Last Updated : 14 Feb, 2014 12:00 AM

 

Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

ராமஜெயம் இல்லாத திருச்சி திமுக மாநாடு- கலங்கி நிற்கிறார் கே.என்.நேரு

’தம்பி உடையான் படைக்கு அஞ்சான்’ என்பார்கள். திருச்சி திமுக மாநாட்டு பொறுப்பை ஏற்றிருக்கும் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, படைக்கு அஞ்சி நிற்கிறார்- காரணம் தம்பி ராம ஜெயம் தன்னுடன் இல்லாதது!

திருச்சியில் திமுக-வின் 10-வது மாநில மாநாட்டுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச் சரும் திருச்சி மாவட்டச் செயலாள ருமான கே.என். நேரு மாநாட்டு வரவேற்புக் குழுத் தலைவராக அறிவிக்கப்பட்டு, மாநாட்டு ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.

1996 மற்றும் 2006-ல் திருச்சி யில் திமுக-வின் 8 மற்றும் 9-வதுமாநில மாநாடுகள் நடைபெற்றன. அப்போது, நேருவின் நிஜ பிம்பமாகவும் ஃபீல்டு மார்ஷ லாகவும் செயல்பட்டு வந்தஅவரது தம்பி ராமஜெயம் மாநாட்டு ஏற்பாடுகள் அனைத்தையும் முன்னின்று கவனித்துக் கொண்டார். இதனால் தலைச்சுமை ஏதுமின்றி இருந்தார் நேரு. ஆனால், இந்த மாநாட்டில் ராமஜெயம் இல்லை. அதன் தாக்கமும் வாட்டமும் நேருவின் முகத்தில் நன்றாகவே தெரிகிறது.

இதுகுறித்து மலைக்கோட்டை பகுதி திமுக செயலாளர் எம்.மதிவாணன் ’தி இந்து’ விடம் பேசுகையில், ’’1996-ல்

கொட்டப்பட்டிலும் 2006-ல் செம்பட்டிலும் திமுக மாநாடுகள் நடைபெற்றன. மாநாடு அறிவிக் கப்பட்டதுமே, புதர் மண்டிக்கிடந்த அந்த இடங்களை எம்.டி (ராமஜெயத்தை இப்படித்தான் அழைப்பார்கள்) தனி ஆளாகவே முன்னின்று புல்டோசர் வைத்து சுத்தம் செய்து மாநாட்டுத் திடலை தயார் செய்தது இன்றைக்கும் நெஞ்சில் பசுமையாய் நிற்கிறது.

அந்த நேரங்களில் அண்ணன் (நேரு) அவ்வப்போது வந்து ஆலோசனைகளை சொல்லி விட்டுப் போவார். அண்ணனுக்காக அத்தனையையும் இழுத்துப் போட்டுச் செய்தார். இந்த மாநாட்டில் எம்.டி. இல்லை. இது அண்ணன் நேருவுக்கு மாத்திரமல்ல.. கட்சி யினர் அனைவருக்குமே பெரும் இழப்புதான்’’ என்றார்.

நேருவுக்கு வருத்தம்

மாநாட்டு வரவேற்பு வளைவுகளுக்கு மறைந்த திமுக நிர்வாகிகள் பெயர்கள் சூட்டப்பட் டுள்ளன. அதில் ஒரு வளைவுக்கு ராமஜெயத்தின் பெயரை வைக்க வேண்டுமென நேரு ஆதரவாளர்கள் கேட்டதற்கு தலைமையிடமிருந்து சரியான பதில் இல்லையாம். இதில்கூட நேருவுக்கு சற்று வருத்தம்தான் என்கின்றனர். இதைப் புரிந்து கொண்டுதான், மாநாட்டு திடலின் முகப்பில் 90 அடி உயர கொடிக்கம்பம் நடப்பட்டு அதனடியில் ராமஜெயத் தின் உருவம் பொறிக்கப்பட்ட கல்வெட்டும் அமைக்கப்பட் டுள்ளது.

மாநாட்டு செலவு ரூ.13 கோடி

மாநாட்டிற்கு இரண்டு நாட்களுக்கு முன்புவரை, மாநாட்டுச் செலவுகள் ரூ.13 கோடியை தாண்டிவிட்டதாம். மாநாட்டில் இரண்டு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மொத்தமே பத்து கோடி மட்டுமே வசூலானதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட சிலர் நிதி கொடுக்காமல் ஒதுங்கிக் கொண்டதாகவும் அவர்களின் பெயர் பட்டியலை தலைமையிடம் கொடுக்கும் திட்டத்தில் நேரு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x