Published : 11 Dec 2013 12:00 AM
Last Updated : 11 Dec 2013 12:00 AM
உலகத்தில் எங்கு பார்த்தாலும் நிறைந்துகிடக்கும் லாவண்யங்களைத் தமிழர்கள் கவனிப்பது கிடையாது. சனிக்கிழமை சாயங்காலந்தோறும் குளக்கரைகளிற்போய்க் கருடன் பார்ப்பதற்கென்றால் நம்மவர்கள் கூட்டங்கூட்டமாக ஓடுகிறார்கள். ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே தோன்றும் அதிசயங்களைப் பார்க்க ஒருவன்கூடப் போகிறதில்லை. அப்போது வானத்திலே இந்திரஜால மஹேந்திர ஜாலங்களெல்லாம் நடக்கின்றன. இந்த க்ஷணமிருந்த தோற்றம் அடுத்த க்ஷணமிருப்பதில்லை. உலகத்திலுள்ள திரவிய முழுவதையும் செலவிட்டு வர்ணக்காட்சிகள் ஏற்படுத்திப் பார்ப்போமானாலும், அது ஸூர்யாஸ்தமன காலத்தில் வானத்திலே நாம் பொருட்செலவில்லாமல் பார்க்கக்கூடிய காட்சிகளிலே கோடியிலொரு பங்குகூடக் காணாது. வாண வேடிக்கைகள் பார்க்க ஒரு செல்வன் பதினாயிரக்கணக்கான திரவியம் செலவிடுகிறான். அவனது செல்வத்தினாலன்றோ இந்தக் காட்சி சுலபமாகிறதென்று அதைப் பார்த்து ஆயிரம் ஏழைகள் பெருமூச்செறிகிறார்கள். ஸஹோதரா, ஸூர்யாஸ்தமனத்தின் விநோதங்களைச் சென்றுபார். ஸூர்யனைப் பார்த்தால் கண்ணுக்குக் கெடுதியென்று குருடர் நம்பிக்கையைப் பொருட்டாக்காதே. ஸூர்யனைப் பார்ப்பது பாவமென்று சொல்லும் மூடர் சாஸ்திரத்தைக் கண்கொண்டு பார்க்காதே.
நமது நாட்டில் வேதகாலத்து ரிஷிகள் பிரகிருதியின் சௌந்தர்யங்களைக் கண்டு மோஹித்துப் பரமானந்தமெய்தியவர்களாய் பல அதிசயமான பாடல்கள் பாடியிருக்கிறார்கள். பிரகிருதியின் அழகைக் கண்டு பரவசமெய்தி, காளிதாசன் முதலிய பெருங்கவிகள் அற்புதக் கவிதைகள் செய்திருக்கின்றனர். இக்காலத்திலேதான் இந்தத் துரதிர்ஷ்டநிலை கொண்ட நாட்டில், வானம் பார்த்தறியாத குருடர்களெல்லாரும் கவிகளென்று சொல்லி வெளிவருகிறார்கள்.
ஸூர்யாஸ்தமனத்தின் அற்புத ஸௌந்தர்யங்களை எழுதிப் பிறர் மனதில் படும்படிசெய்வது சாத்தியமில்லை. நேரிலே கொண்டுகாட்டினாலும், பலருக்கு ஆரம்பத்திலே கண் கூசுவதுதான் அர்த்தமாகுமேயல்லாமல், விஷயம் தெரியாது. ஸஹோதரா, நீயாகவேபோய்ப் பல தினம் அடுத்துப் பார்க்க வேண்டும். பிறகுதான் உனக்கு அந்தத் தெய்வக்காட்சி சிறிதுசிறிதாக விளங்கும். ஸூர்யோதயத்திலேயும் ஸூர்யாஸ்தமனத்திலும் வானத்தில் நடக்கும் இந்திரஜாலக்காட்சியில் க்ஷணந்தோறும் புதிய புதிய விநோதங்கள் மாத்திரமேயன்றி இன்னுமொரு விசேஷமுண்டு. நேற்றிருந்ததுபோல இன்றைக்கிராது. இன்று இருப்பதுபோல நாளையிராது. தினந்தோறும் வெவ்வேறு வியப்புக்கள், வெவ்வேறு உலகங்கள், வெவ்வேறு மஹிமைகள், வெவ்வேறு கனவுகள், வெவ்வேறு ஆனந்தங்கள், வெவ்வேறு அநிர்வசனீயங்கள்.
சில தினங்களின் முன்பு ஓர் மாலைப்பொழுதினில் நான் கண்ட அதிசயங்களை ஒருவாறு இங்கு குறிப்பிடுகிறேன். அடிவானத்தில் ஸூர்யகோளம் தகதகவென்று சுழன்றுகொண்டிருந்தது. இருபது கோடி மின்னல்களை எடுத்து ஒரு சக்கரமாக வார்த்துச் சுழற்றுவதுபோலிருந்தது. ஆரம்பத்திலேதான் கண்கூசும். சிறிதுநேரம் உற்றுநோக்கிக்கொண்டிருந்தால், பிறகு கண்கூச்சம் தீர்ந்துபோய்விடும். இரண்டு வட்டத்தகடுகள் ஒன்றின்மேலொன்று சுழலும். கீழேயிருப்பது சுத்தமான மின்வட்டம். மேலே மரகத வட்டம். பச்சை வர்ணம்! அற்புதமான பசுமை!
பச்சைத்தகடு பின்புறத்திலிருக்கும் மின்தகட்டை முழுதும் மறைத்துக்கொண்டிருக்கும். ஆயினும், இடையிடையே பின்னுள்ள வட்டத்தின் வயிரக்கிரணங்கள் கண்மீது பாயும்.
பார்! ஸூர்யனைச்சுற்றி மேகங்களெல்லாம் தீப்பட்டெரிவதுபோலத் தோன்றுகின்றது! ஆஹா! என்ன வர்ணங்கள்! எத்தனைவித வடிவங்கள்! எத்தனை ஆயிரவிதமான கலப்புகள்! அக்கினிக்குழம்பு! தங்கம்காய்ச்சிவிட்ட ஓடைகள்! எரிகின்ற தங்கத் தீவுகள்!
நீல ஏரிகள்! கரும் பூதங்கள்! எத்தனை வகை நீலம்! எத்தனைவிதச் செம்மை! எத்தனைவகைப் பசுமை! எத்தனைவகைக் கருமை! நீல ஏரியின் மீது மிதக்கும் தங்கத் தோணிகள்! எரிகின்ற தங்கஜரிகைக்கரைபோட்ட கரிய சிகரங்கள்! தங்கத் திமிங்கலங்கள் மிதக்கும் கருங்கடல்! எங்கு பார்த்தாலும் ஒளித்திரள், வர்ணக் களஞ்சியம். போ, போ; என்னால் அதை வர்ணிக்க முடியாது.
(பாஞ்சாலி சபதத்தில் வரும் மாலை வருணனைப் பாடல்களைப் பற்றி ‘கர்மயோகி’ பத்திரிகையில் பாரதி எழுதிய விளக்கம் இது)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT