Published : 06 Mar 2014 10:09 AM
Last Updated : 06 Mar 2014 10:09 AM
ஆட்சியின் இறுதிக்கட்டத்தில் மன்மோகன் சிங் அரசு கொண்டுவரும் அவசரச் சட்டங்கள் பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கின்றன. எங்களைக் கேட்டால், இதை ஆக்கபூர்வமாகவே பார்க்கலாம் என்போம். ஏன்?
இரு தரப்பு வாதங்கள்
நம்முடைய 15-வது மக்களவையின் செயல்பாட்டைத் திரும்பிப் பாருங்கள். மக்களுடைய பிரச்சினைகளை விவாதிப்பதற்குப் பதிலாக பெரும்பாலான நேரங்களை அமளி செய்வதற்கும் ஒத்திவைப்பதற்குமே அரசியல் கட்சிகள் பயன்படுத்திக்கொண்டன.
இந்த அமளிகளில் எதிர்க்கட்சிகளுக்கு எந்த அளவுக்குப் பங்கு உண்டோ அதே அளவுக்கு ஆளுங்கூட்டணிக்கும் பங்கு இருக்கிறது. இந்த நிலையில், “இந்த மக்களவையின் பதவிக்காலம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. பொதுத்தேர்தலுக்குப் பிறகு புதிய அரசு பதவியேற்கக்கூடிய சூழல் இருப்பதால் இப்போதைய அரசு தன்னுடைய திட்டங்களை அவசரச் சட்டங்களாகக் கொண்டுவர சட்டரீதியாகவும் தார்மிக அடிப்படையிலும் உரிமை கிடையாது” என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.
அதேசமயம், “மக்களுடைய நன்மைக்காக, கருத்தொற்றுமை காணப்பட்ட சில மசோதாக்களையாவது அவசரச் சட்டங்கள் மூலம் அமலுக்குக் கொண்டுவர வேண்டும்” என்று மக்கள் இயக்கங்கள் வலியுறுத்துகின்றன.
குறுக்குவழி
அவசரச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் ஒரு முக்கியக் காரணத்துக்காக எதிர்க்கிறார்கள். நாடாளுமன்றம் ஏற்கத் தயங்கும் அல்லது நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ள மசோதாக்கள் தொடர்பாக அரசு அவசரச் சட்டத்தை இயற்றிவிடக்கூடும் என்ற அச்சம் காரணமாகவே எதிர்க்கிறார்கள்.
அவசரச் சட்டம் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் ‘குறுக்கு வழி' என்று சிலர் சாடுகின்றனர். நாங்களுமே, நாடாளுமன்றத்தைப் புறக்கணிக்கும் உத்தியாகவே அதைக் கருதுகிறோம். ஆனால், நாங்கள் வலியுறுத்தும் விஷயங்களில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படுவதை வரவேற்கிறோம்.
காரணம், ஏற்கெனவே விவாதிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளாலும் ஏற்கப்பட்ட மசோதாக்கள்மீது வாக்கெடுப்பு நடத்த முடியாமல் நாடாளுமன்றத்தில் அமளி நிலவியதால் அவற்றை அவசரச் சட்டமாகக் கொண்டுவருவதில் தவறில்லை.
காலாவதியான மசோதாக்கள்
நடைமுறைகளில் இதுதான் சரி என்றோ சிறந்தது என்றோ ஏதுமில்லை. சட்டத்தை மீறாமலும் அரசியல் சட்டம் அனுமதிக்கிறபடியும் எந்த நடைமுறையையும் பின்பற்றலாம். மக்களவையில் கொண்டுவரப்பட்டு, ஆனால் வாக்கெடுப்பு நடத்தப்படாத மசோதாக்கள் அந்த மக்களவையின் பதவிக்காலத்தோடு காலாவதியாகிவிடும் என்று நாடாளுமன்ற நடைமுறை விதிகள் கூறுகின்றன.
பெரும்பாலும் அனைத்துத் தரப்பாலும் கருத்தொற்றுமை அடிப்படையில் ஏற்கப்பட்ட மசோதாக்களைக் கொண்டுவர எடுத்துக்கொண்ட நேரம், மனித உழைப்பு, அதற்குச் செலவிடப்பட்ட தொகை ஆகியவற்றைக் கணக்கிட்டால் இப்படி மசோதாவைக் காலாவதியாக விடுவதால் அனைத்து வகையிலும் இழப்புகள்தான் என்பது புரியும்.
இந்த மசோதாக்களை அமலுக்குக் கொண்டுவர அவசரச் சட்டம் இயற்றப்படுவதன் மூலம் நேரம், மனித உழைப்பு, பணம் ஆகியவற்றின் விரயம் தடுக்கப்படும். அத்துடன் சமூகத்துக்கு – அதிலும் குறிப்பாக ஏழைகளுக்கு – மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இனி அடுத்த மக்களவையில் இதே மசோதாக்களைக் கொண்டுவருவதாக இருந்தால் மீண்டும் முதலிலிருந்துதான் தொடங்க வேண்டும்.
நாடாளுமன்றம் கூடாத சமயங்களில், உடனடி நடவடிக்கை தேவைப்படும் பட்சத்தில் குடியரசுத் தலைவர் அவசரச் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசியல் சட்டத்தின் 123-வது பிரிவு அனுமதிக்கிறது. நாடாளுமன்றத்தை வேண்டும் என்றே நடத்த விடாமல் தடுக்கும் போக்கு நிலவும்போது, அவசரச் சட்டம் கொண்டுவரப்படுவதில் தவறில்லை என்றே கருதுகிறோம்.
ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்கத் தேர்ந்தெடுக்கப் பட்ட மக்களவை முறையாக நடைபெறாமல், அதன் கடைசித் தொடரில் ஒத்திவைப்பே அதன் அன்றாட நிகழ்ச்சியாகிவிட்ட நிலையில்தான் அவசரச் சட்டத்தை ஆதரிக்கிறோம். மிகுந்த சர்ச்சைக்குரிய தெலங்கானா மாநிலப் பிரிப்பு மசோதாவும் வேறு சில முக்கிய மசோதாக்களும் மட்டுமே நிறைவேறின.
“உங்களிடையே கருத்தொற்றுமை உள்ள மசோதாக்களையாவது நிறைவேற்றுங்கள்” என்று மக்களுடைய உரிமைகளுக்குப் பாடுபடும் பல குழுக்களின் கூட்டணி அரசியல் கட்சித் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தது. 68 மசோதாக்கள் காலாவதியாகிவிட்டன. ஆனால், அவசரச் சட்டம் வேண்டும் என்று இவற்றில் ஒரு சில மசோதாக்களையே நாம் கேட்கிறோம்.
குறைதீர் மசோதாவின் கதி
மக்களுடைய குறைதீர் சட்ட மசோதா நிறைவேற்றப்படாததால் அரசு அலுவலகங்களையும் முகமைகளையும் நாடும் ஒவ்வொரு இந்தியனும் இன்னல்களைத் தொடர்ந்து அனுபவிக்க நேரும். இந்த மசோதா நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டிருந்தால் அல்லது அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தால் தங்களுடைய நீண்டநாள் கோரிக்கைகள் மீதான தீர்வை சாமானியர்கள் எளிதில் பெற்றிருக்க முடியும்.
உணவு, குடிநீர், சுகாதாரம், கல்வி தொடர்பான சேவைகளைப் பெற அரசு அமைப்புகளை அணுகிப் பொறுப்பான பதிலோ, நடவடிக்கையோ இன்றி அவதிப்படும் மக்களின் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கும் இந்த மசோதா.
விரும்பி அல்ல, வேறுவழியின்றி மக்களின் நன்மைக்கான மசோதாக்களை நிறைவேற்றுவதுதான் நாடாளுமன்றத்தின் கடமை. மக்கள் அமைப்புகள் இந்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதித்து, நிறைவேற்றி, சட்டமாக்க வேண்டும் என்றுதான் கோரின. அவசரச் சட்டம் கொண்டுவாருங்கள் என்று அவை கேட்கவில்லை.
நாடாளுமன்றம் சரியாக நடக்கவில்லை என்பதால், அவசரச் சட்டமாகவாவது நிறைவேற்றுங்கள் என்று வேறு வழியில்லாமல்தான் கேட்கின்றனவே தவிர விருப்பப்பட்டுக் கேட்கவில்லை.
நிரந்தரமல்ல
இந்த மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்றம் ஏன் தவறியது? கடைசித் தொடரின்போது எல்லாக் கட்சிகளும் அணுகப்பட்டன. எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களுமே “இவையெல்லாம் உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டியவை, நாங்கள் ஆதரவு தருகிறோம்” என்றே வாக்குறுதி தந்தனர். அத்துடன், பிற கட்சிகள்தான் ஒத்துழைக்க மறுக்கின்றன என்றும் குற்றஞ்சாட்டினர். குறுகிய அரசியல் நோக்கமும், யார் பெரியவர் என்ற அகம்பாவமும்தான் மக்கள் நலனுக்கான இந்த மசோதாக்கள் நிறைவேறத் தடையாக இருந்தன.
நாளாக நாளாக மக்கள் குழுக்கள் பொறுமையிழந்தன. ஆண்டுக் கணக்கில் இந்த மசோதாக்களுக்காக நடந்த முயற்சிகளும் விவாதங்களும் தேடல்களும் முனைப்புகளும் கணக்கிலடங்காது. அரசும் நாடாளுமன்றமும் மாற்றிமாற்றிப் பந்தாடிய வரலாறும் உண்டு.
நாடு முழுக்கவும் தேவையில்லாமல் இந்த நியாயமற்றச் செயல்களைத் தாங்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அரசு நினைக்கும்போது, அவசரத்தைக் கருதிச் சட்டமியற்ற வழிசெய்யும் அரசியல் சட்டத்தின் 123-வது பிரிவு, மக்களுடைய தேவைக்காகவும் பயன்பட வேண்டும். நாம் தேர்தலை நெருங்கிக்கொண்டிருப்பதால் அவசரச் சட்டம் கொண்டுவருவது சரியாக இருக்காது என்று அரசியல் நோக்கில் பதில் சொல்வது, மக்களுக்கு அநீதி இழைப்பதாகும். குறைதீர் மசோதாவை நிறைவேற்றாததும் கணக்கிலடங்காத மக்களுக்குப் பெருத்த இழப்பாகும்.
அவசரச் சட்டம் கோருகிற அதே வேளையில் இது நிரந்தர வழிமுறையல்ல என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அரசு இயற்றும் ஆணைகள் மாறலாம் அல்லது அப்படியே தொடரும்; ஆனால், அவசரச் சட்டமானது நிரந்தரமானது அல்ல, நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்காக வரும், அப்போது விவாதம் நடைபெறும். இப்போது அவசரச் சட்டங்கள் இயற்றப்பட்டாலும் 16-வது மக்களவையின் பரிசீலனைக்கு அவை வரும்.
ஆக, மக்களுக்காகச் செயல்பட வேண்டிய நாடாளுமன்றம் முற்றிலுமாக முடங்கும்போது மக்களுக்காக அவசரச் சட்டங்கள் இயற்றப்படுவதில் என்ன தவறு இருக்க முடியும்?
© ‘தி ஹிந்து' (ஆங்கிலம்), தமிழில்: சாரி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT