Published : 19 Oct 2013 11:11 AM
Last Updated : 19 Oct 2013 11:11 AM
தொழிற்சங்க தலைமையில் வெளியார்களை அனுமதிக்காதவாறு சட்டத்தைத் திருத்த உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வழக்கில் மத்திய, மாநில அரசுகள் கட்சிகளாக இல்லாதபோதும் இப்படிப்பட்ட கருத்தை நீதிபதி தெரிவித்திருப்பது ஆச்சரியமளிக்கிறது. வழக்கில் எழுவினாவாக பிரச்சினையில் தெரிவிக்கப்படும் தனிப்பட்ட கருத்துகளை ‘தீர்ப்பினிடைத் தெரிவிக்கும் சட்டமுறை மதிப்பில்லாத கருத்து’ (obiter dicta) என்று கூறுவர். இருப்பினும் உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரது கருத்து என்பதால் அதன் சாரத்தை ஆராயலாம்.
நாட்டிலேயே முதல் தொழிற்சங்கமாக ‘மெட்ராஸ் லேபர் யூனியன்’ உருவானது சுவையான வரலாறு. பக்கிங்காம் - கர்நாடிக் ஆலை (பின்னி மில், பெரம்பூர்) தொழிலாளர்களை அதன் நிர்வாகம் கடுமையாக சுரண்டியது. சூரிய உதயத்துக்கு முன்பு மில்லுக்கு சென்று, அஸ்தமனத்துக்குப் பிறகு வீடு திரும்பியதாகவும் தன் பிள்ளையே முகம் தெரியாமல் தன்னை யாரென்று அம்மாவிடம் கேட்டதாகவும் ஒரு தொழிலாளி தனது நினைவுக் குறிப்பை சங்கத்தின் விழா மலரில் பதிவு செய்திருந்தார். சன்மார்க்க சங்க போதனைகளை இரவு நேரங்களில் அவர்களுக்கு அளித்த தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களது வேலை நிலைமைகளைக் கேட்டு அதிர்ச்சியடைந்து பி.பி.வாடியாவையும் (பார்சி வழக்கறிஞர்), அன்னி பெசன்ட் அம்மையாரையும் பெரம்பூருக்கு அழைத்து வர, அவர்களது முயற்சியில் உருவானதே மெட்ராஸ் லேபர் யூனியன்.
தொழிற்சங்கத் தலைமையின் கீழ் வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் மில் நிர்வாகம் வழக்கு தொடர்ந்து மிகப் பெரும் தொகையை நஷ்டஈடாகப் பெற்றது. தொகையை தொழிற்சங்கத் தலைவர்களிடமிருந்து மீட்க முயன்றபோது தேசிய அளவில் எழுச்சி ஏற்பட்டது. தொகையைக் கட்ட முடியாத சங்கத் தலைவர் சக்கரைச் செட்டியார் (இவரும் வக்கீல்தான்) உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் எவரது மனதையும் நெகிழ வைக்கும்.
“சுவிசேஷ ஊழியராக வாரம் 10 ரூபாயில் வாழ்க்கை நடத்தும் நான் போட்டுள்ள உடைகளும், சில மாற்றுடைகளும் மட்டுமே என் சொத்து. அதை வேண்டுமானால் ஏலமிட்டு வரும் பணத்தை மில் நிர்வாகத்துக்கு நீதிமன்றம் கொடுத்துக்கொள்ளலாம். அப்படி செய்தாலும்கூட, கட்டியிருக்கும் கோவணத்துடன் தொடர்ந்து போராடுவேன்” என்று அவர் கூறினார்.
பின்னி மில் போராட்டத்துக்குப் பின்னர்தான் 1926ம் வருடம் தொழிற்சங்கச் சட்டம் காலனி ஆதிக்கத்தால் இயற்றப்பட்டது. அச்சட்டத்தில் சங்கத்துக்கு வெளியாள் தலைமை அனுமதிக்கப்பட்டது. நாம் சுதந்திரம் அடைந்த பிறகு இயற்றப்பட்ட அரசியலமைப்புச் சட்டத்திலும் சங்கம் அமைக்கும் உரிமை அடிப்படை உரிமையாக்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களுக்கு வெளியாள் தலைமை என்பது இன்றியமையாதது.
புகழ்பெற்ற வழக்கறிஞர்களான பாரிஸ்டர் வி.ஜி.ராவ், மோகன் குமாரமங்கலம் எம்.ஆர்.வெங்கட்ராமன், ஆர்.குசேலர், கே.எஸ்.ஜானகிராமன், டி.பென்வால்டர் இவர்களெல்லாம் தொழிற்சங்கத் தலைவர்களாக சிறப்பாக செயல்பட்டு தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுத்தனர். வழக்கறிஞர்களாகவும் தொழிற்சங்கத் தலைவர்களாகவும் இருந்த வி.வி.கிரி, ஆர்.வெங்கட்ராமன் இருவரும் குடியரசுத் தலைவரானார்கள்.
இன்றும்கூட மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர்.பிரசாத், வி.பிரகாஷ் பல தொழிற்சங்கங்களில் கௌரவத் தலைவர்களாகி உழைக்கும் வர்க்கத்துக்கு சேவைபுரிகின்றனர்.
தொழிலாளர் சட்டங்களை சீரமைக்க ஆலோசனை வழங்க நீதிபதி கஜேந்திர கட்கர் தலைமையேற்ற தேசிய லேபர் கமிஷனும் (1969), ரவீந்திர வர்மா தலைமையேற்ற 2வது தேசிய லேபர் கமிஷனும் (1989) தொழிற்சங்கத்தில் வெளியாள் தலைமை கூடாது என்ற கருத்தை நிராகரித்தனர்.
9.1.2002ல் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட தொழிற்சங்க சட்டத்திருத்தமும் இவ்வாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இன்று மிகவும் சிக்கலாகிக் கொண்டிருக்கக்கூடிய தொழிற்சங்கப் பிரச்சினைகளைத் தீர்க்க வெளியாள் தலைமை என்பது காலத்தின் கட்டாயம். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT