Published : 31 Jan 2014 12:00 AM
Last Updated : 31 Jan 2014 12:00 AM
ஒரு மருத்துவ நண்பரையும் அவருடைய மனைவியையும் சமீபத்தில் சந்தித்தேன். பாலி தீவுக்குச் சென்று வந்ததாகவும் செலவை ஒரு மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்கள். “இப்போதெல்லாம் இதுதானே வழக்கம்?” என்று அந்த மருத்துவர் உணர்ச்சி ஏதுமில்லாமல் தெரிவித்தார். “அந்த நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்த நிறுவனம் இப்படி மருத்துவர் குடும்பங்களைத் தேர்ந்தெடுத்து வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா அனுப்பிவைக்கிறது” என்றார். அந்த நிறுவனத்தின் பெயர் என்ன என்று நான் கேட்கவில்லை. ஆனால், எதிர்காலத்தில் ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன்’ நிறுவனம் இப்படிப்பட்ட ஊக்குவிப்புகளை வழங்காது என்று எதிர்பார்க்கலாம்.
தங்களுடைய நிறுவனங்களின் மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைக்க வேண்டும் என்பதற்காக இத்தகைய ஊக்குவிப்புகளை நிறுத்திவிடப்போவதாக அது அறிவித்திருக்கிறது. இந்தத் துறையிலேயே மிகப் பெரிய நிறுவனம் ஒன்றிடமிருந்து இப்படியோர் எண்ணம் வெளிப்பட்டிருப்பதை உண்மையிலேயே பாராட்ட வேண்டும். மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களுடைய தயாரிப்புகளைச் சந்தைப்படுத்தும் ஆர்வத்தில் தொழில் தர்மத்துக்கு மீறிய வகையில் செயல்படுகின்றன என்று பல்வேறு அரசுகளும் நெறியாளர்களும் கூறிவரும் நிலையில் இந்தச் செய்தி வரவேற்கத் தக்கது.
தங்களுடைய மருந்துகளையே பரிந்துரைக்குமாறு (சட்டம் அனுமதிக்காத வழிகளில்) மருத்துவர்களைத் தூண்டியது, மருந்துகளைச் சாப்பிடுவதற்கு முன்னர் நோயாளி கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சங்களைத் தெரிவிக்காமல் விட்டது, விலை அறிக்கையில் தவறான பட்டியல் வரச் செய்தது ஆகிய குற்றங்களுக்காக அமெரிக்க அரசுக்கு கடந்த ஆண்டு சுமார் ரூ. 1,800 கோடியை அபராதமாகச் செலுத்தியது ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன்’ நிறுவனம்.
கடந்த ஐந்து ஆண்டுகளில், சர்வதேச அளவில் முன்னணியில் உள்ள மருந்து நிறுவனங்களான ‘கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஃபைசர்’, ‘ஜான்சன் அண்ட் ஜான்சன்’, ‘அஸ்ட்ராஜெனகா’, ‘மெர்க்’, ‘எலி லில்லி அண்ட் அல்லர்ஜன்’ போன்றவை 1,300 கோடி அமெரிக்க டாலர்களை இப்படி அபராதமாகச் செலுத்தியுள்ளன. தங்களுடைய நிறுவன மருந்துகளைத் தவறான வழிகளில் சந்தைப்படுத்த முற்பட்டது, டாக்டர்களுக்கு லஞ்சம் கொடுத்து விற்பனையைக் கூட்ட முயற்சித்தது என்ற குற்றச்சாட்டுகள் இவற்றின் மீது கூறப்பட்டன.
இந்தியாவில் என்ன நிலை?
மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையிலான இந்த மறைமுகக் கூட்டுகுறித்துப் பல ஆண்டுகளாக இங்கே விவாதம் நடைபெற்றுவருகிறது. ‘கட்ஸ் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பு 1995-ல் மேற்கு வங்கம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மருத்துவர்கள் எழுதித்தந்த 2,000-க்கும் மேற்பட்ட பரிந்துரைச் சீட்டுகளைத் திரட்டி ஆராய்ந்தது. நோயாளிகளுக்கு அந்தச் சமயத்தில் பலன் அளிக்காத மருந்துகள், உடல் பலம் பெறுவதற்கான டானிக்குகள், உடல் நிலையை மீண்டும் பழையபடிக்குக் கொண்டுவருவதற்கான சத்து மருந்துகள், உடலுக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் மருந்துகள், வைட்டமின் கூட்டு மாத்திரைகள் என்று தேவையில்லாமலே பரிந்துரைக்கப்பட்டிருந்தன.
2010-ல் அசாமிலும் சத்தீஸ்கரிலும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் வேறுவிதமான ஆய்வுகளை அதே நிறுவனம் மேற்கொண்டது. நுகர்வோரில் 20% பேர் மட்டுமே அரசுப் பொது மருத்துவமனைகளிலிருந்து மருந்து – மாத்திரைகளைப் பெற்றனர். இந்த மருத்துவமனைகளில் பணிபுரிந்த மருத்துவர்களே, தனியார் மருந்துக் கடைகளில் மட்டுமே விற்கப்படும் விலையுயர்ந்த மருந்து-மாத்திரைகளை அரசு மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்திருந்தனர். அவற்றை வெளியேதான் வாங்க முடியும்.
மருந்து – மாத்திரை ஊக்குவிப்பு நடவடிக்கைகளை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். தங்களுடைய நிறுவனம் தயாரிக்கும் மருந்து, மாத்திரைகளில் உள்ள மருந்துப் பொருள்கள் என்ன, அவை எந்தெந்த நோய்களுக்குப் பலன் தரும் என்ற தகவலையும் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை வர்த்தகப் பெயருடனும் நினைவுபடுத்துவது முதல் வகை. இதில் தவறும் ஆபத்தும் இல்லை. அடுத்தது, தங்களுடைய மருந்துகளையே பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்திச் சிறு பரிசுகளையும் ஊக்குவிப்புகளையும் தருவது. அடுத்தது, ரொக்கமாகவோ, வெளிநாட்டு சுற்றுலாப் பயணம் போலவோ அதிக அளவில் பணப் பயன்களை அளித்துத் தங்களுடைய விற்பனையைக் கூட்டுவது.
மருந்து விற்பனை நிறுவனங்களிடமிருந்து பரிசுகளையோ ரொக்கத்தையோ பெறுவது சட்டப்படி குற்றம் என்பதே இந்திய நிலை என்றாலும் இந்தச் சட்டப்படி மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படுவது அபூர்வத்திலும் அபூர்வம். அடுத்தபடியாக, மருத்துவர்களுக்கு பணப்பயன் தரும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்க நேரடிக் கட்டுப்பாடு ஏதும் அரசுக்குக் கிடையாது. அரசின் மருந்தியல் துறை கடந்த ஆண்டு வழிகாட்டு நெறிகளை வகுத்தது. ஆனால், அவை தனியார் மருந்து நிறுவனங்கள் சுயமாகக் கடைப்பிடிப்பதற்கானவையே தவிர சட்டப்பூர்வமானவை அல்ல.
சுயக் கட்டுப்பாடு
மத்திய மருந்து தரப்படுத்தல் கட்டுப்பாட்டு நிறுவனம் (சி.டி.எஸ்.சி.ஓ.) மருந்துகளுக்கு ஒப்புதல் அளிக்கும் நடவடிக்கைகளில் கடுமையான முறைகேடுகளில் ஈடுபட்டது என்று சுகாதாரம், குடும்ப நலனுக்காக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக்குழுவே கூறியுள்ளது. மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறாமலும், பல்வேறு நோயாளிகளுக்கு மருந்துகளைக் கொடுத்து அவற்றின் விளைவுகளைப் பதிவுசெய்து ஆய்வு செய்யாமலும் மருந்துகளுக்கு ஒப்புதல் தந்ததாக சி.டி.எஸ்.சி.ஓ. மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. யார் கட்டுப்படுத்த வேண்டுமோ அவர்களே தங்களுடைய கடமையைச் செய்யவில்லை என்பதே இதன் சாரம்.
இப்போதைக்கு இவற்றைத் தவிர்க்க ஒரே வழி, விற்பனைக்காக முறைகேடுகளில் ஈடுபடுவதாக மருந்து நிறுவனங்கள்மீது குற்றச்சாட்டுகள் எழுவதால் அந்தந்த நிறுவனங்களே சுயக்கட்டுப்பாடுகள் மூலம் தங்களுடைய நடவடிக்கைகளைச் சட்டத்துக்குள்பட்டுத் திருத்திக்கொள்வதுதான்.
1980-களில், “சவூதி அரேபியாவில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டுகள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்” என்று அரசு அறிவித்த உடனேயே, தேவையற்ற மருந்துகளைப் பரிந்துரைப்பது 40% அளவுக்குக் குறைந்துவிட்டனவாம்!
© பிசினஸ் லைன், தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT