Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
எனக்கு சம்பளம் பாக்கியிருக்கிறது, கொடுங்கள் என்று எப்போது உன்னுடைய சைன்யத்தைச் சேர்ந்த வீரன் உன்னிடம் கேட்கிறானோ அன்றைக்குத்தான் உன்னுடைய சாம்ராஜ்யத்தின் துக்க நாள்; மன்னனாகப் பதவியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை நீ இழந்துவிட்டாய் என்பதை உணர்ந்துகொள் சந்திர குப்தா என்று சக்ரவர்த்தி சந்திரகுப்த மௌரியரிடம் கூறினார் அவருடைய குரு கௌடில்யர்.
அந்த அறிவுரை இன்றைக்கும் பொருந்தும். சுதந்திர இந்தியாவில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஜவான்கள் தங்களுக்கான ஊதிய நிலுவையைக் கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதுடன், ஆண்டுக் கணக்கில் மத்திய அரசு அவர்களுடைய கோரிக்கைகளை அலட்சியப்படுத்திக்கொண்டே வருகிறது என்பதுதான் துயரம்.
நம்முடைய ராணுவத்தின் முப்படைகளையும் சேர்ந்த வீரர்களும் துணை நிலை ராணுவப் படை வீரர்களும் தங்களுக்கான ஊதிய நிலுவையைத் தரக் கோரி தொடர்ந்து நீதிமன்றங்களுக்குப் படை எடுத்து, தங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புகளைப் பெற்ற நிலையிலும், அரசு அவற்றை வழங்க மறுப்பதுடன் தொடர்ந்து மேல் முறையீடு செய்து அவர்களுக்கு எந்தவித நியாயமும் கிடைத்துவிடாமல் பார்த்துக்கொள்ளும் வினோதமான நிலையும் நிலவுகிறது.
தனி ஊதியக் குழுவின் துர்முடிவு
1973-ம் ஆண்டுவரை ராணுவ வீரர்களுக்கான ஊதியங்களை நிர்ணயிக்கத் தனி ஊதியக் குழு செயல்பட்டுவந்தது. மத்திய அரசு ஊழியர்களுக்கான நாலாவது ஊதியக் குழு நியமிக்கப்பட்டபோது, ராணுவ வீரர்களுக்கான ஊதியக் குழு கலைக்கப்பட்டது. அதற்கும் முன் மத்திய அரசு ஊழியர்களைவிட ராணுவ வீரர்கள் அதிக ஊதியம் பெற்று வந்தனர். அரசு ஊழியர்களுக்கும் ராணுவ ஊழியர்களுக்கும் சம விகிதத்தில் ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று நான்காவது ஊதியக் குழு பரிந்துரையையே ராணுவ வீரர்களுக்கும் ஏற்பது என்று மத்திய அரசு முடிவுசெய்தது.
அதற்குப் பிறகுதான் ராணுவ வீரர்களின் கோரிக்கைகளை அலட்சியம் செய்வது, அவர்களுடைய துயரங்கள்குறித்துப் பாராமுகமாக இருப்பது, அவர்களுக்குரிய ஊதிய விகிதங்களைத் தராமல் வேண்டும் என்றே குறைப்பது போன்ற விஷமங்கள் தொடங்கின. அதிலிருந்து ராணுவ வீரர்களுக்கு மனக் கவலையும் அதிருப்தியும் வளர ஆரம்பித்தன.
நான்காவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அரசால் ஏற்கப்பட்ட பிறகு, அதை அமல்படுத்துவதில்தான் அதிகாரிகள் தங்களுடைய கைவரிசைகளைக் காட்ட ஆரம்பித்தனர். அந்தப் பரிந்துரைகளின் முழுப் பலன்கள் ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத வகையில் அவர்களுக்கு ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன.
கடும் மழையிலும் குளிரிலும் வெயிலிலும் பனியிலும் இரவு பகலாகப் பணிபுரியும் ஜவான்களுக்கு ஊதியம் சற்றே அதிகமாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் நான்காவது ஊதியக் குழு அளித்த பரிந்துரை ஜவான்கள், அதிகாரிகள் ஆகியோருடைய பதவி நிலை (ரேங்க்) அடிப்படையிலானதாக இருந்தது. அடிப்படை ஊதியம், படிகள் போக பதவி நிலை அடிப்படையில் ரூ.200 முதல் ரூ.1,200 வரையில் கூடுதலாக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், அமல் செய்யும்போது பதவி நிலை அடிப்படையில் எவ்வளவு நிர்ணயிக்கப்பட்டதோ அந்தத் தொகை அடிப்படை ஊதியத்திலிருந்து கழித்துக்கொள்ளப்பட்டு புதிய ஊதியம் கணக்கிடப்பட்டது.
இந்த விஷமத்தை எந்த ராணுவ ஜவானும் அதிகாரியும் முதலில் உணரவில்லை. பதவியிலிருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஏ.கே. தனபாலன் கேரள உயர் நீதிமன்றத்தில் 1996-97-ல் இதைச் சுட்டிக்காட்டி வழக்கு தொடுத்து, அதில் வெற்றி பெற்ற பிறகே ராணுவ வீரர்களுக்குத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டது தெரிந்தது. இந்தத் தகவல் காட்டுத் தீயாகப் பரவியதும் நாடு முழுக்க ஆங்காங்கே ஏராளமான அதிகாரிகள் நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்தனர். மத்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இந்த மனுக்கள் எல்லாம் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டன. இந்த விஷமம் கண்டுபிடிக்கப்படவே பல ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையும் தாமதப்பட்டது. இறுதியாக 2010 மார்ச் 8-ம் தேதி உச்ச நீதிமன்றம், ராணுவ வீரர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது. ராணுவத்தில் அப்போது பணிபுரிந்த, ஓய்வுபெற்ற சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஊதிய நிலுவையை 6% வட்டியுடன் வழங்குமாறு அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டது.
இந்த ஆணையை உச்ச நீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் அல்லது திருத்த வேண்டும் என்று அரசு மீண்டும் மனு தாக்கல் செய்தது. 2010 முதல் 2011 வரை ஏராளமானோர் தங்களுடைய ஊதிய விகித முரண்பாட்டை நீக்குமாறு கோரி நீதிமன்றங்களை நாடத் தொடங்கினர். இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசின் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறினார்.
தரைப்படையின் முன்னாள் துணைத் தலைமை தளபதி லெப். ஜெனரல் (ஓய்வு) ராஜ் கடியான், அப்போதைய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தை 2012 ஜூன் 7-ம் தேதி இது தொடர்பாகச் சந்தித்து, இந்த விவகாரத்தில் தலையிடுமாறு கேட்டுக்கொண்டார். இந்திய முன்னாள் படைவீரர் இயக்கம் (ஐ.இ.எஸ்.எம்.) என்ற அமைப்புக்கு இப்போது அவர் தலைவர்.
ராணுவ வீரர்களின் கோரிக்கை நியாயமானது, அரசு ஊதிய உயர்வையும் நிலுவையையும் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் 2012 செப்டம்பர் 4-ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்தக் ‘கூடுதல் செல'வைத் தங்களால் ஏற்க முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது கூடுதல் செலவு அல்ல, ராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் நியாயமாகச் சேரவேண்டிய ஊதியம். அதை மோசடி செய்து குறைத்துக் கொடுத்தது நீங்கள்தான் என்று உச்ச நீதிமன்றம் காட்டமாகக் கூறியது. அப்படியானால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு மட்டும் இந்த ஊதிய உயர்வும் நிலுவையும் தரப்பட வேண்டும் என்று ஆணையைத் திருத்துங்கள் என்று கெஞ்சியது. வழக்கு தொடுத்தவர்கள், தொடுக்காதவர்கள் என்று எல்லா ராணுவ வீரர்களுக்குமே உரியது இந்த ஊதிய உயர்வும் நிலுவையும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அரசு தொடர்ந்து கெஞ்சவே, 2006-ம் ஆண்டு வரையிலான ஊதிய நிலுவைக்குத் தர வேண்டிய வட்டியை மட்டும் ரத்து செய்தது.
என்னவானது நிலுவை?
உச்ச நீதிமன்றத்தின் இந்த ஆணைப்படி 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவான்கள், அதிகாரிகளுக்கு இந்த நிலுவை தரப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இன்னமும் தரப்படவில்லை. காரணம், 1.1.1986-ல் பதவியில் இருந்தவர்களுக்கு மட்டுமே இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்று அரசு சுற்றறிக்கை வெளியிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றமோ, 1.1.1986 முதல் தனது ஆணை அமல்படுத்தப்பட வேண்டும் என்றுதான் தீர்ப்பில் கூறியிருந்தது. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக, வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது.
இந்த மாதிரியான ஊதிய விகித முரண்பாடுகள் வராமலிருக்க, ஊதியக் குழுவில் தங்களுடைய தரப்பிலிருந்தும் ஒருவரைப் பிரதிநிதியாக நியமிக்க வேண்டும் என்று ராணுவம் கேட்கிறது. ஆனால், அரசு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இப்போது ஏழாவது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதிலும் ராணுவத் தரப்புக்கு பிரதிநிதிகளை நியமிக்க அரசு மறுத்துவிட்டது. மீண்டும் ஊதிய விகிதத்தை உயர்த்துவதில் விஷமங்கள் நடைபெறும், அதை எதிர்த்து ராணுவ வீரர்கள் நீதிமன்றத்துக்குச் செல்வார்கள், நீதிமன்றம் நியாயப்படி தீர்ப்பு வழங்கும், அதிகாரிகள் அந்தத் தீர்ப்புக்கு குயுக்தியாக விளக்கம் அளித்து பணப்பயன் அதிகம் கிட்டாமல் ராணுவ வீரர்களை அலைக்கழிப்பார்கள். இந்தக் கதை தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
ஓய்வூதியத்திலும் இதே கதை
ஊதியம் தரும்போதுதான் இப்படி வயிற்றில் அடிக்கிறார்கள் என்றால், ஓய்வூதியம் வழங்கும்போதும் இதே வஞ்சனை தொடர்கிறது. ராணுவத்தில் பணிபுரியும் ஜவான்களும் அதிகாரிகளும் சிவில் சர்வீஸ் ஊழியர்களைப் போல 58 வயது அல்லது 60 வயது வரை வேலைசெய்துவிட்டு ஓய்வு பெறுவதில்லை. இளமைக்காலம் முடிந்து முதுமை தொடங்கும் நிலையிலேயே பணியிலிருந்து ஓய்வு பெற நேர்கிறது. அப்படி ராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவோர் தங்களுடைய தகுதிக்கேற்ற வேலையை மீண்டும் தேடுவதே பெரும் சிரமமாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளும் அரசுத் துறை நிறுவனங்களும் முன்னாள் படை வீரர்களுக்கு ஒதுக்கும் வேலைவாய்ப்புகளே குறைவு. அவற்றுக்கும் முறையாக ஆள்களை நியமிப்பதில்லை.
இந்த நிலையில், வேலை கிடைத்துச் செல்வோருக்கு, முழு ஊதியம் வழங்காமல் அவர்களுடைய ராணுவ ஓய்வூதியத் தொகையைக் கழித்துக்கொண்டு குறைந்த ஊதியமே வழங்கிய கொடுமையும் நடந்தது. 1986-ல் நான்காவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்குப் பிறகு இந்தக் கொடுமை உச்சத்தை அடைந்தது. அதிகரிக்கப்பட்ட ஓய்வூதியத் தொகையை ஊதியத்தில் பிடித்துக்கொண்டு எஞ்சியதை ஊதியமாக வழங்கினார்கள். வாசுதேவன் பிள்ளை என்பவரும் மற்றவர்களும் இந்த அநீதியை எதிர்த்து மீண்டும் 1994 டிசம்பர் 8-ம் தேதி உச்ச நீதிமன்றப் படியேறினார்கள்.
செய்யும் வேலைக்குத்தான் சம்பளம் என்னும்போது முழு வேலையை வாங்கிக்கொண்டு, முன்னர் செய்த வேலைக்காகப் பெறும் ஓய்வூதியத்தைக் கழித்துக்கொள்வது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று உச்ச நீதிமன்றம் கடுமையாகச் சாடி 1.1.1986-ல் தீர்ப்பளித்தது. மத்திய அரசு இந்தத் தீர்ப்பையும் எதிர்த்து சிறப்பு விசாரணை கோரி மேல் முறையீடு செய்தது. ராணுவ வீரர்களுக்கான நிலுவையைக் கொடுத்துவிட்டு, மற்ற வேலையைப் பாருங்கள் என்று உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் கூறிவிட்டு, அந்த மனுவை நிராகரித்தது. இதற்குப் பிறகே, மறுவேலைவாய்ப்பு பெற்ற ராணுவ ஜவான்களின் ஊதியத்திலிருந்து ஓய்வூதியத் தொகையைக் கழிப்பதை அரசு நிறுத்திவைத்தது. ஆனால், ஐந்தாவது ஊதியக் குழுப் பரிந்துரையை அமல்செய்யும்போது மீண்டும் இதே திருவிளையாடலைச் செய்தது. ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஜெய் சிங், லேக் ராம் ஆகியோர் இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடினர்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் வேறு வேலைக்குச் செல்லும்போது அவர்களுடைய ஓய்வூதியத் தொகையை அவர்களுடைய ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்வது சட்ட விரோதச் செயல், அதற்குச் சட்ட அனுமதியோ, அதிகாரமோ இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் முகுந்தகம் சர்மா, கீதா மிட்டல் ஆகியோர் 2004 ஆகஸ்ட் 9-ல் திட்டவட்டமாகத் தீர்ப்பளித்தனர். அத்துடன் இது சட்டப்படியான இறுதித் தீர்ப்பு என்பதால் இனி எதிர்காலத்தில்வரும் இதே போன்ற வழக்குகளுக்கும் இந்தத் தீர்ப்பு பொருந்தும் என்றும் அறுதியிட்டுக்கூறினர். இவ்வளவு தெள்ளத் தெளிவாக உயர் நீதிமன்றம் கூறிய பிறகும் அதிகாரிகள் தொடர்ந்து, ஊதியத்திலிருந்து ஓய்வூதியத் தொகையைக் கழித்துக்கொண்டே வந்தனர். கன்வல் சிங் என்பவர் மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு தொடுத்தார். நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கௌல், மூல்சந்த் கர்க் ஆகியோர் மனுவை விசாரித்து 2008 மே 23-ல் தீர்ப்பளித்தனர். சட்டவிரோதமாக கழித்துக்கொண்ட தொகையை 9% வட்டி சேர்த்துத் தருமாறு உத்தரவிட்டனர்.
நீதிமன்றங்கள் தொடர்ந்து உத்தரவிட்டபோதும் அதை மதிக்காமல் அரசு தொடர்ந்து இப்படி அநீதியாகவே செயல்படுவது ஆதிக்க மனோபாவத்தைக் காட்டுகிறது, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று நீதிபதிகள் சாடினர். இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது, தேவையற்றது, நீதிமன்றத் தீர்ப்புகளையே அவமதிப்பது என்றும் கூறியிருந்தனர்.
இந்தத் தீர்ப்பை எதிர்த்தும்கூட சிறப்பு அனுமதி கோரும் (எஸ்.எல்.பி.) மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் 2009 நவம்பர் 7-ம் தேதி இந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. இதற்குப் பிறகும் மத்திய அரசு, முன்னாள் படை வீரர்களின் ஊதியங்களிலிருந்து ஓய்வூதியத் தொகையைக் கழித்துக்கொள்வதைத் தொடர்ந்தது.
இதற்கிடையே வேறு சில ஓய்வுபெற்ற படை வீரர்கள் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்திலும் (சி.ஏ.டி.) சென்னை உயர் நீதிமன்றத்திலும் மனுக்களைத் தாக்கல் செய்தனர். அவையும் அவர்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகளை வழங்கின. நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் (சி.பி.டி.டி.), வருமான வரி ஆகிய துறைகள் நீதிமன்ற ஆணைகளை மதித்து, பிடித்தம் செய்த தொகைகளை சம்பந்தப்பட்டவர்களுக்கு மீண்டும் வழங்கின. ஆறாவது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டபோதும் இப்படி ஊதியத்திலிருந்து ஓய்வூதியத் தொகை கழித்துக்கொள்ளப்படுவது தொடர்ந்தது. ஓய்வுபெற்ற மேஜர் யு.சி. நாயக்கும் வேறு சிலரும் மீண்டும் டெல்லி நீதிமன்றத்தை நாடினர். 2004 ஆகஸ்ட் 9-ல் இதே போன்ற வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை அரசு மதிக்காமல் நீதிமன்ற அவமதிப்பு செய்துவருகிறது என்று மனுவில் சுட்டிக்காட்டினர். அந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டிருக்கிறது. வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு நாள் குறிக்கப்பட்டிருக்கிறது.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளும் ஆணைகளும் மதித்து நடக்கப்பட வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சகம் அடிக்கடி அறிவுறுத்தினாலும் மத்திய அரசின் பணியாளர் – பயிற்சித் துறை அதைக் காதில்போட்டுக்கொள்வதே இல்லை. இது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலிலிருந்து தெரிகிறது.
மத்திய அரசின் இரட்டை நிலை
ராணுவ வீரர்களையும் மத்திய அரசின் ஊழியர்களையும் வெவ்வேறு கண்ணோட்டத்துடன் நடத்தும் அரசின் இரட்டை நிலை இதில் அம்பலமாகிறது. 60 வயதுக்கு மேல் குடிமைப் பணிகளில் ஊழியர்களை வேலையில் வைத்திருக்கக்கூடாது என்ற அறிவுறுத்தலைக் காற்றில் பறக்கவிட்டு, தனக்கு வேண்டிய அரசு ஊழியர்களுக்கு வேலை நீட்டிப்பு தருகிறது, அத்துடன் சிறப்பு ஊதியமும் தருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அந்த ஊதியத்திலிருந்து அவர்களுடைய ஓய்வூதியம் கழித்துக்கொள்ளப்படுவதே இல்லை.
ராணுவ ஜவான்கள், அதிகாரிகளுக்கு அரசு வேலை கொடுத்தாலும் 60 வயதுக்குப் பிறகு அவர்களை வேலையில் வைத்துக்கொள்வதில்லை. சிறப்பு ஊதியமாக எதுவும் வழங்கப்படுவதில்லை. அந்த ஊதியத்திலும் ஓய்வூதியம் கழித்துக்கொள்ளப்படுகிறது. ராணுவத்தினர் தங்களுடைய ஊதிய முரண்பாட்டைச் சீர் செய்ய வழக்கு தொடுத்தால் எதிர்வழக்காடுவது, அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்தால் மேல் முறையீடு செய்வது, அந்த மேல் முறையீட்டிலும் அவர்களுக்குச் சாதகமாக முடிவு வந்தாலும் அதை அமல்படுத்தாமல் கிடப்பில் போடும் இந்த விரோத மனப்பான்மை வியப்பாகவே இருக்கிறது.
போர்க் களத்திலோ பயிற்சிக் களத்திலோ ஊனம் அடையும் ராணுவ வீரர்கள் தங்களுடைய ஊதியம், ஓய்வூதியம் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில்தான் தொடர வேண்டும் என்று முன்னாள் படை வீரர்களுக்கான துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. இந்தத் துறை பாதுகாப்பு அமைச்சகத்துக்கு உள்பட்டது. ஏதோ ஒரு சிற்றூரில் இருக்கும் ஊனமுற்ற ஜவான், தன்னுடைய ஊதிய முரண்பாட்டைக் களைவதற்காக உச்ச நீதிமன்றத்துக்குத்தான் வர வேண்டும் என்றால் நியாயமா என்று கேட்ட பிறகு, இந்த சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. அங்கே, இங்கே என்று அலையாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்துக்கே வந்துவிடட்டுமே என்றுதான் இப்படி சுற்றறிக்கை அனுப்பினோம் என்று பதில் வந்தது. அப்பா, எவ்வளவு அக்கறை முன்னாள் படை வீரர்கள் மீது. நாட்டைப் பாதுகாப்பவர்களைப் பலவீனப்படுத்த வெளியிலிருந்து ஆட்கள் வர வேண்டியதில்லை; நம்முடைய மோசமான போக்கே போதும்!
ஆட்கள் தேவை!
கடந்த சில ஆண்டுகளாகவே ராணுவத்தில் சேர இளைஞர்களும் இளம் பெண்களும் ஆர்வம் காட்டாத போக்கு தொடர்கிறது. இதனால் தகுதியானவர்கள் கிடைக்காமல் ஆள் பற்றாக்குறை நிலவுகிறது. அதிகாரிகள் நிலையில் சுமார் 10,000 பதவிகளும் ஜவான்கள் நிலையில் 32,431 பதவிகளும் காலியாக இருக்கின்றன.
கடந்த மூன்றாண்டுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜவான்கள் தங்களுடைய பதவிக்காலம் முடிவதற்கும் முன்னதாகவே பதவியிலிருந்து ஓய்வுபெற விரும்புவதாகக் கூறி விலகிவிட்டனர்.
ஒவ்வோர் ஆண்டும், மன அழுத்தம் காரணமாக ராணுவ அதிகாரிகள், ஜவான்கள் சுமார் 100 பேர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி 2010-ல் மக்களவையில் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருந்தார்.
2010-ல் தரைப்படையில் அதிகாரிகள் பற்றாக்குறை எண்ணிக்கை 12,510 ஆக இருந்தது. 2012 ஜூலையில் அது 10,100 ஆகக் குறைந்தது.
வாக்குரிமையில் பாரபட்சம்
இந்திய அரசியல் சட்டம், 18 வயதான அனைவரும் வாக்களிக்கலாம் என்ற உரிமையை அளிக்கிறது. ஆனால், இந்த உரிமை இந்திய ராணுவத்திலும் துணை நிலை ராணுவப் படைகளிலும் பணிபுரியும் சுமார் 23 லட்சம் பேருக்கு மறுக்கப்படுகிறது.
ராணுவ வீரர்கள் எந்த ஊரில் பணிசெய்யப் பணிக்கப்படுகின்றனரோ அந்த ஊரில் வாக்காளராகப் பதிந்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. அஞ்சல் வாக்கு, பதிலி வாக்கு முறைகளும் பயனுள்ளதாக இல்லை. ராணுவ வீரர்கள் தங்களுடைய குடும்பத்துடன் மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து ஒரே இடத்தில் பணிபுரிந்தால் அவர்கள் அங்கு தங்களை வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொள்ளலாம் என்று மத்திய அரசின் விதி கூறுகிறது. எந்த ராணுவ வீரரும் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவது நிச்சயம் என்று கூறிவிட முடியாது. அதுவும் குடும்பத்துடன் தங்கி பணிபுரிவது மிக அபூர்வமானது.
சாதாரண குடிமக்களுக்கு இப்படியொரு நிபந்தனை இல்லை. அவர்கள் ஓர் ஊரில் தொடர்ந்து ஆறு மாதங்கள் தங்கியிருந்தால் வாக்காளர் பட்டியலில் தங்களுடைய பெயரைச் சேர்த்துக்கொள்ளலாம்.
1969 வரை ராணுவ வீரர்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களில் வாக்காளர்களாகப் பதிவுசெய்துகொள்ளும் உரிமை அளிக்கப்பட்டிருந்தது. நாகாலாந்தில் வோகா என்ற தொகுதியில் போட்டியிட்டு தோற்ற ஒரு வேட்பாளர், ‘அசாம் ரைஃபிள்ஸ்' படைப் பிரிவைச் சேர்ந்தவர்கள் தனக்கு எதிராக வாக்களித்ததால் தான் தோற்றுவிட்டதாகவும், இந்தப் பகுதியில் வசிக்காதவர்களுக்கு வாக்குரிமை தரக் கூடாது என்றும் குவாஹாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உயர் நீதிமன்றம் அவருடைய மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது. 1971-ல் இதே வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது. உச்ச நீதிமன்றமும் மனுவைத் தள்ளுபடி செய்தது. தேர்தல் ஆணையமும் ராணுவ வீரர்களின் வாக்குரிமைக்கு ஆதரவாகவே நீதிமன்றத்தில் வாதாடியது. ஆனால், மத்திய அரசு 1972-ல் புதிய உத்தரவைப் பிறப்பித்தது. ராணுவ வீரர்கள் அஞ்சல் வாக்குகளையும் பதிலி வாக்காளர் முறையையும் பின்பற்றி தங்களுடைய வாக்குரிமையைப் பயன்படுத்தலாம் என்றது. குடும்பத்துடன் எந்த ஊரில் மூன்றாண்டுகள் தொடர்ந்து வசிக்கிறார்களோ அந்த ஊரில் பதிந்துகொள்ளலாம் என்று அந்த ஆணையில் கூறியது. அதிலிருந்துதான் வாக்குரிமை இழக்கப்பட்டது.
© ஃபிரண்ட் லைன் தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT