண்டுமொரு வலிமையான போராட்டத்துக்குத் தயாராகி விட்டோம்.

நாட்டுக்கே ஒளி கொடுக்கும் எங்கள் தொழிலாளர்களின் வாழ்க்கையில் ஒளி இல்லை. இந்தப் போராட்டத்துடன் நாங்கள் ஓய மாட்டோம். எல்லாக் கட்சிகளும் எங்கள் குரலுக்குச் செவிசாய்த்தே ஆக வேண்டும். நாங்கள் யார் என்று வரும் தேர்தலில் எல்லோருக்கும் தெரியும்!

- டி. ஜெயராமன், நெய்வேலி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x